Monday, July 28, 2014

மகேசுவரமூர்த்தங்கள் 1/25 சோமாஸ்கந்தர்





வடிவம்

இறைவனான சிவனுக்கும், இறைவியாகிய பார்வதிக்கும் இடையே முருகப் பெருமான் வீற்றிருக்கும் திருக்கோலத்தை குறிப்பிடுவதே இது


அடர்ந்த திருக்கோலம். இடது கால் மடித்து, வலது கால் தொங்கவிட்டு.
நான்கு திருக்கரங்கள் -
பின் இரு திருக்கரங்களில் மான், மழு.
முன் இரு திருக்கரங்களில் அபய முத்திரை, வரத முத்திரை
அம்பிகை - எதிர் மறை கால் மடித்து


வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்

  • திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்
  • காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்
  • குமரக்கோட்டம்
  • காமாட்சியம்மன் கோயில்
  • தென்காசி காசி விஸ்வநாதர் கோயில்
  • திருக்கேதீஸ்வரம்இலங்கை
  • திருக்கருகாவூர்
  • திருக்கள்ளில்



சிறப்புகள்
இல்லற வாழ்வினையும் அதன் சிறப்புகளையும் மக்கட்பேறு முதலியவற்றை குறிக்கும்.

இதரக் குறிப்புகள்
சிறு தொண்டருக்கு இவ்வடிவ காட்சி

1.
"ஏவலார் குழல் இறைவிக்கும் எம்பிரான் தனக்கும்
பாலன் ஆகிய குமரவேள் நடுவுறும் பான்மை
ஞால மேலுறும் இரவோடு பகலுக்கும் நடுவே
மாலை யானதொன்று அழிவின்றி வைகுமாறதொக்கும்"
 - கந்தபுராணம்
2.
"தம்மேனி வெண்பொடியால் தண்ணளியால் ஆரூரர்
செம்மேனி கங்கைத் திருநதியே - அம்மேனி
மானே யமுனை; அந்த வாணி நதியும் குமரன்
தானே குடைவேம் தனித்து"

திருவாரூர் நான்மணிமாலை - குமர குருபர சுவாமிகள்

Image : Internet


Saturday, July 26, 2014

மகேசுவரமூர்த்தங்கள் - முன்னுரை


சிவன் என்ற சொல் சிவந்தவன் என்ற பொருளில் ஆளப்படுகிறது. ஆதி சித்தன், ஆதி தேவன், ஆதி நாதன், ஊழி முதல்வன் என்று எந்தப் பெயர் இட்டு அழைத்தாலும் அது முழுவதும் சிவன் பெயரே ஆகும்.

சிவன் பெரும்பாலும் அழித்தல் தொழிலுக்கு உரியவன் என்று கூறப்படுகிறது. அது நிச்சம்தான். ஊழ் வினைகளை அழிப்பவன்.

ருத்ரன், மகாதேவன் சதாசிவம் என்று பல பெயர்களில் அழைத்தாலும் அது வேறு வேறு வடிவங்களையே குறிக்கிறது.

சிவனுக்கான தொழில்கள் 5.
ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அருளுதல்.

சிவபெருமானின் இருபத்து ஐந்து சிவமூர்த்தங்கள் மகேசுவரமூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன. 

சிவனுக்கான வடிவங்களும் பெயர்களும் எண்ணிக்கையில் வேறுபட்டாலும் சைவ சித்தாந்தக் கருத்துப்படி 25 ஆகும்.


அவையாவன (தருமை ஆதீனம் - சைவ சித்தாந்தப்படி)
  1. சோமாஸ்கந்தர்
  2. நடராஜர்
  3. ரிஷபாரூடர்
  4. கல்யாணசுந்தரர்
  5. சந்திரசேகரர்
  6. பிட்சாடனர்
  7. லிங்கோற்பவர்
  8. சுகாசனர்
  9. சக்திதரமூர்த்தி
  10. அர்த்தநாரீஸ்வரர்
  11. சக்ரவரதர்
  12. திரிமூர்த்தி
  13. ஹரிஹர்த்தர்
  14. தட்சிணாமூர்த்தி
  15. கங்காளர்
  16. காமாரி
  17. காலசம்ஹார மூர்த்தி
  18. சலந்தாரி
  19. திரிபுராரி
  20. சரபமூர்த்தி
  21. நீலகண்டர்
  22. திரிபாதர்
  23. ஏகபாதர்
  24. பைரவர்
  25. கங்காதர மூர்த்தி

ஒவ்வொரு கட்டுரையிலும் இறைவனின் வடிவங்கள் அதற்குரிய ஊர் , சிறப்புகள் போன்ற விஷயங்களை எழுத உள்ளேன்.

