Friday, January 29, 2016

மகார ப்ரியை - சக்தி பீடங்கள் - 51- முன்னுரை



எங்கும் உளபொருளாய், ஓங்கார வடிவமாய், குலத் தெய்வமாக இருக்கும் கணபதியை வணங்குகிறேன்.

'விழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்' என்பதாய், சிவனின் மைந்தனுமாய், சிவனுக்கு உபதேசம் ஈந்தவனுமாகிய குமரவேலின் திருத் தாளினை பணிகிறேன்.

சகல உயிர்களிலும், சகல காலங்களிலும் சதா சர்வ காலமும் உறைந்திருக்கும் ஈசனும், எண்ணமும் சொல்லும் மாறாது என்றும் ஈசனிடம் உறைந்திருக்கும் என் தாயும், அகில நாயகியுமான கருணை நாயகியின் திருவடியினைப் பற்றுகிறேன்.

என் தாழ் நிலை அறிந்தும், வினாடிக்கும் குறைவான நேரமும் அகலாது என்னை சேய் போல் காத்து, என்னின் அனைத்து நிகழ்வுகளையும் அறிந்து, எக்காலத்திலும் நிறை பொருளாக என்னுள் இருந்து என்னை இயக்கும் எனது குருநாதரின் திருத்தாள் திருவடிகளைப் பணிகிறேன்.

'சக்தி உரை செய் சக்தி எமக்கில்லை' என்பதால் இது குறித்து பலநாட்களாக எழுதாமல் இருந்தேன். 'உயிர் உறை குருநாதன்' உத்திரவின் படியே இத் தொடரை துவங்குகிறேன்.

மிகப் பெரிய சக்தியை தன்னுள் இருக்கும் இறை சக்தி மகாரமாக இருக்கிறது. பிரணவ எழுத்துக்களில் மகாரம் முடிவு என்று கொண்டாலும், முழு மந்திர சக்தியினை வெளிப்படுத்தும் எழுத்தாகவே மகாரம் இருக்கிறது.

ஓம் மகார ரூபாய நம என்பதும் மகாரப் ப்ரியை என்பதும் ஒரு பொருளில் வருகிறது. திருமந்திரத்திலும் மகார எழுத்தின் தன்மையும் விளக்கங்களும் மிக நீண்டதாகவே காணப்படுகிறது.

அகரம், உகரம், மகரம், விந்து, நாதம் என்னும் ஐந்துங் கூடிப் பிரணவமாகும்; இவை சூக்கும பஞ்சாக்கரம் எனவும் பெறும்;

"அகார வுகார மகங்காரம் புத்தி
மகார மனஞ்சித்தம் விந்துப் - பகாதிவற்றை
நாம முளவடிவா நாடிற் பிரணவமாம்
போதங் கடற்றிரையே போன்று"  - சிவஞானபோத வெண்பா

இவ்வாறு பிரணவப் பொருளின் நாயகமாக இருப்பது மகாரமே.

மகாரத்தின் போது(அதாவது மகார உச்சரிப்பில்  ம்- பீஜம்கும்பகம் எளிதில் கைவரப் பெறும்.இதில் பூரண கும்பகமும், கேவல கும்பகமும் எளிதில் கைகூடும்.


தந்தையால் அவமானப்படுத்தப்பட்ட தாட்சாயிணி  யாகம் அழியுமாறு சாபம் விடுத்தாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார்..  இது தந்தை தந்த உடல் என்று நினைந்து தீயினில் தனது உடலை எரித்தாள். தாட்சாயிணியின் மரணத்திற்குப் பிறகு சிவன் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். அது நிலைபெறாமல் நிகழ்ந்து கொண்டிருந்தது. அதை நிறுத்துவதன் பொருட்டு திருமால் தனது சக்ராயுதத்தால் தாட்சாயணியின் இறந்த உடலை 51 துண்டுகளாக வெட்டினார். இவ்வாறு உடல் விழுந்த பகுதிகள் சக்தி பீடங்களாயின. 

இவற்றில் ஐம்பத்தியொரு சக்தி பீடங்கள் அட்சர சக்தி பீடங்கள் என்று கூறப்படுகின்றன. ஐம்பத்தியொரு அட்சரங்கள் பற்றி எல்லா சித்தர்களும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அவளை அறியா அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன்று இல்லை
அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே.

