Showing posts with label சைவம். Show all posts
Showing posts with label சைவம். Show all posts

Thursday, May 12, 2016

ஆட்சி சிதம்பரமா? மதுரையா?


பொதுவாக வீடுகளில் ஆண் ஆதிக்கமா, பெண் ஆதிக்கமா என்பதற்காக  விளையாட்டாக கேட்கப்படும் கேள்வி இது. இது சரியானது அல்ல.

வைத்திய சாஸ்திர நூல்களுக்கு ஏற்றவாறு நாடிகளின் எண்ணிக்கை 72,000 ல்  இருந்து 3,00,0000 வரை விரிவடைகின்றன.

அவற்றில் முதன்மை பெறும் நாடிகள் இடகலை, பிங்கலை, சுழுமுனை, சிங்குவை,புருடன், காந்தாரி, அசனி, அலம்பருடன், சங்குனி, குரு ஆகும். அதிலும் குறிப்பாக  இடகலை, பிங்கலை ஆகிய நாடிகள் முக்கியம் பெறுகின்றன.

மூக்கின் இடது நாசியில் வழியே நடைபெறும் சுவாசம் இடகலையும்(சந்திரகலை)
வலது நாசியில் நடைபெறும் சுவாசம் பிங்கலையும்(சூரிய கலை) பாம்பு குறீயீடாகவே குறிக்கப்படுகின்றன.

இந்த சுவாசஓட்டம் 4 நாழிக்கு (சுமார் 1 1/2 மணி நேரம்) ஒரு முறை மாறும். அதாவது ஒரு நாளில் 15 முறை (15*4 = 60 நாழிகை)

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்குங்
காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாரில்லை
காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாளர்க்குக்
கூற்றை உதைக்குங் குறியதுவாம் (திருமந்திரம்)

வலப்புற நாடி செல்லும் போது சில வேலைகளையும், இடப்புற நாடி செல்லும் போது சில வேலைகளையும் செய்ய வேண்டும். அப்போது அவைகள் முழுமை பெறும்.

சிதம்பரம் சூரிய நாடியை முதன்மையாய் உடையத் தலம். இதை உணர்த்தவே நடராஜரின் வலது பாதம் ஊன்றி இடது பாதம் தூக்கி ஆடும் வடிவமுடன் அமைந்திருக்கும்.

மதுரை சந்திர நாடியை முதன்மையாய் உடையத் தலம்இதை உணர்த்தவே நடராஜரின் இடது பாதம் ஊன்றி வலது பாதம் தூக்கி ஆடும் வடிவமுடன் அமைந்திருக்கும்.


அதிக விபரம் வேண்டுவோர் குரு முகமாக அறிக.
புகைப்படம் : இணையம்

Sunday, April 17, 2016

மகேசுவரமூர்த்தங்கள் 25/25 கங்காதர மூர்த்தி




·         வாமதேவ முகத்தில் இருந்து தோன்றிய வடிவம்
·         பாவங்கள் விலக்கும் மூர்த்தம்
·         பகீரதனின் வேண்டுகோளை ஏற்று விண்ணுலகிலிருந்து பூமிக்கு வந்த இமவானின் மூத்தமகளாகக் கருதப் படும் கங்கையை தன் சடைக் கற்றையில் தரித்துள்ள சிவனின் வடிவம்

வடிவம்

·         யோகபட்டம்
·         ஸ்வஸ்திகாசனத்தில் அமர்ந்த கோலம்
·         விரிசடையில் ஆமை, மீன், முதலை போன்ற உயிரினங்களோடு கங்கையின் திருமுகம் கரங்கள் மான், மழு, சின் முத்திரை, கீழ்க் கை வரத முத்திரை
·         வேறு வடிவம் - கங்காதரமூர்த்தி நான்கு கரங்கள் (சதுர்புஜம்), நின்ற நிலையில் (ஸ்தானகநிலை) மூன்று பங்கங்களுடன் (திரிபங்க நிலையில்) முன் வலது கை அபய கர கீழ்நோக்கி, பின் வலது கை அக்கமாலை, பின் இடது கை சடாமுடியின் சடையை பிடித்தவாறு. இடது புறம் கங்கை மண்டியிட்டு வணங்கிய நிலையில் சிவனின் சடை முடியை நோக்கி வருவது போன்ற வடிவம். கந்தஹாரம் வாஸ்த்ரா யக்ஞோபவீதம், கேயூரம், கங்கணம் அணிந்திருக்கும்.