'அவன் அருளாளே அவன் தாள் வணங்கி'  என்பதற்கு ஏற்ப அவன் துணை கொண்டு அவன் பற்றிய வடிவங்களை அவனே அருளட்டும்.

Thursday, July 24, 2014

சைவத் திருத்தலங்கள் 274 – திருப்பாச்சூர்



  • சிவன் சுயம்பு மூர்த்தி - சதுர வடிவ பீடம்
  • மூலவர் - தீண்டா திருமேனி
  • அர்த்த மண்டபத்தில் ஸ்ரீசக்கரம் - ஆதிசங்கரர் பிரதிஷ்டை
  • மூங்கில் வனத்தில் தோன்றியதால் பாசுரநாதர். பாசுர் – மூங்கில்
  • விஷ்ணு துர்க்கை மகிஷாசூரன் இல்லாமல்
  • தாழம்பூ தன் தவறு உணர்ந்து வேண்டியதால் மன்னித்து சிவராத்திரியில் ஒரு கால பூஜைக்கு மட்டும் பரிகாரம் பெற்ற தலம்.
  • தட்ச யாகத்திற்கு சென்ற அம்பாளை சாதாரண பெண்ணாக பிறக்கச் செய்து, தவம் செய்ய வைத்து 'தன் காதலியே' என்று அழைத்த இடம்.
  • விஷ்ணு அசுரர்களை அழித்த தோஷத்தால் 16 செல்வங்களில் 11 இழந்து சிவனை வணங்கி 11 விநாயர்களை பிரதிஷ்டை செய்து மீண்டும் அனைத்து செல்வங்களும் பெற்ற இடம்திரிபுராந்த தகனத்தில் தன்னை மதியாமல் சென்றதால் தேரின் அச்சு முறித்து சபை அமைத்து காரணங்களை சிவனிடம் வினாயகப் பெருமான் வினவிய இடம்
  • மேய்சலுக்கு வந்த பசுக்களில் ஒன்று பால் சொரிந்தது கண்டு வாசி என்னும் கருவியால் தோண்டி வெட்டுப்பட்டு தானே மூங்கில் காட்டில் இருப்பதை மன்னனுக்கு உணர்த்திய இடம்
  • கஜபிருஷ்ட விமானம்

தலம்
திருப்பாசூர்,
பிற பெயர்கள்
தங்காதலிபுரம்
இறைவன்
வாசீஸ்வரர், பசுபதீஸ்வரர், உடையவர், பாசூர்நாதர், சோமாஸ்கந்தர், வினை தீர்த்த ஈஸ்வரன்
இறைவி
தங்காதளி, பசுபதிநாயகி, மோகனாம்பாள், பணைமுலை
தல விருட்சம்
மூங்கில்
தீர்த்தம்
சோம தீர்த்தம்மங்கள தீர்த்தம்
விழாக்கள்
வைகாசி பிரம்மோற்ஸவம்,
 மார்கழி திருவாதிரை
மாவட்டம்
திருவள்ளுர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 12 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

அருள்மிகு வாசீஸ்வர சுவாமி திருக்கோயில்,
திருப்பாசூர் - 631 203,  
+91- 98944 - 86890
பாடியவர்கள்
அப்பர்சுந்தரர்திருஞான சம்மந்தர்
நிர்வாகம்
இருப்பிடம்
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து - 7 கி.மி.
திருவள்ளூர் நகர பேருந்து நிலையத்தில் இருந்து -3 கி.மி.
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 249 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   16 வது தலம்.
அம்பிகைதிருமால் மற்றும் சந்திரன் ஆகியவர்கள் வழிபட்ட தலம்
வாசீஸ்வரர்


தங்காதளி






பாடியவர்                     திருஞானசம்மந்தர்
திருமுறை                    2ம் திருமுறை 
பதிக எண்                    060
திருமுறை எண்               8

பாடல்

தேசு குன்றாத் தெண்ணீ ரிலங்கைக் கோமானைக்
கூச வடர்த்துக் கூர்வாள் கொடுப்பார் தம்மையே
பேசிப் பிதற்றப் பெருமை தருவா ரூர்போலும்
பாசித் தடமும் வயலுஞ் சூழ்ந்த பாசூரே.