எனும் திருமந்திரம் பாடலுக்கு ஏற்ப அவளை வணங்காத சித்தர்கள் இல்லை.

இந்த பீட நிர்ணயமும் அதற்கான தோத்திர முறைகளையும் பற்றி சிவபெருமான் தேவியிடம் கேட்க, தேவியே தனக்குரிய சக்தி பீடங்கள் பற்றிக் கூறுவதாக அமைந்துள்ளது.

இக்காரணங்கள் பற்றியே மகார ப்ரியை - சக்தி பீடங்கள் எனும் இக்கட்டுரைகள்.

Wednesday, January 27, 2016

சைவத் திருத்தலங்கள் 274 – திருஊறல்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் - திருஊறல்


இறைவன் - சுயம்பு மூர்த்தி
நந்தியின் வாயிலிருந்து ஒரு காலத்தில் நீர் விழுந்து கொண்டிருந்ததாலும், இறைவன் திருவடியில் நீர் சுரப்பதாலும் இவ்வூருக்கு திருஊறல்
தக்கன் நடத்திய யாகத்தை அழித்து அவன் தலையை வீரபத்திரர் தலையைக் கொய்த தலம்
தக்கன் தனக்கு அழிவு வரும் நிலையைக் கண்டு "ஓ" என்று ஓலமிட்டதால் தக்கோலம்
பிரகஸ்பதியின் தம்பி உத்தி முனிவரின் மகன் தீர்க்கதா. அவர் யாகம் நடத்தும் சமயம் அங்கு வந்த காமதேனு பசுவினை அங்கு தங்க கூறுதல். காமதேனு மறுத்தல், அதனால் காமதேனுவினை கட்ட முயல சாபம் பெறுதல். நாரதரின் அறிவுரைப்படி ஈசனை பூஜித்து சாப விமோசனம் பெறுதல். உததி முனிவர் வழிபட்டு வேண்டிக்கொண்டதால் நந்தியெம்பெருமான் தன்வாய் வழியாக கங்கையை வரவித்த சிறப்புடையது இத்தலம்
நர்த்தன நிலையில்(உக்கடி ஆசனத்தில்) தட்சிணா மூர்த்தி
நிறம் மாறும் லிங்கம்(உத்ராயணம் - சிகப்பு நிறம், தட்சிணாயனம் - வெண்மை நிறம்)


தலம்
திருஊறல்
பிற பெயர்கள்
தக்கோலம்
இறைவன்
ஜலநாதேஸ்வரர், ஜலநாதீஸ்வரர் உமாபதீசர்
இறைவி
கிரிராஜ கன்னிகாம்பாள்(மோகன வல்லியம்மை)
தல விருட்சம்
தீர்த்தம்
பார்வதி சத்ய கங்கை தீர்த்தம், குசத்தலை நதி
விழாக்கள்
வைகாசி விசாகம், ஆனிதிருமஞ்சனம், ஆடிப்பூரம், மார்கழி திருவாதிரை, மாசிமகம், தைப்பூசம், திருக்கார்த்திகை.
மாவட்டம்
வேலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 8.00 மணி முதல் 12 மணி வரை
மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை

அருள்மிகு ஜலநாதேஸ்வரர் திருக்கோவில்
தக்கோலம் அஞ்சல்
அரக்கோணம் வட்டம்
வேலூர் மாவட்டம்
PIN - 631151.
வழிபட்டவர்கள்
சம்வர்த்த முனிவர், காமதேனு, இந்திரன், சந்திரன், எமன், திருமால், பாண்டவர்கள், சப்த கன்னியர், உததி முனிவர், தீர்க்கத முனிவர்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் – 1 பதிகம், அருணகிரிநாதர்
நிர்வாகம்
இருப்பிடம்
அரக்கோணம் காஞ்சிபுரம் செல்லும் வழியில் தக்கோலம் கூட்ரோட்டில் இருந்து 4 கி.மி
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 244 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது    12 வது தலம்.


