Wednesday, February 24, 2016

சைவ சித்தாந்தம் - சில சிந்தனைகள்


மாணவன்

பிரமாணங்கள் குறித்து இன்னும் விளக்க வேண்டும்.

ஆசிரியர்

குடமாய் தோன்றும் பொருள் முன்பு மண்ணில் இருந்தே தோன்றியது. ஆடையாய் தோன்றும் பொருள் நூலில் இருந்தே தோன்றியது. எனவே சூன்யத்தில் இருந்தோ அல்லாதவற்றில் இருந்தோ எந்தப் பொருளும் தோன்றவில்லை. உள்ள பொருளே நிலை மாறியும் வடிவம் மாறியும் வரும். (Energy cannot be created. One form of energy can be converted to another form of energy – Ex. Kinetic energy to Static energy என்பது சிந்திக்கத் தக்கது.) இதுவே சைவ சித்தாந்தத்திற்கு அடிப்படை. இதையே 'மருவுசற் காரியத்தாய்' என உமாபதிச் சிவாச்சாரியார் சிவப்பிரகாச நூலில் குறிப்பிடுகிறார்.

மாணவன்

'தோன்றிய பொருள் தோற்றத்திற்கு முன்னும் உள்ளது' என்பதன் பொருள் 'காணப்படாத நுண்நிலையில் உள்ளது' என்பதன் பொருள் உணர்ந்து கொண்டேன்.எனவே உலகத்தை உள் பொருள் எனத் தயங்காது கொள்வேன்.

காரியப் பொருள்களுக்கு கர்த்தா இன்றியமையாதது

மாணவன்

உலகம் நுண் நிலையில் இருந்து பருநிலைக்கு தோன்றுகிறது எனக் கொண்டால் உலகம் உள் பொருள் என்பதற்கும் அது தானாக தோன்றாமல் அதை தோற்றுவிக்க ஒரு கர்த்தா வேண்டும் என்பது எங்கனம்? '

ஆசிரியர்

இல்லாதது தோன்றாது' என்பது போலவே 'அதை தோற்றுவிக்க ஒரு கர்த்தா வேண்டும்' என்பதே உண்மை.

மண், நூல் ஆகியவை காரணப் பொருள்; குடம், ஆடை போன்றவை காரியப் பொருள். மண், நூல் போன்றவை தானே மாற்றம் கொள்ள இயலாது. அதை கூட்டுவிக்க குயவனும், கோலிகனும் தேவை. எனவே 'உள்ளதாய் நின்று தோன்றும் பொருள்கள் யாவும் செய்வோனை உடையன' . அதுபோலவே உலகத்தை தோற்றுவித்ததற்கு ஒரு கர்த்தா தேவை.

எனவே ஒரு காரியம் நிகழ்த்தப்பட வேண்டுமாயின் 'முதற்காரணம், துணைக்காரணம், நிமித்தக்காரணம்' என மூன்றும் தேவை. குடத்திற்கு மண் முதற் காரணம், தண்டச் சக்கரம் துணைக் காரணம், குயவன் நிமித்த காரணம். அதுபோலவே உலகத்திற்கு மாயை முதல் காரணம், கடவுளது ஆற்றல் துணைக் காரணம், கடவுள் நிமித்த காரணம்.

Wednesday, February 17, 2016

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி




ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி

இப்பழமொழி குறித்து சிந்தனைகள் செய்தது உண்டு.

பொது விளக்கம்.

1. ஆடம்பரமாக வாழும் தாய்
2. பொறுப்பில்லாமல் வாழும் தந்தை
3. ஒழுக்கமற்ற மனைவி
4. துரோகம் செய்யும் உடன் பிறப்புக்கள்
5. பிடிவாத குணம் கொண்ட பிள்ளைகள்

தனி விளக்கம்

உடலில் செயல்கள் அனைத்தும் உயிருடனும் ஆன்மாவுடனும் ஒன்றி ஐந்து தொழில்கள் செய்யும். (காணல், கேட்டல், முகர்தல், ருசித்தல், அறிதல்). இறைவன் பஞ்ச வடிவினன். (ஈசான்யம், தத்புருஷம், அகோரம், வாமதேயம், சத்யோஜாதம்).

பெறுதல் என்பது நிகழ்த்தப்பட வேண்டுமாயின் ஒரு தருபவரும், ஒரு பெறுபவரும் இருக்கப்படவேண்டும். இரண்டுக்கும் இரண்டு வேறுபட்ட நிலைப்பாடுகள் இருக்க வேண்டும்.

பெற்றது கொண்டு, பிழையே பெருக்கி, சுருக்கும் அன்பின்
வெற்று அடியேனை, விடுதி கண்டாய்? விடிலோ கெடுவேன்;
மற்று, அடியேன் தன்னை, தாங்குநர் இல்லை; என் வாழ் முதலே,
உற்று, அடியேன், மிகத் தேறி நின்றேன்; எனக்கு உள்ளவனே

என்ற நீத்தல் விண்ணப்ப திருவாசக வரிகள் நினைவு கூறத் தக்கவை.

