Friday, October 11, 2013

சாக்த வழிபாடும் விஜய தசமியும்

சாக்த வழிபாட்டின் (தேவியை - அம்பாளை) மிக மிக முக்கியமான பண்டிகையாக இந்த நவராத்ரி கொண்டாடப்படுகிறது.

மற்ற வழிபாடுகள் போலவே சாக்த வழிபாட்டிலும் பல வழிமுறைகளும் பல நிலைகளும் உண்டு. (உ.ம் வாரகி உபாசனை முறைகள், ஸ்ரீவித்யா உபாசனை முறைகள்).

புரட்டாசி மாதம் வளர்பிறை முதலாவதாக ஒன்பது நாட்களை நவராத்திர்களாக கொண்டாடுகிறோம்.

அரக்கர்களை வென்று வாகை சூடிய நாள் என்பதால் விஜய தசமிக்கு சிறப்பு.

வனவாசம் முடிந்து, அக்ஞாத வாசம் (மறைந்திருந்த காலமும் முடிந்து)  தங்களது படைக்கருவிகள் அனைத்தையும் வன்னி மரத்திலிந்து அர்ஜுனனும் மற்றவர்களும் எடுத்தது விஜய தசமி அன்று.

இவ்விடத்தில் அர்ஜுனன் துர்க்கையை உபாசனை செய்கிறான்.

மகா பாரதப் போரில் வெல்ல துர்க்கையை உபாசனை செய்யுமாறு கிருஷ்ணன் பணிக்கிறான். அப்போதும் அர்ஜுனன் துர்க்கையை உபாசனை செய்கிறான்.

இரண்டுமே ஒரு தெய்வத்தை பற்றியது என்றாலும் வெவ்வேறு மந்திரங்கள்.

பல ரிஷிகளும் முனிவர்களும் சாக்க வழிபாட்டிற்குப் பிறகே உன்னத நிலையை அடைந்திருக்கிறார்கள்.

லலிதா சகஸ்ரநாமமும் ஸ்ரீ மாதா என்றே துவங்குகிறது.

அன்னையின் கருணை அளப்பரியது. 

Thursday, October 10, 2013

கடவுட் கொள்கை - வாதங்கள் - 4

துக்கடா..
நண்பன் 1 : நான் இன்றைக்கு உன்னிடம் விவாதிக்க வந்திருக்கிறேன்.
நண்பன் 2 : எதைப் பற்றி?
நண்பன் 1 : கடவுள் உண்டா இல்லையா என்று?.
நண்பன் 2 : சரிடா. உன் பெயர் என்ன.
நண்பன் 1 : கணபதி.
நண்பன் 2 : ஆங்கிலத்தில் எப்படி எழுதுவாய்.
நண்பன் 1 :  ganappathi
நண்பன் 2 : பேர் ஏண்டா 37ல வரமாதிரி வச்சிருக்க.
நண்பன் 1 : நான் உங்கிட்ட அப்புறமா பேசறேன்.

*****
திருமந்திரம்

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்துள் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்துள் மறைந்து பார்முதல் பூதம்.

ஒரு அழகான யானை இருகிறது. சில நேரம் கழித்து அது யானை அல்ல சிலை என்ற உணர்வு வருகிறது. அது எதனால் செய்யப்பட்டிருக்கிறது என்பது மறைந்துவிடுகிறது. அழகான யானை என்பதே நினைவில் நிற்கிறது. அதைப்போலவே தனித்தன்மையான ஒப்புவுயர்வு அற்ற என்ற பொருள்படும் பரம் என்பதை பூதங்கள்(பஞ்சேந்திரியங்கள்)  மறைத்துவிடுகின்றன. அவைகளுக்குள்ளும் பரம் என்பது நிறைந்திருகிறது.

முடிவுரை 1 :
கண்டவர், விண்டிலர்..
விண்டவர் கண்டிலர்.
முடிவுரை 2:
இறை அனுபவம் அறியக் கூடியது அல்ல. உணரக் கூடியது.

கடவுட் கொள்கை - வாதங்கள்-3 
கடவுட் கொள்கை - வாதங்கள்-2
கடவுட் கொள்கை - வாதங்கள்-1


Friday, October 4, 2013

கடவுட் கொள்கை - வாதங்கள்-3

கதை - 1
முன்னொருகாலத்தில் ஒரு ஆசிரமம் இருந்தது. அதில் ஒரு குருவும் சில சீடர்களும் இருந்தார்கள்.
பயிற்சிக்காலம் முடிந்தது.

குரு         : உங்கள் பயிற்சி முடிந்தது.
மாணவன் : உங்களை விட்டுப் பிரிவது வருத்தம் தருவதாக இருக்கிறது.

குரு         : காலம் எல்லாவற்றையும் மாற்றும் வல்லமை உடையது.
மாணவன் : ......

குரு         : இன்று இரவு உங்களுக்கு ஒரு வாழைப் பழம் தருவேன். அதை யாருக்கும் தெரியாமல் உண்டுவிட்டால் உங்கள் அனைத்து பயிற்சிகளும் முடிவுற்று விடும்.

குரு         : நீ எங்கு உண்டாய்.
மாணவன்  : கிணற்றடியில், அப்போது யாரும் இல்லை.

குரு         : நீ எங்கு உண்டாய்.
மாணவன் : மரத்தடியினில் அப்போது யாரும் இல்லை.

குரு         : நீ எங்கு உண்டாய்.
மாணவன் : ஆற்றங்கரை அருகினில். அப்போது யாரும் இல்லை.