ஜலநாதீஸ்வரர் 



கிரிராஜ கன்னிகாம்பாள்


புகைப்படம் : தினமலர்

பாடியவர்          திருஞானசம்பந்தர்            
திருமுறை         1          
பதிக எண்         106          
திருமுறை எண்    7           

பாடல்

கறுத்த மனத்தினொடுங் கடுங்காலன்வந்தெய்துதலுங் கலங்கி
மறுக்குறு மாணிக்கருள மகிழ்ந்தா னிடம்வினவில்
செறுத்தெழு வாளரக்கன் சிரந்தோளு மெய்யுந்நெரிய வன்று
ஒறுத்தருள் செய்தபிரான் றிருவூறலை யுள்குதுமே.

பொருள்

(கோபம் கொண்டதால்) கறுத்த மனம் உடையவனாகிய காலன் தன் உயிரை பறிப்பதற்காக வரும் போது அது கண்டு கலங்கிய  மார்கண்டேயனுக்கு அருளியவனும், கோபத்தினால் சினம் கொண்டு வந்த வாள் வித்தையில் வல்லவனாகிய இராவணனின் தலை, தோள், உடல் ஆகியவற்றை நெரித்து அவனுக்கு அருள் செய்தவனுமாகிய சிவபெருமான் விரும்பி உறையும் இடம் திரு ஊறல் ஆகும். அதனை நாம் நினைவோமாக.

கருத்து

சினம் கொண்ட இருவருக்கு அவர்களின் சினம் அடக்கி அவர்களை ஆட்கொண்டு அருளிய திறம் இங்கு சிறப்பாக விளக்கப்படுகிறது.


பாடியவர்          திருஞானசம்பந்தர்            
திருமுறை         1          
பதிக எண்         106          
திருமுறை எண்    8           

பாடல்

நீரின் மிசைத்துயின்றோன் நிறைநான் முகனும்மறியா தன்று
தேரும் வகைநிமிர்ந்தான் அவன்சேரும் இடம்வினவில்
பாரின் மிசையடியார் பலர்வந் திறைஞ்சமகிழ்ந் தாகம்
ஊரும் அரவசைத்தான் திருவூறலை உள்குதுமே.

பொருள்

கடல் மீது துயில் கொள்ளும் திருமாலும், ஞானத்தினால் நிறைவுபெற்ற நான்முகனும் தேடி அறிய முடியாதவாறு நிமிர்ந்து நின்றவனும், இப்பரந்து பட்ட நில உலகில் அடியவர்கள் மகிழ்ந்து வணங்க தக்கதாகவும் பாம்பினை இடையில் கட்டியவனும் ஆகிய சிவபிரான் உறையும் இடம் திரு ஊறல் ஆகும். அதனை நாம் நினைவில் கொள்வோமாக.

கருத்து
·         நிறைநான் முகனும் - ஞானத்தால் நிறைவு பெற்றவன். முற்றிலும் உணர்ந்தவன்.
·         அரவம் - பாம்பு. கொடிய விலங்குகளும் அவனிடத்தில் அதன் தன்மைகளை இழந்து விடும். மற்றொரு பொருள் யோக மார்க்கத்தில் இருப்பவன்.
·         உள்குதல் - உள் முகமாக நினைத்தல்

இக் கோயில் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்.



Thursday, January 21, 2016

சைவத் திருத்தலங்கள் 274 – திருமாற்பேறு

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் - திருமாற்பேறு

மூலவர்  - தீண்டாத் திருமேனி(பார்வதியால் விருதசீர நதிக்கரையில் அமைக்கப்பட்டது)
ததிசி முனிவரை கொல்ல திருமால் ஏவிய சக்ராயுதம், முனிவரின் தெய்வீக தன்மையால் செயலிழத்தல், அதன் பொருட்டு சக்ராயுதம் பெற ஆயிரம் இதழ் தாமரைகளால் பூசை செய்தல், இறைவன் அருளால் ஒரு தாமரை மறைதல், திருமால் தனது கண்களை தாமரையாக மாற்றி பூசித்தல். அக்காரணம் பற்றி திருமால் பார்வையும் சக்ராயுதமும் பெறுதல்.
திருமாலின் உற்சவத் திருமேனி -  ஒரு கையில் தாமரை மலர், மறு கையில் 'கண்',  நின்ற திருக் கோலம்
வல்லபை விநாயகர் -  பத்துக் கரங்களுடன் காட்சி
நந்தி எம்மான் நின்ற திருக்கோலம்

