Tuesday, January 31, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - போற்றுதல்

ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  போற்றுதல்

வார்த்தை :  போற்றுதல்
பொருள்

·         வணங்குதல்
·         துதித்தல்
·         பாதுகாத்தல்
·         வளர்த்தல்
·         பரிகரித்தல்
·         கடைப்பிடித்தல்
·         உபசரித்தல்
·         விரும்புதல்
·         கருதுதல்
·         மனத்துக்கொள்ளுதல்
·         கூட்டுதல்.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
எல்லாம் சிவனென்ன நின்றாய் போற்றி
    எரிசுடராய் நின்ற இறைவா போற்றி
கொல்லார் மழுவாட் படையாய் போற்றி
    கொல்லுங்கூற் றொன்றை யுதைத்தாய் போற்றி
கல்லாதார் காட்சிக் கரியாய் போற்றி
    கற்றா ரிடும்பை களைவாய் போற்றி
வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி
    வீரட்டங் காதல் விமலா போற்றி

தேவாரம் - 6ம் திருமுறை - திருநாவுக்கரசர்


எல்லாப் பொருள்களும் சிவனுடைய தொடர்புடையன என்று கூறுமாறு எல்லாப் பொருள்களிலும் கலந்திருப்பவனே (ஸர்வ வியாபி) ! தீ கதிர் மதியம் ஆகி நிற்பவனே! கொலைத் தொழிலைச் செய்யும் மழு என்ற படைக்கலம் ஏந்தியவனாக இருந்தாலும் கொல்லாதவனே! உயிர்களை உடல்களிலிருந்து பிரிக்கும் கூற்றுவனை உதைத்தவனே! அனுபவப் பொருளை ஞானதேசிகர்பால் கேட்டு அறியாதவருடைய மானதக் காட்சிக்கு அரியவனே! முறையாகக் குருவிடம் உபதேசம் பெற்றவர்களுடைய துயரை நீக்குபவனேஉன்னைப் போற்றுகிறேன்.

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - முரஞ்சுதல்

ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  முரஞ்சுதல்

வார்த்தை :  முரஞ்சுதல்
பொருள்

·         மூப்பு
·         முதிர்தல்
·         முற்றுதல்.
·         வலிபெறுதல்
·         நிரம்புதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
சுரும்பொடு தேனும், வண்டும்,
     அன்னமும், துவன்றி; புள்ளும்,
கரும்பொடு செந் நெல் காடும்,
      கமல வாவிகளும், மல்கி;
பெரும் புனல் மருதம் சூழ்ந்த
      கிடக்கை பின் கிடைக்கச் சென்றார்;
குரும்பை நீர் *முரஞ்சும்* சோலைக்
      குலிந்தமும், புறத்துக் கொண்டார்.

கம்பராமாயணம்


பொன்வண்டு, தேன்வண்டு, கருவண்டு என்னும் பலவகையான வண்டுகளும் அன்னப் பறவைகளும் நெருங்கி  நாரை முதலான ஏனைய பறவைகளும் கரும்புகளும் செந்நெற் பயிர்களும் தாமரைத் தடாகங்களும் நிறைந்து; மிக்க நீர்வளங் கொண்டமருதநிலம் சூழ்ந்துள்ள  இடங்கள் தம் பின்னால் கிடக்கும்படி அப்பால் கடந்து சென்றனர் அந்த வானரவீரர்கள்; இளநீர்க் காய்கள்; நிரம்பிய தென்னஞ்சோலைகளையுடைய குலிந்த நாட்டையும்;  (தமது) பின்புறத்ததாகும்படி முன்னேறிச் சென்றார்கள்.

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - முசிதல்


ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  முசிதல்

வார்த்தை :  முசிதல்
பொருள்

·         அறுதல்
·         கசங்குதல்
·         களைத்தல்
·         :மெலிதல்
·         அழிதல்
·         குன்றுதல்.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

படிக்கின்றிலை பழநித் திருநாமம், படிப்பார் தாள்
முடிக்கின்றிலை, முருகா என்கிலை, *முசியாமல்* இட்டு
மிடிக்கின்றிலை, பரமானந்தம் மேற்கொள விம்மிவிம்மி
நடிக்கின்றிலை, நெஞ்சமே தஞ்சம் ஏது நமக்கு இனியே?

கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர்

மனமே! பழநியில் எழுந்தருளியுள்ள திருமுருகப்பெருமானின் திருநாமங்களை ஓதுகின்றாயில்லை. பழநி ஆண்டவரது திருநாமங்களை ஓதுகின்ற அடியார்களின் திருவடிகளைத் தலையில் சூடிக் கொள்கின்றாயில்லை. [பரம்பொருளாகிய திருமுருகப்பெருமானை] 'முருகா' என்று அழைக்கின்றாயில்லை. யாசிப்பவர்கள் பசியால் மெலிவடையாமல் இருக்கும் பொருட்டு அவர்களுக்குப் உணவு வழங்கி அதனால் நீ வறியவனாகிவிடவில்லை. பேரின்பம் மிகுதியாக வரும்பொருட்டு விம்மி விம்மி அழுது ஆடுகின்றாயில்லை. இனி நமக்கு அடைக்கலம் தரும் பற்றுக்கோடு எங்கு உள்ளது?