எனவே தரும் நிலையில் இருக்கும் இறைவன், வினைகளின் காரணமாக அகங்காரமாக மாயைக்கு உட்பட்டு அரசனாக இருப்பவனை அந்த நிலையில் இருந்து விலக்கி இயம்பு நிலைக்கு திரும்பச் செய்வான்.


ஐந்தொழில் புரியக்கூடிய இறைவனால் அரச கோலம் விலகுதல் என்பது மாயை விலகுதலை குறிக்கும்.

புகைப்படம் : R.s.s.K Clicks

Friday, February 12, 2016

சைவ சித்தாந்தம் - சில சிந்தனைகள்


மாணவன்:

பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருளுக்குரிய பிரமாணங்களை கூறும் முன்  அவற்றின் இயல்புகள் பற்றிக் கூற வேண்டும்.

ஆசிரியர்

பிரமாணம் - வடசொல், அளவை - தமிழ்ச்சொல். அளப்பவன்(பிரமாதாஉயிர் அல்லது ஆன்மா), அளத்தற்கருவி (பிரமாணம் - உயிரின் அறிவாற்றல் அல்லது   ஆன்ம சிற்சக்தி), அளக்கப்படும் பொருள்(பிரமேயம்)

பதி, பசு மற்றும் பாசங்கள்) ஆகிய மூன்றாலே அளத்தல் நிகழும்.

புறப் பொருள்களை அளக்க கருவிகள் இருத்தல் போல், அகக் கருவிகளைஅளக்க அவரவர் அறிவாற்றலே பிரமாணமாகிறது.

தார்க்கியர்கள்(தருக்க நூல் சார்ந்தவர்கள்) கண் முதல் உடல் வரையிலான 5 வகை பொறிகளையே (பஞ்ச இந்திரியங்கள் ) பிரமாணம் என்பார்கள். பஞ்ச இந்திரியங்களும் வேறு ஒரு பொருளாகிய அறிவால் அளக்கப்படுவதாலும், தான் மற்றொன்றினாலும் அளக்கப் படாததுமாகவும், பிறவற்றை அளப்பதாகவும் இருப்பதே உண்மை அளவை. எனவே  தார்க்கியர்கள் கருத்து பொருந்தாது.

மாணவன்:

சைவ சித்தாந்தம் கூறும் இன்றியமையாத பிரமாணங்கள் எவை?

ஆசிரியர்


எண்
பிரமாணம்
விளக்கம்
1
காட்சிஅளவை(பிரத்தியட்சப் பிரமாணம்)
கண்ணால் கண்டேன்
2
கருதலளவை(அனுமானப் பிரமாணம்)
புகை இருப்பதால் நெருப்பு இருக்க வேண்டும்
3
உரையளவை/ஆகமப் பிரமாணம்(சப்தப் பிரமாணம்)
நான் இவரை மதிப்பவன். அதனால் இவர் கூறியதால் செய்கிறேன்
4
இன்மையளவை(அபாவப்/அனுபலத்திப்  பிரமாணம்)
முயற் கொம்பு
5
பொருளளவை(அருந்தாப்பத்தி பிரமாணம்)
இரண்டும் ஒரே அளவாகத் தான் இருக்க வேண்டும்
6
உவமையளவை(உபமானப் பிரமாணம்)
தாமரை முகம்
7
ஒழிபு அளவை(பாரிசேடப் பிரமாணம்)
மல்லிகை வெள்ளைநிறமுடையது என்பதால் அவைகளில் கருமை நிறமுடைய பூக்கள் இல்லை என்பது துணிபு
8
உண்மையளவை(சம்பவப் பிரமாணம்)
இறைவனின் தனிப்பெரும் கருணையினால் இது நிகழ்கிறது
9
வழக்களவை( ஐதிகப் பிரமாணம்)
கார்த்திகைக்குப் பின் கடுமழை இல்லை
10
இயல்பு அளவை( சுபாவப் பிரமாணம்)
சித்திரை மாதத்தில் வெப்பம் இயல்பை விட அதிகம்
  
இவைகளில் முதல் மூன்றும் பிரதானமானவை. மற்றவைகள் அவைகளின் வகையே.

Monday, February 8, 2016

சைவத் திருத்தலங்கள் 274 – திருஇடைச்சுரம்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருஇடைச்சுரம்

மூலவர் - மரகத (பச்சைக்கல்) சிவலிங்கத் திருமேனி; சுயம்பு மூர்த்தி, சதுரபீட ஆவுடையார்
பார்வதிதேவி பசுவடிவில் பால் சொரிந்து இறைவனை வழிபட்டத் தலம்
அகழி அமைப்புடைய கருவறை
சிவஸ்தல யாத்திரையின் போது  நீண்ட தூரம் நடந்து வந்ததாலும், வெயில் ஏறியதாலும் மிகவும் களைப்படைந்த திருஞானசம்பந்தருக்கு இறைவன் இடையன் வடிவில் வந்து தயிர் தந்த ஸ்தலம்
சிவன் மறைந்த குளக்கரை காட்சிகுளம்












