Monday, February 1, 2016

சைவத் திருத்தலங்கள் 274 – திருகாளத்தி

மூலவர், சுயம்பு - தீண்டாத் திருமேனி. கங்கைநீர் மட்டும் படுமாறு அமைப்பு
மிகவும் உயரமான சிவலிங்கத் திருமேனி. அடிப்பாகம் -  சிலந்தி வடிவம், மத்தியில் யானையின் இருதந்தங்கள், வலப்பக்கம் கண்ணப்பர் கண் அப்பிய வடு,  மேற்புறம் ஐந்து தலை நாகம் போலவே காட்சி அமைப்பு. ஆவுடையார் பிற்காலத்தில் கட்டப்பட்டது. சுவாமி மீது கரம் தீண்டாமல் இருக்க இருபத்தேழு நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்ட தங்கக் கவசம். அகழி அமைப்புடைய  கருவறை  
அம்பாள் - ஞானப்பூங்கோதை நின்ற திருக்கோலம்; திருவடியில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 'அர்த்த மேரு '. அம்பாள் இருப்பு ஒட்டியாணத்தில் 'கேது ' உருவம்.
அகத்தியர் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு அருள் பெற்ற தலம் - பாதாள விநாயகர் சந்நிதி
பஞ்சபூத தலங்களுள்  - வாயுத் தலம் ஆதலால் மூலவர் எதிரில் கதவருகில் உள்ள இரு தீபங்கள் காற்றினால் மோதப்பெற்றதுபோல் எப்போதும் அசைந்து கொண்டு
சுவர்ணமுகி எனப்படும் பொன்முகலி ஆறு வடக்கு முகமாகப் பாய்ந்து ஓடுவதால் உத்தரவாகினி
நக்கீரர் இங்கு தங்கி பொன்முகலி  நதியில் நீராடி இறைவனைத் தொழுது வெப்பு நோயிலிருந்து முழுமையாக நீக்கம் பெற்றத் தலம்
ராகு, கேது க்ஷேத்ரம்
வேடனான (திண்ணன்) கண்ணப்பருக்கு அருள் காட்சி கிடைத்தத் தலம்
சிலந்தி - பாம்பு - யானை ஆகிய மூன்றும் வழிபட்டுப் பேறு பெற்ற சிறப்புடைய தலம்
சண்டேசுவரர் சந்நிதி - மூலவர் பாணம் (முகலாயர் படையெடுப்பின்போது மூல விக்ரகங்களையும்,செல்வத்தையும் காப்பாற்றுவதன் பொருட்டு அமைக்கப்பட்டது)
கோயில் அமைப்பு -  அப்பிரதக்ஷண வலமுறை(வலமிருந்து இடம்)
இரு கொடி மரங்கள் -  ஒன்று கவசமிட்டது; மற்றொன்று ஒரே கல்லால் ஆன 60 அடி உயரமுள்ள கொடி மரம்
சர்ப்ப தோஷம் நீங்கும் தலம்
ஸ்படிகலிங்கம் - ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்தது
'இரண்டு கால் மண்டபம் '  - 2 கால்களை நிறுத்தி சுவரோடு சேர்த்துக் கட்டப்பட்ட சிறிய மண்டபம் சுவரோரமாக
சொக்கப்பனை கொளுத்தி, எரிந்தவற்றை அரைத்து  (ரக்ஷை) சுவாமிக்கு கறுப்புப் பொட்டாக இடும் வழக்கம்
பிரதான கோபுரம் 'தக்ஷிண கோபுரம்'
சம்பந்தர், இங்கிருந்தவாறே கயிலாயம், கேதாரம், கோகர்ணம், திருப்பருப்பதம், இந்திரநீலப்பருப்பதம் முதலிய தலங்களைப் பாடித் தொழுதார்.
அப்பர் காளத்தி வந்து தொழுதபோது வடகயிலை நினைவு வர, கயிலைக் கோலம் காண எண்ணி, யாத்திரையைத் தொடங்கினார். 
சுந்தரர் இறைவனைப் பாடி, இங்கிருந்தவாறே திருப்பருப்பதம், திருக்கேதாரம் முதலிய தலங்களைப் பாடிப் போற்றினார்.
நதி-நிதி-பர்வதம். நதி என்பது சந்திரகிரிமலையில் தோன்றிப் பாய்ந்து வருகின்ற சுவர்ணமுகி-பொன்முகலி ஆறு, நிதி - அழியாச் செல்வமான இறைவி, இறைவன், பர்வதம் - கைலாசகிரி.
நம் ஆறு ஆதாரங்களில்  விசுத்தி(இதயம்) திருகாளத்தி என்று பரஞ்சோதி முனிவரால் குறிப்பிடப்படும் இடம்




தலம்
சீகாளாத்தி, திருகாளாத்தி, காளஹஸ்தி
பிற பெயர்கள்
தட்சிண (தென்) கயிலாயம், கைலாசகிரி, கண்ணப்பர் மலை, அகண்டவில்வாரண்யம், பாஸ்கரக்ஷேத்திரம்
இறைவன்
ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி, காளத்திநாதர், குடுமித்தேவர்
இறைவி
ஞானப்பிரசுன்னாம்பிகை, ஞானப் பூங்கோதை
தல விருட்சம்
மகிழம்
தீர்த்தம்
ஸ்வர்ணமுகி, பொன்முகலியாறு.
விழாக்கள்
மாவட்டம்
சித்தூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 8.00 மணி வரை,

அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்
காளஹஸ்தி - அஞ்சல் - 517 644
சித்தூர் மாவட்டம் - ஆந்திர மாநிலம்.
வழிபட்டவர்கள்
பாம்பு, யானை, சிவகோசரியார், கண்ணப்பர் ,கிருஷ்ணதேவராயர், சிலந்தி,  அவருடைய மனைவி, சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர், சப்தரிஷிகள், சித்திரகுப்தர், யமன், தருமர், அர்ஜுனன், வியாசர்,முசுகுந்தன், பரத்வாஜ மகரிஷி,
பாடியவர்கள்
வீரைநகர் ஆனந்தக் கூத்தர் - திருக்காளத்திப் புராணம்; கருணைப் பிரகாசர், ஞானப் பிரகாசர், வேலப்ப தேசிகர் ஆகிய மூவரும் சேர்ந்து பாடிய தலபுராணம், திருஞான சம்மந்தர் - 2 பதிகங்கள், திருநாவுக்கரசர் - 1 பதிகம், சுந்தரர் - 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
ஆந்திரா மாநிலத்தில் சித்தூர் மாவட்டம். ரேணிகுண்டா - கூடூர் இரயில் மார்க்கத்தில் உள்ள இருப்புப்பாதை நிலையம். திருப்பதியிலிருந்து 40 கி. மீ. தொலைவு
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 251 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   19 வது தலம்.

ஞானப் பூங்கோதை உடனாகிய ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி


புகைப்படம் : தினமலர்

பாடியவர்                திருநாவுக்கரசர்    
திருமுறை               6     
பதிக எண்               08   
திருமுறை எண்          7    

பாடல்

கரியுருவு கண்டத்தெங் கண்ணு ளான்காண்              
கண்டன்காண் வண்டுண்ட கொன்றை யான்காண்
எரிபவள வண்ணன்காண் ஏகம் பன்காண்   
எண்டிசையுந் தானாய குணத்தி னான்காண்
திரிபுரங்கள் தீயிட்ட தீயா டிகாண்     
தீவினைகள் தீர்த்திடுமென் சிந்தை யான்காண்
கரியுரிவை போர்த்துகந்த காபா லிகாண்     
காளத்தி யானவனென் கண்ணு ளானே.

பொருள்

கரிய நிறமுடைய கண்டத்தை உடையவனாகவும், எனது விழிகளுக்குள் இருப்பவனாகவும், (அடியவர்களுக்காக அவர்களின் அன்புக்கு கட்டுப்பட்டு) வரையறைப்பட்டவனாக இருப்பவனாகவும், வண்டுகள் நுகரும் கொன்றைப் பூக்களை சூடியவனாக இருப்பவனாகவும், ஒளி வீச்சுடைய பவள வண்ணனாக இருப்பவனாகவும், ஏகம்பனாக இருப்பவனாகவும், எட்டு திசைகளையும் தன் குணமாக கொண்டவனாக இருப்பவனாகவும், முப்புரங்களையும் தீயினால் எரித்து அவ்வண்ணம் எரித்த பின்னரும் அதில் கூத்து நிகழ்த்துபவனாக இருப்பவனாகவும், எனது தீவினைகளை அழித்து என் சிந்தனையின் இருப்பவனாகவும், யானையின் தோல் உரித்து அதை தனது ஆடையாக அணிந்தவனாக இருப்பவனாகவும், காபால கூத்து ஆடுபவனாக இருப்பவனாகவும் இருக்கும் காளத்தியான் என் கண் உள்ளான்.

கருத்து

·         கரி உருவு-கரிபோன்ற நிறம்; கரிந்த உருவம்
·         'எம் கண் உளான்' - எம்மைப் போன்ற அடியவர் கண்ணில் உள்ளான்
·         கண்டன்-வரையறைப்பட்டவன்
·         எரி பவளவண்ணன்-நெருப்பும் பவழமும் போன்ற நிறமுடையவன்
·         'குணம்' - முற்றும் உணர்தல். இயக்குதலும் தானே எனப் பொருள் பெறப்படும்.
·         தீர்த்திடும்'  -  எச்சம்,  தீர்த்திடுவான்


பாடியவர்            சுந்தரர்        
திருமுறை           7      
பதிக எண்           26        
திருமுறை எண்      8          

பாடல்

நீறார் மேனியனே நிமலாநினை யன்றிமற்றுக்
கூறேன் நாவதனாற் கொழுந்தேயென் குணக்கடலே
பாறார் வெண்டலையிற் பலிகொண்டுழல் காளத்தியாய்
ஏறே யுன்னையல்லால் இனிஏத்த மாட்டேனே.

பொருள்

திருநீறு அணிந்த திருமேனியை உடையவனே, தூயவனே, மிகவும் உயர்ந்தவனே, முதன்மையானவனே, தசை நீங்கிஎலும்பு மாத்திரமாகிய தலை பிச்சை பாத்திரமாக ஏற்று திரிபவனே,எட்டு வகையான குணங்கள் கொண்டவனே அடியேன் உன்னை யறிந்தபின் உன்னையன்றிப் பிறர் ஒருவரைப் போற்றுதலே இலன் ; என் நாவால் ஒன்று செய்வதாயின் , உன்னையன்றி மற்றொரு பொருளைச் சொல்லுதல்தானும் இலேன் ; ஆகவே நீ எனக்கு அருள் செய்தல் வேண்டும்

கருத்து

கொழுந்து - உச்சிக்கண் நிற்பதாகலின்  உயர்ந்த பொருளைகொழுந்து  உவமம்
என் குணக் கடலே  - எட்டு வகையான குணங்களுக்கு உரியவன், சிவன்



Reference

·         'அட்டமாசித்திகள் அணைதரு காளத்தி ' எனச் சிறப்பிக்கப்படும் அற்புதத் தலம்.
·         ‘கயிலை பாதி காளத்தி பாதி ' என்று நக்கீரரால்  பாடப்பட்ட பெருமை உடைய தலம்.



இக் கோயில் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்.

No comments:

Post a Comment