Wednesday, May 28, 2014

அவயாம்பிகை சதகம்



சுமார் 200 ஆண்டுகளுக்கு முன், பெற்றோர் செய்த புண்ணியத்தால் ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு  கிருஷ்ணசாமி என்று பெயர் இட்டனர்.

சிறு வயதிலே பெற்றோரை இழந்தார் கிருஷ்ணசாமி.

ஒரு முறை அவரது அழுகுரல் கேட்டு அம்பிகை வந்தாள். அமுது ஊட்டினாள். ஆறுதல் படுத்தினாள். அவ்விடம் அகன்றாள்.

ஒருமுறை கோவிலில் தன் சன்னதிக்கு அழைத்து சென்று மறைந்தாள்.

ஒரு முறை அர்த்த ஜாம வழிபாட்டை முடித்து வரும் போது, கால் இடறி விழுந்தார். விழும் போது 'அம்மா அம்மா' என்று அலறினார்.

அன்று முதல் அர்த்த ஜாம வழிபாடு முடிந்த உடன், யாரும் இல்லாமல் கைவிளக்கு மட்டும் தொடந்து வந்து கொண்டிருந்தது. இதனை கண்ட ஊர் மக்கள் ஆச்சரியப்பட்டனர்.

தன் நிலை குறித்து வருந்தி 'உன்னை எப்படிப் பாடுவது' என்று புலம்பினார்.
'நீ பாடு, பாட்டு தன்னால் வரும் ' என்று உத்திரவிடுகிறாள் அம்பிகை.
உள்ளம் உருகி பாடிய பாடல்களே 'அவயாம்பிகை சதகம்'. மொத்தம் 100 பாடல்கள்.

இவருக்கு திருமணம் நடைபெற்றது, ஆனால் இல்லறம் ஆன்மீகம் சார்ந்த சாக்த வழிபாடாகவே இருந்தது. ஊர் மக்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஒரு அர்த்த ஜாம வழிபாட்டிற்குப் பின் ஜோதியில் கலந்தார்.




கனிந்து கனிந்துன் றனைப்பாடிக் கசிந்தே இருகண் புனல்பெருகக்
காது உபயம் உனதருளாம் கதையைக் கேட்க உனதடியார்
இனந்தான் உறவாய் மனம்புதைய எந்த நாளும் அவர் இருந்த
இடத்தை இருதாள் சுற்றிவர இரவும் பகலும் நினதருளை
நினைந்த படியே சிந்தைசெயும் நெறியை உதவி எனைக்காப்பாய்
நித்யா னந்தப் பழம் பொருளே நிமலி அமலை புகழ்விமலி
வனைந்த சடலத் தொழில்உனது அடிக்கே இதமாய் அருள்புரிவாய்
மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம் பிகைத்தாயே.


பச்சை முழுப்பொன் னிறமுடனே பளிங்கு பவள முடன்நீலம்
பருத்த மேக முடன்ஆறாய்ப் பரவி யிருக்கும் பசுங்கிளியே
அச்ச மறவே அதன்மீதில் அருண வுதய ரவிகோடி
அகண் டாகார ரூபமதாய் அமர்ந்த சிவமோ கனமாதே
செச்சை யதன்மேல் அணிச்சிலம்புஞ் சிறுகிண் கிணித்தண் டைகளொலிக்கச்
சிவனோ டிருக்குங் கொலுமுகத்தைச் சிறியேன் காண அருள்புரிவாய்
வச்ச உனது பொருள்எனக்கு வரத்தாற் கருத்தில் உரைத்தருள்வாய்
மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம் பிகைத் தாயே

பாடல்கள் மிக அழகான தமிழில் இருக்கின்றன. சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் என்பதால் மிகப் பெரிய விளக்க உரைகள் தேவை இல்லை. ஆனால் அப்பாட்டின் கருத்துக்கள் மிக ஆழமானவை.

பாடல்கள் அனைத்தும் ‘மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம் பிகைத் தாயே’ என்றே முடிகின்றன.

உலக அன்னையின் அனுபவங்களை உணர்ந்தவர்கள் எவ்வாறு மீள முடியும்.

Thursday, May 15, 2014

அரைஞாண் கயிறு அணிவது ஏன்?

அரைஞாண் கயிறு அணிவது ஏன்?

ஆன்மீகம் - எல்லாரும் கட்டும் போது உனக்கு மட்டும் என்ன கேள்வி?