வேறு பெயர்கள்

·         கங்கைப் புனலுடையான்
·         கங்கையைப் பெற்றவன்
·         கங்கையைக் கறந்தான்
·         புனலுடையான்
·         கங்கையை அங்கே வாழவைத்த கள்வன்

வடிவம் அமையப் பெற்ற கோயில்கள்

·         காஞ்சி கைலாசநாதர் கோயில்
·         மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோயில்
·         புதுக்கோட்டை கோகர்ணேஸ்வரர் கோயில்
·         திருச்சி  உச்சிப் பிள்ளையார் கோயில்


பிற குறிப்புகள்

·         இது யோக மார்கத்தில் இறை வழிப்பாடு செய்வதைக் குறிக்கும். துரியாதீதத்தில் இருந்து அருள் ஆற்றல் பெறுவதை குறிப்பிடுகின்ற வடிவம்.

·         மகாபாரதத்தில் பகீரதனின் கதை விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.


(வேறு குறிப்புகள் இருந்தால் தெரியப்படுத்தவும்)

புகைப்படம் : இணையம்

Wednesday, March 30, 2016

மகேசுவரமூர்த்தங்கள் 24/25 பைரவர்

ஸ்ரீ காலபைரவர் - காத்மாண்டு


புகைப்படம் : இணையம்

பெயர்க் காரணம்

பைரவர் என்னும் வட மொழி சொல் பீரு என்னும் சொல்லை அடிப்படையாக கொண்டது. இதற்கு அச்சம் என்பது பொருளாகும். எதிரிகளுக்கு பயம் தந்து தன்னை அண்டியவர்களைக் காப்பவர் என்பது பொருள்.

- (பரணம்) - உலக உயிர்களை தோற்றுவித்து  படைப்புத் தொழில் செய்பவர்
ர் - (ரமணம்) - தோன்றிய உயிர்களைக் காப்பவர்
- (வமணம்) - வலியுடன் வாழ்ந்து சலித்த உயிர்களை அழித்து தன்னுள் அடக்கிக் கொள்பவர்

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களும் காலங்களுக்கு உட்பட்டே இயங்குகின்றன. அப்படிப்பட்ட காலத்தை இயக்கும் பரம்பொருளே பைரவர் ஆவார்.

பைரவர் சிவபெருமானின் இருபத்து ஐந்து மூர்த்தங்களில் / அறுபத்து நான்கு திருமேனிகளுள் ஒருவராவார்.

சில்ப சாஸ்திரப்படி 64 பைரவர்கள் வகைபடுத்தப்பட்டாலும், 8 பைரவர்கள் திசைக்கு ஒருவராக காவல் புரிகிறார்கள். அசிதாங்க பைரவர்,ருரு பைரவர்,சண்ட பைரவர்,குரோதன பைரவர்,உன்மத்த பைரவர்,கபால பைரவர்,பீஷண பைரவர், ஸம்ஹார பைரவர். இந்த எட்டு பைரவர்களே 64 திருமேனிகளாக விரிவடைகிறார்கள்.

வேறு பெயர்கள்

சிவபெருமானுடைய பஞ்ச குமாரர்களில் ஒருவரான பைரவருக்கு வைரவர், பிரம்மசிரேச்சிதர், உக்ர பைரவர், க்ஷேத்ரபாலகர், வடுகர், ஆபத்துதாரனர், சட்டைநாதர், கஞ்சுகன்,கரிமுக்தன், நிர்வாணி, சித்தன், கபாலி, வாதுகன், வயிரவன் என்று பல பெயர்கள் உண்டு.

கால பைரவர், சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படுபவர்; சிவன் கோவிலின் வட கிழக்குப் பகுதியில் நின்ற கோலத்தில் காட்சி தருபவர்; ஆடைகள் எதுவுமில்லாமல் பன்னிரு கைகளுடன் நாகத்தை பூணூலாகவும், சந்திரனைத் தலையில் வைத்தும், சூலாயுதம், பாசக் கயிறு, அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கியும்(வடிவங்களுக்கு ஏற்றவாறு ஆயுதங்கள் மாறும்) நிர்வாண ரூபமாய்க் காட்சி தருபவர்

கால பைரவர் சனியின் குருவாகவும், பன்னிரன்டு ராசிகள், எட்டு திசைகள், பஞ்ச பூதங்கள், நவகிரகங்களையும், காலத்தையும் கட்டுப்படுத்துபவராகவும் கூறப்படுகிறார்.

கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி பைரவரது அவதார தினமாகும்.

பைரவர் தோற்றம்

தோற்ற வகை : 1

அந்தகாசுரன் என்னும் அரக்கன் சிவனை வழிபட்டு இருள் என்ற சக்தியைப் பெற்று உலகை இருள் மயமாக்கி கர்வம் கொண்டு தேவர்களை துன்புறுத்தி வந்தான். அதனால் தேவர்களும், முனிவர்களும் சிவனிடம் முறையிட்டு அவனை அழிக்க வேண்டினார்கள். சிவன் தாருகாபுரத்தை எரித்த காலாக்னியை பைரவ மூர்த்தியாக மாற்றினார். எனவே எட்டு சைகளிலும் எட்டு பைரவர்கள் தோன்றினார்கள்.

தோற்ற வகை : 2

ஒரு முறை ப்ரம்மா தனக்கு ஐந்து தலைகள் இருப்பதால் கர்வம் கொண்டு சிவனை நிந்தித்தார். சிவன் ருத்ரனிடம் ப்ரம்மாவின் ஐந்தாவது தலையை நீக்குமாறு கூறினார்இதனால் ப்ரமாவின் கர்வம் நீங்கியது. ப்ரம்மாவின் தலையை எடுத்ததால் பைரவருக்கு ப்ரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதனால் சிவன் பைரவரை பூலோகத்தில் சென்று யாசகம்(பிச்சை) எடுக்குமாறு கூறினார். இந்த தோஷம் திருவலஞ்சுழியில் அவருக்கு நீங்கியது.

பூசிக்க உகந்த மலர்கள்

தாமரை, செவ்வரளி, அரளி, வில்வம், தும்பைப்பூ, சந்தனம் செண்பகம், செம்பருத்தி, நாகலிங்கப்பூ,சம்மங்கி (மல்லிகை விலக்க வேண்டும்)

பிடித்த உணவுப் பொருட்கள்

சர்க்கரைப் பொங்கல், உப்பில்லாத தயிர் சாதம், தேன், செவ்வாழை, வெல்லப் பாயாசம், அவல் பாயாசம் நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால், செவ்வாழை மற்றும் பல பழவகைகள்

பைரவரை வழிபாடு செய்ய சிறந்த நாள்

எல்லா நாட்களுமே பைரவரை வழிபட சிறந்த நாள் என்றாலும் சில தினங்கள் உன்னதமான பலன்களைத் தரும். அதில் அம்மாவாசை, பௌர்ணமி(வெள்ளிக் கிழமையுடன் கூடிய பௌர்ணமி இன்னும் சிறப்பு), தேய்பிறை அஷ்டமி, ஞாயிறு ராகு காலம் ,

பைரவர் வழிபாட்டின் பலன்கள்

· ஏவல், பில்லி சூனியம், பேய் பிசாசு முதலியவற்றின் தொல்லைகளிலிருந்து பூரண விடுதலை அடையலாம்.
·   திருமணத்தடைகள் நீங்கும்
·   சந்தான பாக்கியம் பெறலாம் (குழந்தை)
·   இழந்த பொருள்களையும் சொத்துக்களையும் திரும்பப்பெறலாம்
·   இழந்த பொருள், சொத்தை மீண்டும் பெற்றிடலாம்.
·   ஏழரையாண்டுச் சனி, அஷ்டமத்துச் சனி, சனீசுவரனால் ஏற்படும் கஷ்டங்கள் நீங்கும்
·   எதிரிகள் தொல்லை நீங்கும்
·   கிரங்களின் தோஷங்கள் மற்றும் பிதுர்தோஷம் நீங்கும்
·   வாழ்வில் வளம் பெருகும்
·   பிறவிப்பிணி அகலும்


இது சிறு குறிப்பு மட்டுமே. பைரவர் பற்றி விரிவாக அறிய திருவாடுதுறை மடத்து பதிப்பில் வெளியாகி இருக்கும் 'மகா பைரவர்' நூலினை வாசிக்கவும்.