குரு         : நீ எங்கு உண்டாய்.
மாணவன் : உண்ணவில்லை.

குரு         : ஏன்?

மாணவன் : நீங்கள் யாருக்கும் தெரியாமல் உண்ணச் சொன்னீர்கள். கடவுள் எல்லா இடங்களிலும் இருப்பவர் என்றும் நீங்கள் தானே பயிற்றுவித்தீர்கள். அப்படி இருக்க நான் எப்படி யாருக்கும் தெரியாமல் உண்ணமுடியும்.
குரு         : நீயே என் பிரதான சீடன்.

எனது தோழமை குறிப்பிட்டதைப் போல் இருப்பு/இல்லை என்பதை பல வழிகளில் விளக்க முற்படலாம்.

ஓளி என்பது இருளின் மறைவு
வெப்பம் என்பது குளிரின் மறைவு

2907 -
உளன் அலன் எனில் அவன் உருவம் இவ் வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் வருவுகள்
உளன் என விலன் என இவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமை யொடு ஒழிவிலன் பரந்தே

அவன் இருக்கிறான் என்றாலும், இல்லை என்றாலும்  அனைத்தும் 'அவன்' என்ற ஒன்றில் அடங்கி இருக்கிறது. அஃதாவது ஸ்தூலமாகவும், சூட்சமாகவும் இருக்கிறான் என்பதே பொருள். இஃது அவனது குணம் ஆகும்.

பலவித வேதங்களும், வேதாந்தங்களும் ஒரு பொருளையே குறிப்பிடுகின்றன்.(உ.ம். ப்ரம்மம், புருடன்)

இதை சிறிது விளக்க முற்படுவோம்.

நாடக்காட்சி ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. அதில் சில அழுகைக் காட்சிகள் வருகின்றன. மனதை உருக்குவதாக இருப்பின் நாமும் அழுகிறோம். எனில் காட்சி மற்றும் பிம்பம் என்ற வேறுபாடு அன்றி மனம் ஒரு நிலை கொள்கிறது.

சாந்தி மந்திர கூற்றுப்படி அவர் நம் இருவரையும் காக்கட்டும்.

மீண்டும் தொடர்வோம்.

கடவுட் கொள்கை - வாதங்கள் -2
கடவுட் கொள்கை - வாதங்கள் -1 

Tuesday, October 1, 2013

கடவுட் கொள்கை - வாதங்கள்-2

இக்கட்டுரையின் படி இரு பிரிவுகள் மட்டும் விவரிக்கப்படுகின்றன. கடவுள் மற்றும் கடவுள் மறுப்புக் கொள்கை.

இதில் முக்கியமாக உலகாதாயம் (சார்வாகம்) மட்டும் விவாதப் பொருளாகக் கொள்ளப்படுகிறது. ஏனைய பிரிவுகளான ஆசீவகம், பௌத்தம் மற்றும் சமணம் ஆகியவை விவாதத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

இதுவும் தவிர வேத தரிசனங்களான நியாயம் ,வைசேடிகம் , சாங்கியம்,யோகம்,மீமாம்சை (பூர்வ மீமாம்சை),வேதாந்தம் (உத்தர மீமாம்சை) ஆகியவைகளைப் பற்றிய விவாதங்களும் இதில் இல்லை.

மனிதன் 1 : நீ யார்?
மனிதன் 2 : மனிதன்
மனிதன் 1 : நீ எந்த கொள்கையை உடையவன்.
மனிதன் 2 : கடவுள் மறுப்புக் கொள்கை என்பதே என் நோக்கம்.
மனிதன் 1 : எதை வைத்து இக் கொள்கையை கூறுகிறாய்.
மனிதன் 2 : கடவுள் யாவருக்கும் பொது தானே.
மனிதன் 1 : ஆமாம்.
மனிதன் 2 : அப்படி எனில் நீ கண்ட கடவுளை நானும் காண வேண்டும் தானே.
மனிதன் 1 : மௌனம்...
மனிதன் 2 : என்ன பதில் இல்லையா?
மனிதன் 1 : டெல்லி சென்றிருக்கிறாயா?
மனிதன் 2 : இல்லை.
மனிதன் 1 : நீ போகவே இல்லை. கண்ணால் கண்டதும் இல்லை. ஆனால் டெல்லி என்றொரு இடம் இருப்பதை எப்படி நம்புகிறாய்.
மனிதன் 2 : மௌனம்...
மனிதன் 1 : யோசித்து பதில் அளி. அவசரம் இல்லை.

*************************************************************
குழந்தை : என்ன அப்பா இந்த புத்தகம்.
தந்தை    : இது முப்பரிமாண புகைப்படங்கள் கொண்ட புத்தகம்.
குழந்தை : அப்படீன்னா,
தந்தை    : இந்த புகைப்படத்தை எல்லாம் உற்று கவனித்தால் ஒரு படம் தெரியும்.
குழந்தை : எப்படி
தந்தை    : இந்த படத்தை கண்ணுக்கு சிறிது தூரத்தில் வைத்துக் கொள். உற்று கவனி.
குழந்தை : சரி.
தந்தை    : என்ன தெரிகிறது?
குழந்தை : மேஜையும் அதில் பூச்செண்டும்.
தந்தை    : மிகச் சரி.
நண்பர்    : என்னடா ஒன்னும் தெரியல.
தந்தை    : நீதானட, கண்ணால் காண்பது மெய் என்று சொன்னாய். அப்புறம் ஏன் உனக்கு தெரியல.

கடவுட் கொள்கை - வாதங்கள்-1

இதன் தொடர்ச்சி இன்னும் சில நாட்களில்..