அறிவியல் :
1. பொதுவாக ஆண்களுக்கு குடல் இறக்கம் ஏற்படும். இதை தடுப்பதில் அரைஞாண் கயிற்றின் பங்கு மிக அதிகம்.

2. ஆண்களுக்கு  கால மாற்றத்தால் பொதுவாக விதைப் பைகள் இறக்கம் ஏற்படும். அரைஞாண்  கயிறு கட்டி கோமணம் () லங்கோடு கட்டும் போது இது தடுக்கப்படுகிறது. இதனாலே மலட்டுத் தன்மை என்பது போன தலைமுறையில் மிகக் குறைவாகவே இருந்தது.

Sunday, May 11, 2014

சைவத் திருத்தலங்கள் 274 – திருவாலங்காடு

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள்

·   சிவன் சுயம்பு மூர்த்தி
·   பஞ்ச சபைகளில் ரத்ன சபை
·   இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார், தனது திருவடிகளால் நடந்து நடராஜர் திருவடியில் இருக்கும் இடம்.(பேய் வடிவம் கொண்டு இருக்கும் இடம்)
·   51 சக்தி பீடங்களில் காளி சக்தி பீடம்
·   முன்காலத்தில் இங்கு இருந்த ஆலமரக் காட்டில் சிவன் சுயம்பாக தோன்றி நடனம் புரிந்தததால் வடாரண்யேஸ்வரர்
·   காரைக்கால் அம்மையாரால் மூத்த திருப்பதிகம் பாடப் பெற்ற இடம்
·   கமலத் தேர் அமைப்பு
·   சிவனும் காளியும் ஊர்த்துவ தாண்டவம் ஆடிய இடம்
·   விமானம் செப்புத் தகட்டால் செய்யப்பட்டுள்ளது.

·   வேளாளர்கள் பழையனூர் நீலிக்குக்கொடுத்த வாக்குப்படி உயிர் கொடுத்து, உண்மையை நிலை நாட்டிய இடம்.

  
தலம்
திருவாலங்காடு
பிற பெயர்கள்
வடாரணியம், பழையனூர் ஆலங்காடு
இறைவன்
வடாரண்யேஸ்வரர், தேவர்சிங்கப்பெருமான், ஆலங்காட்டுஅப்பர்
இறைவி
வண்டார்குழலி, மகாகாளி
தல விருட்சம்
பலா
தீர்த்தம்
சென்றாடு தீர்த்தம்முக்தி தீர்த்தம்.
விழாக்கள்
மார்கழி - திருவாதிரை
மாவட்டம்
திருவள்ளுர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 7 மணி முதல் 12 மணி வரை
மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை

அருள்மிகு வண்டார்குழலி உடனுறை வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு-631 210,
திருவள்ளூர் மாவட்டம். 044 - 27872443
பாடியவர்கள்
மூவர் முதலிகளான திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர்,அருணகிரி நாதர், கச்சியப்ப சிவாச்சாரியார், இராமலிங்க அடிகள்
நிர்வாகம்
இந்து சமய அறநிலையத்துறை
இருப்பிடம்
சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் உள்ளது
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 248வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   15 வது தலம்.
வழிபட்டவர்கள் -  கார்க்கோடகன், சுநந்த முனிவர்

வடாரண்யேஸ்வரர்


வண்டார்குழலி


பாடியவர்                     திருநாவுக்கரசர்
திருமுறை                    6ம் திருமுறை 
பதிக எண்                    78
திருமுறை எண்               10

பாடல்

மாலைப் பிறைசென்னி வைத்தார் தாமே
    வண்கயிலை மாமலையை வந்தி யாத
நீலக் கடல்சூ ழிலங்கைக் கோனை
    நெரிய விரலா லடர்த்தார் தாமே
பாலொத்த மேனி நிறத்தார் தாமே
    பழனை பதியா வுடையார் தாமே
சீலத்தா ரேத்துந் திறத்தார் தாமே
    திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.

பொருள்

திருவாலங்காட்டுடை சிவன் எப்படிப்பட்டவர் என்றால் மாலைக்காலத்து சந்திரனை அணிந்தவர், வளம் மிக்க கயிலையை வணங்காதவனும், நீல நிற கடலால் சூழப்பட்ட இலங்கையின் வேந்தனாகிய இராவணனை தனது பெரு விரலால் அழுத்தி துன்பம் அடையச் செய்தவர், வெண்மையான நிறமுடையவர், பழையனுரை தனது உறைவிடமாகக் கொண்டவர், உயர்ந்த ஒழுக்கங்களை உடையவர் போற்றும் திறமுடையவர்.



பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7ம் திருமுறை 
பதிக எண்                    52
திருமுறை எண்               2
பண்                          பழம்பஞ்சுரம்

பாடல்

பொய்யே செய்து புறம்புறமே திரிவேன் றன்னைப் போகாமே     7.52.2
மெய்யே வந்திங் கெனையாண்ட மெய்யா மெய்யர் மெய்ப்பொருளே    
பையா டரவம் அரைக்கசைத்த பரமா பழைய னூர்மேய  
ஐயா ஆலங் காடாஉன் அடியார்க் கடியேன் ஆவேனே.

பொருள்

மனம், வாக்கு மற்றும் காயங்களால் அவற்றுக்கு பொருந்தாத செயல்களைச் செய்து, உன்னிடத்தில் நிலைபெறும் எண்ணங்களைப் பெறாமல் திரிபவனாகிய என்னை, அவ்வாறு போகவிடாமல் தடுத்து என்னை ஆண்ட மெய்பொருளே, உண்மை நிலையினை உணர்ந்தரால் அறியப்பட்ட மெய்ப்பொருளே, ஆடும் நாகத்தினை இடையினில் அணிந்து பழையனுரில் உறைபவனே, திருவாலங்காட்டில் உறைபவனே, அடியேன் என்றும் உன் அடியவர்க்கு அடியவன் ஆவேன்.

கருத்து

பொய் பேசுதல் என்பது தாண்டி பொய்யே செய்து என்பதால் மனம், வாக்கு மற்றும் காயங்களால்
போகாமே என்பதால் தடுத்து நிறுத்தப்பட்ட

புகைப்படம் உதவி - தினமலர்

Thursday, May 1, 2014

சைவ சித்தாந்தம் - சில சிந்தனைகள்

கர்மத்தை அனுஷ்டிப்பதால் ஒருவன் சொர்க்கத்தையும், ஞானத்தை அனுஷ்டிப்பதால்  ஒருவன் மோட்சத்தையும் அடைய முடியும்.

இதை போதிப்பதில் உண்டாகும் வேறுபாடுகளூம் பிரிவுகளும் என்ன?

கர்மத்தை போதிப்பது வேதம்
ஞானத்தை போதிப்பது வேதாந்தம்

வியாசரின் சிஷ்யரான ஜைமினி செய்தது கர்ம சூத்திரம். இது கர்மம் என்பது பிரதானம். அதை மறுத்து வியாசர் செய்தது வேதாந்த சூத்திரம். இது ஞானம் என்பது பிரதானம்.

வியாசரது சூத்திரத்திற்கு பலர் விளக்கம் தந்திருக்கிறார்கள். ஸ்ரீகண்டாச்சாரியார், சங்கராச்சாரியார், பண்டிதாச்சாரியார், இராமானுஜாச்சாரியார் மற்றும் மத்துவச்சாரியார்.

இவர்களில் முதல் மூவரும் சிவனை சிவபிரமானம் உள்ளவர்கள். மற்றவர்கள் விஷ்ணு பிரமானம் உள்ளவர்கள்.

இவர்களின் விளக்கங்கள்

ஸ்ரீகண்டாச்சாரியார் - சமவாதி
சங்கராச்சாரியார் - விவர்த்தவாதி
பண்டிதாச்சாரியார் - ஐக்கியவாதி
இராமானுஜாச்சாரியார்  - விசிஷ்ட்டாத்துவைதி
மத்துவச்சாரியார்துவைதி

இதில் முதல் மூவரும் பதி, பாச விசாரணையில் பேதப்பட்டாலும் சிவனைப் பரம்பொருள் என்று கொண்டதால் அவர்கள் சைவர்கள் என்று பேசப் படுகிறார்கள். என்றாலும் ஸ்ரீகண்டாச்சாரியார் ஸ்வாமிகளே சைவச்சாரியார் என பிரசித்தி பெற்றிருக்கிறார்கள்.

இது தவிர ஆயுர் வேதம், அர்த்த வேதம், தனுர் வேதம் மற்றும் காந்தர்வ வேதம் என்ற வகைகளும் உண்டு. இவைகள் கர்ம காண்டங்களோடு கூடி பயன் தரத் தக்கவை ஆகும்.