தலம்
திருஇடைச்சுரம்
பிற பெயர்கள்
திருவடிசூலம் 
இறைவன்
ஞானபுரீஸ்வரர், இடைச்சுரநாதர்
இறைவி
கோவர்த்தனாம்பிகை, இமயமடக்கொடி அம்மை
தல விருட்சம்
வில்வம்
தீர்த்தம்
மதுரா தீர்த்தம்
விழாக்கள்
மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை

அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோவில்
திருவடிசூலம்
வழி செம்பாக்கம்
காஞ்சீபுரம் மாவட்டம்
PIN – 603108
044 - 27420485, 09444523890
வழிபட்டவர்கள்
அம்பாள் ,கௌதமர், பிருங்கி முனி ,சனற்குமாரர்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் - 1 பதிகம்
நிர்வாகம்
திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாடு
இருப்பிடம்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 271 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   27  வது தலம்.


இடைச்சுரநாதர்



இமயமடக்கொடி


புகைப்படம் : தினமலர்

பாடியவர்             திருஞானசம்பந்தர்       
திருமுறை            1       
பதிக எண்             78      
திருமுறை எண்       8       

பாடல்

தேம் கமழ் கொன்றை அம் திருமலர் புனைவார்;
திகழ்தரு சடைமிசைத் திங்களும் சூடி,
வீந்தவர் சுடலை வெண் நீறு மெய் பூசி,
வேறும் ஓர் சரிதையர்; வேடமும் உடையர்;
சாந்தமும் அகிலொடு முகில் பொதிந்து அலம்பி,
தவழ் கன மணியொடு மிகு பளிங்கு இடறி,
ஏந்து வெள் அருவிகள் எழில் திகழ் சாரல்
இடைச்சுரம் மேவிய இவர் வணம் என்னே?

பொருள்

தேன் மணம் கமழும் அழகிய கொன்றை மலர் மாலையைச் சூடுபவரும், சடைமுடியில் பிறை மதியைச் சூடியவரும், இறந்தவர்களை எரித்து அந்த சுடுகாட்டுச் சாம்பலைத் தம் திருமேனி மீது பூசியவரும், பல்வேறு விதமான புராண நிகழ்வுக்குக் காரணமானவரும், புராண நிகழ்வின் காரணமாக பலப்பல வேடம் வேடம் ஏற்று காட்சி தருபவரும், சந்தனம், அகில் போன்ற வாசனை மிக்க மரங்களின் வாசனைகளை வாங்கி அவற்றின் மணத்தினை ஏற்று மழையாக பொழிய வைத்து அதன் காரணத்தால் உருண்டு வரும் பெரிய மணிகளையும் (ஸ்படிகம்) போன்ற பளிங்குகளையும் வெள்ளமென அடித்து வரும் அருவிகள் விளங்கும் மலைச் சாரலை உடைய இடைச்சுரத்தில் உறையும் பெருமானது இயல்பு யாதோ?

கருத்து

வீந்தவர் - இறந்தவர்.
சாந்தம் - சந்தனம்.


பாடியவர்             திருஞானசம்பந்தர்       
திருமுறை            1       
பதிக எண்             78      
திருமுறை எண்       9       


பாடல்

பலவிலமிடுபலி கையிலொன்றேற்பர்
பலபுகழல்லது பழியிலர்தாமும்
தலையிலங்கவிரொளி நெடுமுடியரக்கன்
றடக்கைகளடர்த்ததோர் தன்மையையுடையர்
மலையிலங்கருவிகண் மணமுழவதிர
மழைதவழிளமஞ்ஞை மல்கியசாரல்
இலையிலவங்கமு மேலமுங்கமழு
மிடைச்சுரமேவிய விவர்வணமென்னே.

பொருள்

பல வீடுகளுக்கு சென்று அவர்கள் இடும் பிச்சையினை தனது ஒரு கையினால் ஏற்பவரும், பலவிதமாக புகழ்ச்சிகள் அல்லது இகழ்ச்சிகள் இல்லாதவரும்(இருமைகள் அற்றவர் எனும் பொருள்) ஏற்பவரும், நீண்ட முடிகளையிம் ஒளி பொருந்திய மகுடங்களையும் தரித்த பத்து தலை இராவணனின் நீண்ட கைகளை நெரித்த வலிமை உடையவரும், மலையில் விழும் ஆர்ப்பரிக்கும் அருவிகள் கொண்டதுமான இளமயில்கள் நிறைந்ததும், மேகங்கள் தவழும் சாரலை உடையதும், இலைகளை உடைய இலவங்கம் ஏலம் கமழ்வதுமான திருஇடைச்சுரத்தில் எழுந்தருளிய இப்பெருமானது இயல்பு யாதோ?

கருத்து

பல இலம் இடு பலி - பல வீடுகளுக்கு சென்று அவர்கள் இடும் பிச்சை.

(இக் கோயில் பற்றி மேலும் விபரம் தெரிந்தால் தெரியப்படுத்தவும்.)