Wednesday, June 8, 2016

சைவத் திருத்தலங்கள் 274 – திருஅரசிலி

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருஅரசிலி

·   அரச மரத்தை இறைவன் வீடாக கொண்டமையால் திருஅரசிலி(திரு+அரசு+இல்)
·   ருத்ராட்ச பந்தலின் கீழ் மூலவர் சிறிய பாணம், தாழ்வான ஆவுடையார்; தலையில் அம்பு பட்ட தழும்பு
·   மகர தோரணத்தில் தட்சிணாமூர்த்தி காலடியில் உள்ள முயலகன் இடதுபுறம் திரும்பி கையில் நாகத்தை பிடித்தவாறு காட்சி
·   வாம தேவர் எனும் முனிவருக்கு அரச மரத்தடியில் சுயம்புவாக காட்சி கொடுத்து சாபம்  விலக்கிய திருத்தலம்.
·   சத்திய விரதன் எனும் மன்னனுக்கு புத்திர பாக்யம் தருவதற்காக மான் வடிவில் காட்சி தந்து, அம்பு வாங்கி,  பின் மறைந்து லிங்க வடிவ காட்சி கொடுத்த இடம்.
·   வடிவமைப்பு -  சாளுவ மன்னன்



தலம்
திரு அரசிலி
பிற பெயர்கள்
ஒழுந்தியாப்பட்டு
இறைவன்
அரசிலிநாதர் ( அஸ்வத்தேஸ்வரர் , அரசலீஸ்வரர் )
இறைவி
பெரியநாயகி ( அழகியநாயகி )
தல விருட்சம்
அரசமரம்
தீர்த்தம்
வாமதேவ தீர்த்தம் ( அரசடித்தீர்த்தம் )
விழாக்கள்
வைகாசி விசாகம் 10 நாட்கள், மகாசிவராத்திரி , திருக்கார்த்திகை
மாவட்டம்
விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை,

அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில்
ஒழிந்தியாப் பட்டு - அஞ்சல்
வானூர் (வழி)
வானூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம் -605 109
04147 - 235472,295376, 9994476960
வழிபட்டவர்கள்
வாமேதவ முனிவர், சாளுக்கிய மன்னனான சத்தியவிரதன்,இந்திரசேனன், இந்திரசேனனின் மகள் சுந்தரி
பாடியவர்கள்
சிரவையாதீனம் கௌமார மடாலயம் ஸ்ரீ தண்டபாணி சுவாமிகள்
நிர்வாகம்
இருப்பிடம்

திண்டிவனத்தில் இருந்து சுமார் 25 கிமீ தொலைவு, புதுச்சேரியில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவு

திண்டிவனம் – பாண்டி சாலையில் ( வழி : கிளியனூர் ) தைலாபுரம் தாண்டி , ஒழுந்தியாப்பட்டு செல்லும் இடப்புற சாலையில் இருந்து சுமார் 2 கிமீ

திருவக்கரையில் இருந்து பாண்டி செல்லும் சாலை ( வழி : மயிலம் , வானூர் ) , திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு -> திண்டிவனம் சாலை -> கீழ்ப்புத்துப்பட்டு செல்லும் வலப்புறப்பாதை
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 273 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் 31 வது தலம்.

அரசலீஸ்வரர்


பெரியநாயகி


புகைப்படம் : தினமலர்

பாடியவர்          திருஞானசம்பந்தர்            
திருமுறை        2             
பதிக எண்         95          
திருமுறை எண்   8            

பாடல்

வண்ண மால்வரை தன்னை
     மறித்திட லுற்றவல் லரக்கன்
கண்ணுந் தோளுநல் வாயும்
     நெரிதரக் கால்விர லூன்றிப்
பண்ணின் பாடல்கைந் நரம்பாற்
     பாடிய பாடலைக் கேட்டு
அண்ண லாயருள் செய்த
     அடிகளுக் கிடமர சிலியே.          


பொருள்

தான் பயணிக்கும் போது குறிக்கிட்ட அழகிய கயிலை மலையை புரட்ட  முற்பட்ட வலிய அரக்கனாகிய இராவணனின் கண்ணும் தோளும் நல்ல வாயும் நெரியுமாறு அவனைக் கால்விரலை ஊன்றி அடர்த்துப் பின் அவன் கைநரம்பால் வீணை செய்து பண்ணொடு கூடிய பாடல்களைப் பாட அதனைக் கேட்டுப் பெருந்தன்மையோடு அவனுக்கு அருள்கள் பலவும் செய்த அடிகளுக்கு உகந்த இடம் திருஅரசிலியேயாகும்.

கருத்து

வண்ணமால்வரை-கயிலைமலை.
இன்னாசெய்தாற்கும் இனியவே செய்யும் பெருமையனாகி.


பாடியவர்          திருஞானசம்பந்தர்            
திருமுறை        2             
பதிக எண்         95          
திருமுறை எண்   9            

பாடல்

குறிய மாணுரு வாகிக்
     குவலய மளந்தவன் றானும்
வெறிகொள் தாமரை மேலே
     விரும்பிய மெய்த்தவத் தோனும்
செறிவொ ணாவகை யெங்குந்
     தேடியுந் திருவடி காண
அறிவொ ணாவுரு வத்தெம்
     அடிகளுக் கிடமர சிலியே. 