முன் காலத்தில் கடவுளர்களுக்கு மாலைகள் - வெள் எருக்கு மலர்கள் (கோயிலுக்கு அருகில் உள்ளது)


தலம்
திருமாற்பேறு
பிற பெயர்கள்
ஹரிசக்கரபும், திருமால்பூர், மாற்பேறு
இறைவன்
மணிகண்டீஸ்வரர், தயாநிதீஸ்வரர், பிரவாளேஸ்வரர், சாதரூபர், பவளமலையார், வாட்டந்தவிர்த்தார், மால்வணங்கீசர்.
இறைவி
அஞ்சனாட்சி, கருணாம்பிகை
தல விருட்சம்
வில்வம்
தீர்த்தம்
சக்கர தீர்த்தம்
விழாக்கள்
மாசிமாதம் நடக்கும் 10 நாள் பிரமோற்ஸவத்தில் மகம் நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி
(பெருமாளுக்குரிய கருட சேவை),ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆனித்திருமஞ்சனம், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை
மாவட்டம்
வேலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை,

அருள்மிகு மணிகண்டேஸ்வரர் திருக்கோயில்
திருமால்பூர் -அஞ்சல் - 631 053
அரக்கோணம் வட்டம்
வேலூர் மாவட்டம்.
04177 - 248220, 09345449339
வழிபட்டவர்கள்
திருமால், சந்திரன்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் 2 பதிகங்கள், ,திருநாவுக்கரசர் 4 பதிகங்கள். சுந்தர மூர்த்தி நாயனார் இத்தலத்திற்கு எழுந்தருளி உள்ள குறிப்பு பெரிய புராணத்தில் இருக்கிறது. ஆனால் பதிகங்கள் கிடைக்கவில்லை
நிர்வாகம்
இருப்பிடம்
அரக்கோணம் - காஞ்சிபுரம் இருப்புப் பாதையில் இத்தலம் அமைவிடம்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 243 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது  11 வது தலம்.

மணிகண்டீஸ்வரர்


அஞ்சனாட்சி


புகைப்படம் : தினமலர்

பாடியவர்          திருஞானசம்பந்தர்            
திருமுறை         1          
பதிக எண்         55          
திருமுறை எண்    8           

பாடல்

அரச ளிக்கும் அரக்கன் அவன்றனை
உரைகெ டுத்தவன் ஒல்கிட
வரமி குத்தவெம் மாற்பேற் றடிகளைப்
பரவி டக்கெடும் பாவமே.

பொருள்

இலங்கையினை ஆளும் இராவணனின் புகழ் கெடுமாறு செய்து, அவன் தனது பிழையினை உணர்ந்தபின் அவன் விரும்பி வேண்டிய வரங்களை அளித்த எமது திருமாற்பேறு பெருமானின் திருவடிகளை வணங்க பாவங்கள் கெடும்.

கருத்து



பாடியவர்            திருநாவுக்கரசர்        
திருமுறை           5        
பதிக எண்           59       
திருமுறை எண்      10        

பாடல்

நாடி நாரணன் நான்முக னென்றிவர்
தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ
மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத்
தாடி பாதமென் நெஞ்சு ளிருக்கவே.

பொருள்

எம் பெருமான் ஈசனை திருமாலும், பிரம்மனும் முறையே திருவடியினையும், வானில் பறந்தும் காண இயலாதவர்களாக ஆயினர். மாட மாளிகைகள் சூழ்ந்த தில்லை அம்பலத்தாடுவான் திருவடிகள் அன்பால் நெஞ்சினில் நிறைந்திருக்கும்.

கருத்து

இறைவனை அகத்தே காணவேண்டும் என்பதை இது காட்டுகிறது.



Reference

காஞ்சிப் புராணம்

பதிகங்கள்:

ஊறியார்தரு -1 -55 திருஞானசம்பந்தர்
குருந்தவன் -1 -114 திருஞானசம்பந்தர்
மாணிக்குயிர் -4 -108 திருநாவுக்கரசர்
பொருமாற் -5 -59 திருநாவுக்கரசர்
பாரானைப் -6 -80 திருநாவுக்கரசர்

(இக் கோயில் பற்றி மேலும் விபரம் தெரிந்தால் தெரியப்படுத்தவும்)