Tuesday, January 10, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பொங்கோதம்

ஓவியம் : இணையம்


'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  பொங்கோதம்

வார்த்தைபொங்கோதம்
பொருள்

·         அலை பொங்கும் கடல்(கடலை ஒத்த நீர்ப்பரப்பு)

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
பங்கேருகன் எனைப் பட்டு ஓலையில் இட பண்டுதளை
தங்காலில் இட்டது அறிந்திலனோ தனிவேல் எடுத்துப்
*பொங்கோதம்* வாய்விடப் பொன்னம் சிலம்பு புலம்ப வரும்
எங்கோன் அறியின் இனி நான்முகனுக்கு இரு விலங்கே.

கந்தர் அலங்காரம்- அருணகிரிநாதர்

தாமரை மலரில் வாழும் பிரம்ம தேவன் அடியேனைத் தனது விதியேட்டில் எழுத முற்காலத்தில் தமது காலில் விலங்கு பூட்டியதை அறியேனோ? ஒப்பற்ற வேலாயுதத்தை எடுத்துப் பொங்கும்படியான கடலானது வாய் விட்டு அலறவும், பொன்னுருவான கிரௌஞ்சமலை கதறவும் வருகின்ற எமது இறைவனாகிய திருமுருகப்பெருமான் அறிவாராயின் இனிமேல் நான்கு முகங்களுடைய பிரம்ம தேவனுக்கு இரண்டு கைகளிலும் விலங்குகள் பூட்டப்படும்.

2.
அரிஅயனே முதல்அமரர்
    அடங்கஎழும் வெள்ளங்கள்
விரிசுடர்மா மணிப்பதணம்
    மீதெறிந்த திரைவரைகள்
புரிசைமுதல் புறஞ்சூழ்வ
    *பொங்கோதம்* கடைநாளில்
விரிஅரவ மந்தரஞ்சூழ்
    வடம்போல வயங்குமால் 

பன்னிரண்டாம் திருமுறை - சேக்கிழார்


திருமாலும், நான்முகனும் முதலிய தேவர்கள் அடங்குமாறு மேலே எழும் பல நீர்ப் பெருக்குகள், விரிந்த கதிர்களையுடைய, பெரிய மணிகள் அழுந்திய மேடைகளின் மீது வீசும் அலைகளால் உண்டான கீற்றுகள், புறமதிலின் மருங்கினில் நிரல்பட அமைந்திருப்பவை, பொங்கும் பாற்கடலைக் கடைந்த காலத்தில் மந்தர மலையை வரிவரியாகச் சுற்றிய வாசுகி என்ற பாம்பின் வடத்தைப் போல விளங்கும்.

No comments:

Post a Comment