பொருள்

குள்ளமான உருவமுடைய வாமனராய்த் தோன்றிப்பின் பேருரு எடுத்து உலகை அளந்த திருமாலும், மணம் கமழும் தாமரை மலரை விரும்பிய நான்முகனும் எங்கும் தேடியும் திருவடிகளை அடைய முடியாதவாறும் அறியமுடியாதவாறும் அழலுருவாய் ஓங்கி நிமிர்ந்த திருவுருவத்தைக் கொண்டருளிய எம்அடிகளுக்கு உகந்த இடம் திரு அரசிலியேயாகும்.

கருத்து

குறிய மாணுரு-வாமனாவதாரம்
வெறி-மணம்.
மெய்த்தவத்தோன்-பிரமன்.
செறிவு ஒணா-செறிதல் ஒன்றா.
செறிதல்-பொருந்துதல்.
அறிவொணாவுருவம்-ஐம்பொறிகளாலும், மனதாலும் அறிய இயலா ஞானசொரூபம்.

(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Wednesday, June 1, 2016

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 4





உமை :  நான்கு வகையான வழிமுறைகளான பிரம்மச்சாரியன், கிரகஸ்தன், வான பிரஸ்தன் மற்றும் சந்நியாசி இவர்களின் கடமைகளை கூறுங்கள்.

   சிவன் :எல்லா வகையிலும் கிரகஸ்தர ஆஸ்ரமமே முதன்மையானதும்  முக்கியமானதும்ஆகும். நீராடுதல்தன் மனைவியோடு திருப்தியாக இருந்தல்தானம்,யாகம் போன்றவை விட்டப்போகாமல் காத்தல்விருந்தினர்களை உபசரித்தல்மனம் வாக்கு செயல் ஆகிய எல்லாவற்றாலும் ஒன்றாக இருத்தல்பெரும்  துன்பங்களையும் ஏற்றுக் கொள்ளுதல்  ஆகியவை முக்கிய தர்மங்கள். 
          மனவுறுதியுடன் காட்டில் இருந்தல், நல்ல பழங்களை உண்ணுதல், தரையில் படுத்தல் சடை தரித்தல், தோல் ஆடை அணிதல், தேவர்களையும் விருந்தினர்களையும்  உபசரித்தல் ஆகியவை வானபிரஸ்தனின் முக்கிய கடமைகள். 
  வீட்டை விட்டு வெளியே வசித்தல், பொருள் இல்லாமல் இருத்தல், பொருளீட்ட முயற்சிக்காமலும் இருத்தல், கள்ளமில்லாமல் இருத்தல், எங்கும்  யாசித்து  உணவு பெறுதல், எந்த தேசம் சென்றாலும் தியானத்தை கைவிடாமல் இருந்தல். பொறுமை தயையுடன்  இருந்தல், எப்பொழுதும் தத்துவ ஞானத்தில் பற்று  கொண்டு இருத்தல் போன்றவை  சந்நியாசியின் தர்மங்கள்.

   உமை :  இந்த ரிஷிகள் தவம் இயற்றுதலை முதன்மையாகக் கொண்டுள்ளனர்.  அது குறித்து விளக்க வேண்டும். 

  சிவன் : கிரகஸ்தனாக இருந்து நன் மக்களைப் பெறுவதால் பித்ரு கடன் நீங்கும்.  உறுதியுடன் மனதை அடக்கி மனைவியுடன் வானப்ரஸ்தத்தில்  வசிக்க வேண்டும். சாஸ்திரத்தில் சொல்லப்பட்டவாறு(தன் குருவின் வழி - என்று நான் பொருள் கொள்கிறேன்) தீஷை எடுத்துக் கொள்ள வேண்டும். சிறந்த புண்ணிய நதிகளில் நீராட வேண்டும். மனம் சலியாமல் அனுட்டானம் செய்ய வேண்டும் விருந்தினர்களை  அன்புடன் வரவேற்று, இருக்கை அளித்து அவர்களுக்கு  அன்னம் இடவேண்டும். இது வான பிரஸ்தனின் கடமைகள். 
  வனத்தை ஆச்சாரியன் போல் கருதி வசிக்க வேண்டும்.விரதங்களையும்(உணவினை விலக்குதல்), உபவாசக்களையும்(இறை நினைவோடு இருத்தல்) மிகுதியாக கொள்ளவேண்டும். ரிஷிகளில் சிலர் மனைவிகளோடு இருக்கிறார்கள். அவர்கள் விந்திய மலைச் சாரலிலும், நதிக் கரையிலும் வசிக்கிறார்கள். அவர்களும் தவ  சீலர்களே. கொல்லாதிருத்தல், தீங்கு செய்யாதிருத்தல், பிற உயிர்கள் இடத்தில் அன்போடு இருத்தல், தன் மனைவியோடு மட்டும் சேர்ந்து இருத்தல்  ஆகியவைகளும் இவர்களது தர்மத்தில் அடக்கம். 

   உமை :  மூன்று விதமான மனிதர்கள் எப்போதும் காணப்படுகிறார்கள். எவ்வித  முயற்சியும் இன்றி உயர்ந்த அதிகாரத்தையும் செல்வத்தையும் அடைந்து அனுபவிக்கின்றனர், சிலர் முயற்சி செய்து உயர் நிலைகளை அடைகின்றனர்.  மற்றவர்கள் எந்த முயற்சி செய்தாலும் ஒன்றையும் அடைய இயலாதவராக  இருக்கின்றனர், அது ஏன்?

   தொடரும்..

        *வாருணை  - மதிமண்டலத்தில் ஊறும் அமுதம்

  புகைப்படம் : இணையம்