Wednesday, January 18, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – சிற்சபை


ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  சிற்சபை

வார்த்தைசிற்சபை

பொருள்

·         சிதம்பரநடனசபை. (சிற்றம்பலம்)
·         அக்கினி இருக்கும் புருவமத்தியே ஆன்மஸ்தானமாகிய ”மணியாடும் மன்று எனப்படும் சிற்சபை. சிற்சபை = சிற்+சபை சிற் என்றால் அறிவு என்றும், சபை என்றால் விளங்கும் இடம் என்றும் பொருள் படும். அறிவு விளங்கும் இடம்.
·         16வது படி நிலை ( சுத்த சிவ வெளிகள் )

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
     நினைத்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
          நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு
     நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
          நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
     வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
          மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
     புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
          பொற்சபையில் *சிற்சபையில்* புகுந்தருணம் இதுவே.

திருவருட்பா, ஆறாம் திருமுறை - வள்ளலார்

 உலகியல் வாழ்வில் இருக்கின்ற நன்மக்களே! பலகாலும் நினைந்து பலவகையாலும் உணர்ந்து மனம் நெகிழ்ந்து அன்பு மிக நிறைந்து அதனால் உள்ளத்திலிருந்து ஊற்றுப்போல் பெருகும் கண்ணீரால் உடம்பு நனைந்து அருளார் அமுதமே, நல்ல அருட் செல்வமே; ஞான நடம் புரிகின்ற அரசர் பெருமானே, என்னுடைய உரிமை நாயகனே என்று சொல் மாலைகளைத் தொடுத்து நாம் வழிபடுதற்கு வருவீர்களாக; அவ்வழிபாட்டால் நாம் மரண பயம் இல்லாத பெருமை பொருந்திய வாழ்வில் இன்பமுற வாழலாம். நான் இதனை இல்லது புனைந்து உரைக்கின்றேன் இல்லை; பொய் சொல்லவுமில்லை; சத்தியமாகச் சொல்லுகின்றேன்; பொன் வேய்ந்த சபையிலுள்ள ஞான சபையில் சிவபெருமான் எழுந்தருளும் தருணம் இதுவே என அறிவீராக.

2.
     தெள்ளமு தானான்என்று ஊதூது சங்கே
          *சிற்சபை* அப்பன்என்று ஊதூது சங்கே
     உள்ளம் உவந்தான்என்று ஊதூது சங்கே
          உள்ள துரைத்தான்என்று ஊதூது சங்கே.

திருவருட்பாவள்ளலார்

ஞான சபைக்குத் தலைவனாகிய அவன் என்னுடைய ஞான சபையும் ஆயினான் என்று ஊதுவாயாக; என் மனத்தின்கண் எழுந்த எண்ணங்களைக் கண்டு மகிழ்ந்தான் என்று ஊதுவாயாக; என் மனத்தில் நிலைத்த எண்ணங்களை விரும்பினான் என்று ஊதுவாயாக; என் உள்ளத்தில் நிகழ்ந்தது நிகழ்ந்தபடியே உரைக்கின்றான் என்று சங்கே ஊதுவாயாக.


(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதால் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

No comments:

Post a Comment