பொருள்

புகழ் குறையாத, தெளிந்த நீரை உடைய கடலால் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனை அவன் மனம் கூசுமாறு செய்து அவனுக்கு வாளைப் பரிசாகக் கொடுத்தவர். தம்மைப் பற்றி பேசி, பிதற்றும் அடியவர்களுக்கு அருள் தருபவர். அது மூங்கில் மரங்களும் வயல்களும் சூழ்ந்த பாசூர் ஆகும்.


கருத்து

·         தவறு செய்தாலும் அவற்றை விலக்கி அருள் செய்பவர் என்பது இராவணனுக்கு அருளிய நிகழ்வு உணர்த்தும்.
·         குன்றா - குறையாத
·         தம்மைப்பற்றி பேசுதல் என்பது இழிவானது. அது அதிகமாகும் போது பிதற்றல் ஆகிறது. அதாவது பொருள் அற்றதாகிறது. அவர்களுக்கும் அருள்பவர் சிவன்.
·         பாசித்தடம் - நீர்ப்பாசியை வைத்து நீர் நிறைந்த குளங்களை உடைய என்று பல விளக்கங்களிலும் எடுத்தாளப்பட்டிருக்கிறது. பாசு என்பது மூங்கிலைக் குறிப்பதால் மூங்கில் காடுகளை உடைய என்று இப்பாடலில் என் பொருளாக விளக்கப்பட்டிருக்கிறது.

பாடல்

பாடியவர்                     அப்பர்
திருமுறை                    6ம் திருமுறை 
பதிக எண்                    083
திருமுறை எண்               1

விண்ணாகி நிலனாகி விசும்பு மாகி
வேலைசூழ் ஞாலத்தார் விரும்பு கின்ற
எண்ணாகி எழுத்தாகி இயல்பு மாகி
ஏழுலகுந் தொழுதேத்திக் காண நின்ற
கண்ணாகி மணியாகிக் காட்சி யாகிக்
காதலித்தங் கடியார்கள் பரவ நின்ற
பண்ணாகி இன்னமுதாம் பாசூர் மேய
பரஞ்சுடரைக் கண்டடியேன் உய்ந்த வாறே.


பொருள்

பாசூரில் உறையும் இறைவன் விண்ணாகவும், நிலமாகவும், மேகமாகவும், கடல் சூழ் உலகில் உள்ள பூமியில் உள்ளவர்கள் விரும்பும் எண்ணாகவும், எழுத்தாகவும், இவை அனைத்தும் இயல்பாகவும், ஏழ் உலகத்தில் இருப்பவர்களாலும் வணங்கப்படுவனாகவும், காட்சிக்கு உரிய கண்ணாகவும், அக் கண்ணுள் இருக்கும் மணியாகவும், அதனால் உணர்த்தப்படும் காட்சியாகவும், காதல் கொண்டு அடியார்கள்  பாடும்  பண் நிறைந்த  பாடலாகவும், இனிய அமுதமாகவும் இருக்கிறான். இப்படிப்பட இறைவனை கண்டு அடியேன் உய்ந்தேன்.

கருத்து
விசும்பு - மேகம்,
வேலை – கடல்
காட்சி, காண்பவர், காணப்படும் பொருள் என்ற சைவ சித்தாந்தக் கருத்து இப்பாடலோடு ஒப்பு நோக்கக் கூடியது.

புகைப்பட உதவி :  Internet




Tuesday, July 8, 2014

சைவத் திருத்தலங்கள் 274 – திருவிற்கோலம்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் - கூவம்

·   சிவன் சுயம்பு மூர்த்தி
·   மூலவர் - தீண்டா திருமேனி
·   இறைவன் மேருவை கையால் வில்லாக பிடித்த தலம் - திரு+வில்+கோலம்
·   சிவன் - காளிக்காக ரக்க்ஷா(காத்தல்) நடனம் ஆடிய இடம்
·   சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகன், வித்யுன்மாலி - துவார பாலகர்கள்
·   கஜபிருஷ்ட விமானம்
·   இயற்கை பேரழிவுகளான மழை, வெள்ளம் வரும் போது சுவாமி வெண்மையாகவும், போர்நிகழும் காலத்தில் செம்மை நிறம் உடையதாகவும் மாறும் அதிசயம் நிகழும்..
·   அம்பாளுக்கு முன் புறத்தில் ஸ்ரீசக்கரம்
·   கூரம்(ஏர்க்கால்) முறிந்த இடமாதலால் இது கூரம். பின்னாளில் மருவி கூவம் என்றானது.
·   பைரவர் - நாய் வாகனம் இல்லாமல் காட்சி 