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - இறத்தல்

ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  இறத்தல்

வார்த்தைஇறத்தல்
பொருள்

·         இறுதல்
·         கடத்தல்
·         கழிதல்
·         நெறிகடந்துசெல்லுதல்
·         சாதல்
·         மிகுதல்
·         வழக்குவீழ்தல்
·         நீங்குதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
தொடர்புடைய சொற்கள்
·         வீடுபேறு
·         முக்தி
·         திருவடி சார்பு
·         கைலாச பதவி
·         பரமபதம்

2.
பிறந்தன *இறக்கும்*, *இறந்தன* பிறக்கும்;
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன வுணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்
சிவபெருமானைச் செம்பொனம் பலவனை,
நினைமின் மனனே! நினைமின் மனனே!


பட்டினத்தார்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - தூகுதல்

ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  தூகுதல்

வார்த்தைதூகுதல்
பொருள்

·         குப்பைமுதலியவற்றைக்கூட்டித்தள்ளுதல்
·         திருவலகிடுதல்.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
ஆமாறு உன் திருவடிக்கே அகங்குழையேன் அன்புருகேன்
பூமாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து உரையேன் புத்தேளிர்
கோமான் நின் திருக்கோயில் *தூகேன்* மெழுகேன் கூத்தாடேன்
சாமாறே விரைக்கின்றேன் சதுராலே சார்வானே.

திருவாசகம் - மணிவாசகர்

உன் திருவடிக்கே ஆகுமாறு என் அகம் (மனம்) குழைய மாட்டேன்; அன்பால் உருக மாட்டேன்; பூ மாலை புனைந்து உன்னைப்பற்றி  உயர்வாக சொல்ல மாட்டேன்; உன்னை புகழ்ந்து உரைக்க மாட்டேன்; ஏழு உலகங்களுக்கும் அரசனே, உன்னுடைய கோவிலை பெருக்கி சுத்தம் செய்ய மாட்டேன்; நீர் விட்டு கழுவ மாட்டேன்; உன் கருணையை நினைத்து கூத்தாட மாட்டேன்; இதை எல்லாம் விட்டுவிட்டு சாவதற்காக விரைகின்றேன். உன் பெருங்கருணையால் என் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும்


இவை அனைத்தும் இறையிடம் நம்மைக் கொண்டு செல்பவை. ஆனால் இவைகளை எல்லாம் விடுத்து உன் திருவடை அடைய விரும்புகிறேன் என்பதில் இருந்து விரைவாக உன் திருவடி அடைய விரும்புகிறேன் என்பதும் இதை நீ நிறைவேற்றித் தர வேண்டும் என்பதும்உட் பொருளாக விளங்கும்.

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - வெட்டாத சக்கரம்

ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  வெட்டாத சக்கரம்

வார்த்தைவெட்டாத சக்கரம்
பொருள்

·         சஹஸ்ராரத் தாமரை
·         விமலையவள் பீடம்
·         வாலை பீடம்
·         உச்சி("ய"கரமாகிய புருவமத்தி)

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம் வேறொருவர்க்கு
எட்டாத புட்பம் இறையாத தீர்த்தம் இனி முடிந்து
கட்டாத லிங்கம் கருதாத நெஞ்சம் கருத்தினுள்ளே
முட்டாத பூசையன்றோ குருநாதன் மொழிந்ததுவே?

பட்டினத்தார்

அகக்கண் கொண்டு அறியப்படும் விஷயம் இது. சக்கரம் செய்யப்பட வேண்டும் எனில் ஏதாவது ஒரு இடத்தில் வெட்டப்பட வேண்டும். (ஞானத்தினால் இது வெட்டாமல் அறியப்படும்). பேசாத மந்திரம் என்பதால் மௌன ஜபத்தினால் அறியப்படும் ஆயிரம் இதழ் தாமரை ஆயினாலும் மற்றொருவரால் பறிக்கமுடியாத புஷ்பம். தாமரை தண்ணில் இருக்கும். அது போலவே அது அமிர்தத்தில் இருக்கும். (ஞானம் அடைந்தவரே அதைப்பருகி மரணமில்லா பெருவாழ்வு அடைவர். கட்டாத லிங்கம் - குரு முகமாக அறிக. கருத்தினுள்ளே முட்டாத பூசையன்றோ - அஜபா நிலையில் செய்யப்படும் பூஜை முறை. இவ்வாறு இதை அறியும் முறையை என் குருநாதன் அருளியது.


(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதால் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)