Wednesday, May 28, 2014

அவயாம்பிகை சதகம்



சுமார் 200 ஆண்டுகளுக்கு முன், பெற்றோர் செய்த புண்ணியத்தால் ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு  கிருஷ்ணசாமி என்று பெயர் இட்டனர்.

சிறு வயதிலே பெற்றோரை இழந்தார் கிருஷ்ணசாமி.

ஒரு முறை அவரது அழுகுரல் கேட்டு அம்பிகை வந்தாள். அமுது ஊட்டினாள். ஆறுதல் படுத்தினாள். அவ்விடம் அகன்றாள்.

ஒருமுறை கோவிலில் தன் சன்னதிக்கு அழைத்து சென்று மறைந்தாள்.

ஒரு முறை அர்த்த ஜாம வழிபாட்டை முடித்து வரும் போது, கால் இடறி விழுந்தார். விழும் போது 'அம்மா அம்மா' என்று அலறினார்.

அன்று முதல் அர்த்த ஜாம வழிபாடு முடிந்த உடன், யாரும் இல்லாமல் கைவிளக்கு மட்டும் தொடந்து வந்து கொண்டிருந்தது. இதனை கண்ட ஊர் மக்கள் ஆச்சரியப்பட்டனர்.

தன் நிலை குறித்து வருந்தி 'உன்னை எப்படிப் பாடுவது' என்று புலம்பினார்.
'நீ பாடு, பாட்டு தன்னால் வரும் ' என்று உத்திரவிடுகிறாள் அம்பிகை.
உள்ளம் உருகி பாடிய பாடல்களே 'அவயாம்பிகை சதகம்'. மொத்தம் 100 பாடல்கள்.

இவருக்கு திருமணம் நடைபெற்றது, ஆனால் இல்லறம் ஆன்மீகம் சார்ந்த சாக்த வழிபாடாகவே இருந்தது. ஊர் மக்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஒரு அர்த்த ஜாம வழிபாட்டிற்குப் பின் ஜோதியில் கலந்தார்.




கனிந்து கனிந்துன் றனைப்பாடிக் கசிந்தே இருகண் புனல்பெருகக்
காது உபயம் உனதருளாம் கதையைக் கேட்க உனதடியார்
இனந்தான் உறவாய் மனம்புதைய எந்த நாளும் அவர் இருந்த
இடத்தை இருதாள் சுற்றிவர இரவும் பகலும் நினதருளை
நினைந்த படியே சிந்தைசெயும் நெறியை உதவி எனைக்காப்பாய்
நித்யா னந்தப் பழம் பொருளே நிமலி அமலை புகழ்விமலி
வனைந்த சடலத் தொழில்உனது அடிக்கே இதமாய் அருள்புரிவாய்
மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம் பிகைத்தாயே.


பச்சை முழுப்பொன் னிறமுடனே பளிங்கு பவள முடன்நீலம்
பருத்த மேக முடன்ஆறாய்ப் பரவி யிருக்கும் பசுங்கிளியே
அச்ச மறவே அதன்மீதில் அருண வுதய ரவிகோடி
அகண் டாகார ரூபமதாய் அமர்ந்த சிவமோ கனமாதே
செச்சை யதன்மேல் அணிச்சிலம்புஞ் சிறுகிண் கிணித்தண் டைகளொலிக்கச்
சிவனோ டிருக்குங் கொலுமுகத்தைச் சிறியேன் காண அருள்புரிவாய்
வச்ச உனது பொருள்எனக்கு வரத்தாற் கருத்தில் உரைத்தருள்வாய்
மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம் பிகைத் தாயே

பாடல்கள் மிக அழகான தமிழில் இருக்கின்றன. சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் என்பதால் மிகப் பெரிய விளக்க உரைகள் தேவை இல்லை. ஆனால் அப்பாட்டின் கருத்துக்கள் மிக ஆழமானவை.

பாடல்கள் அனைத்தும் ‘மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம் பிகைத் தாயே’ என்றே முடிகின்றன.

உலக அன்னையின் அனுபவங்களை உணர்ந்தவர்கள் எவ்வாறு மீள முடியும்.

No comments:

Post a Comment