தலம்
கூவம்
பிற பெயர்கள்
கூவரம், திருவிற்கோலம், கூபாக்னபுரி
இறைவன்
திரிபுராந்தகர், சோமாஸ்கந்தர், புராந்தகேசுவரர்
இறைவி
திரிபுராந்த நாயகி, புராந்தரியம்மை
தல விருட்சம்
தனியாக ஏதுமில்லை. நைமிசாரண்ய ஷேத்திரம்
தீர்த்தம்
அக்னி, அச்சிறுகேணி மற்றும் கூபாக்கினி தீர்த்தம்
விழாக்கள்
·         சித்திரை - பிரம்மோற்ஸவம்
·         ஆடி - பூ பாவாடை திருவிழா
·         சிவராத்திரி
·         ஆருத்ரா தரிசனம்
மாவட்டம்
திருவள்ளுர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 12 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை

அருள்மிகு திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில்,
கூவம் - . பேரம்பாக்கம் வழி,திருவள்ளூர் மாவட்டம்.
பாடியவர்கள்
திரு ஞான சம்பந்தர், கூவப்புராணம்
நிர்வாகம்
திரு ராஜேந்திரன் – 93818-65515
இருப்பிடம்
சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து 9 கி,மீ தூரத்தில் உள்ளது
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   14 வது தலம்.

திரிபுராந்தகர்



திரிபுராந்த நாயகி




(இப்பதிகத்தில் 8வது பாடல் இல்லாததால் 5வது பாடலும், 9வது பாடலும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது)

பாடியவர்                     திருஞானசம்மந்தர்
திருமுறை                    3ம் திருமுறை 
பதிக எண்                    023
திருமுறை எண்               5

பாடல்

முந்தினான் மூவருள் முதல்வன் ஆயினான்
கொந்துலா மலர்ப்பொழிற் கூக மேவினான்
அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை
சிந்துவான் உறைவிடம் திருவிற் கோலமே 


பொருள்

இறைவன் எல்லாவற்றிக்கும் முற்பட்டவன்.படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் தொழிகளை உடைய மூவருக்கு முதலாவது ஆனவன். கொத்தாக பூக்கும் சோலைகளை உடைய கூகம் என்ற ஊரில் உறைபவன். அந்தி வானத்தில் தோன்றும் பிறை சந்திரனை தன் தலையில் சூடியவன். அடியவர்களுடைய வினைகளை முழுவதுமாக நீக்குபவன். அவன் உறையும் இடம் திருவிற்கோலம் ஆகும்.

* * * * * * * * * * * * * * * * * * * *


பாடியவர்                     திருஞானசம்மந்தர்
திருமுறை                    3ம் திருமுறை 
பதிக எண்                    023
திருமுறை எண்               9

பாடல்

திரிதரு புரம்எரி செய்த சேவகன்
வரியர வொடுமதி சடையில் வைத்தவன் 
அரியொடு பிரமனதாற்ற லால் உருத்
தெரியலன் உறைவிடம் திருவிற் கோலமே


பொருள்

இறைவன் முப்புரங்களை அழித்து தேவர்களைக் காத்தவன். வரிகள் உடைய பாம்பினையும் சந்திரனையும் தலையில் தரித்தவன். தங்களது கர்வத்தால் தங்களை பெரிதாக்கிக் கொண்டதால் ப்ரம்மா மற்றும் திருமால் இவர்களால் காணமுடியாதவன். இப்படிப்பட்ட இறைவன் வீற்றிருக்கும் இடம் திருவிற்கோலம்.

கருத்து
திருதரு - வானத்தில் பறந்து திருந்து கொண்டிருந்த; அட்டவீரட்டானத்தில் ஒன்று - திரிபுர தகனம்
சேவகன் - சிவன் எளிமையானவன் என்பதைக் குறிக்கிறது.
வரி அரவோடு - வரிகள் உடைய பாம்பு(மிகுந்த நஞ்சு உடையது)

புகைப்பட உதவி : தினமலர்