ஓவியம் : இணையம்
அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மயிர்ப்பாலம்
வார்த்தை : மயிர்ப்பாலம்(சித்தர்கள் பரிபாஷைச் சொல்)
பொருள்
·
சுழிமுனை
·
புல்லாங்குழல்
·
நதி
·
நெருப்பாறு
·
ராமர் பாலம்
·
ஜோதி ஸ்தம்பம்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
1.
மூலப்பதியடியோ மூவிரண்டு வீடதிலே
கோலப்பதியடியோ குதர்க்கத்தெரு நடுவே
பாலப்பதிதனிலே *தணலாய் வளர்ந்த கம்பம்*
மேலப்பதிதனிலே என் கண்ணம்மா
விளையாட்டைப் பாரேனோ
அழுகணிச் சித்தர் பாடல்கள்
புருவ மத்தியில் பஞ்சேந்திரிய சத்திகள் கூடுவதினால் உண்டான மூலாக்கினி நெருப்பாறு மயிர்ப்பாலம் என்னும் சுழிமுனை நாடி வழியே மேலேறி – சுழிமுனை அடைந்து , ஆத்ம சொரூபத்தை சூழ்ந்துள்ள திரைகள் – மலங்களை எரித்து ஆத்மாவை விளக்கி அதன் அசைவை ஆட்டத்தை என் கண்ணால் பார்க்கின்றேன்
2.
*ஏறுமயிர்ப் பாலம்உணர்* விந்தவிட யங்கள்நெருப்
பாறெனவும் நன்றாய் அறிந்தேன் பராபரமே.
தாயுமானவடிகள் திருப்பாடல்கள்
ஆருயிரின் உணர்வு ஏறி நடந்துசெல்லும் மயிர்ப்பாலம் போன்றது, ஐம்புல நுகர்வுகள் அம் மயிர்ப் பாலத்தின்கீழ் ஓடும் நெருப்பாறோடொக்கும். (அதனால் விழிப்பாக நடத்தல் வேண்டும்)
3.
தானென்ற முப்பாழில் மும்மலமும் நீக்கித்
தற்பரத்துக் கப்பால் *மயிர்ப்பாலமீதில்*
வானென்ற நெருப்பாறுக்கு அப்பாற்சென்று
மகத்தான பரவெளியில் மனதொடுங்கி
கோனென்ற வெளியொளியில் தானே தானாய்
குவிந்திருந்த சிவயோக ஞானந்தானாய்
ஊனென்ற வாதியந்தந் தானே தானாய்
உகந்திருப்பார் சிவஞான முணர்ந்தோர்காணே
அகத்தியர் சௌமிய சாகரம்
மேம்பட்டவைகளுக்கு அப்பால்( புற நிலைகள்) மயிர்ப்பாலம், நெருப்பாறு ஆகிய உயருணர்வு கடக்கும் நிலைகளை உணர்த்து (அக நிலைகள்), ஆகாயத்தில் மனதை ஒடுங்கச் செய்து, தூய வெளியின் ஒளியாய் தானே அதுவுமாய்(அஃதாவது அதன் சாரங்களைப் பெற்று) மனதைக் குவித்து சிவயோக ஞானமும் தன்னுள் உணர்ந்து, ஊன் என்ற உடலின் தொடக்கம் மற்றும் முடிவு அறிந்து அதன் வழியில் (மாறாமல்) அதனுடன் இணக்கமாக இருப்பார்கள் சிவஞானம் உணர்ந்தவர்கள்.
(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதால் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)
No comments:
Post a Comment