Thursday, February 4, 2016

மகார ப்ரியை - சக்தி பீடங்கள் - 1 - ஹிங்குலாஜ் மாதா


மகாரம் - சக்திச் சுடர் - வாலை சூட்சம்

ஆமப்பா சிவயோகம் செய்வதற்கு
அப்பனே அகாரமுடன் உகாரஞ் சொன்னேன்
தாம்ப்பா மகார மென்ற வாலை தன்னை
தாரணியில் ஆர றிவார் சங்கை மார்க்கம்
காமப்பால் கொண்ட சிவகெங்கை யான்
கன்னி மனோன் மணியின் நாதமென்றும்
நாமப்பா சொல்லுகின்றோம் செந்தேனென்றும்
நாதாந்த நாதமென்றும் காரமாமே  

அகத்தியர் அந்தரங்க தீஷா விதி


சிவயோகம் போன்ற கடுமையான யோகமுறை மார்கங்கள் செய்யும் போது விலங்குகள் மற்றும் மனிதர்களால் தொல்லைகள் ஏற்பட வாய்புண்டு. இதற்காக சித்தர்கள் நெற்றியில் வசிய திலகம் அணிவார்கள். அப்படிப்பட்ட சிவயோகம் செய்ய அகார விளக்கமும் உகார விளக்கமும் சொன்னேன். மகாரம் என்ற வாலையை இந்த பூமியில் யார் அறிவார். (சிவயோக முறைக்கு விளக்கம் உண்டு, வாலை முறைக்கு விளக்கம் இல்லை என்பது மறைபொருள் - எனவே எளிதில் அறியப்பட முடியாதது. குருமுகமாகத் தான் அறிய வேண்டும் என்பதும் மற்றொரு பொருள்). அமுத தாரணை அறிய மகார மென்ற வாலையை அறிய வேண்டும். அவ்வாறு அறிய நீர் வேண்டும். அதுவே சிவ கெங்கைத் தீர்த்தம். இதுவே கன்னி மனோன்மணித் தாயாரின் நாதமென்றும், செந்தேன் என்றும், நாதாந்த நாதமென்றும் நாம் உரைக்கின்றோம்.- 

ஹிங்குலாஜ் மாதா


புகைப்படம் : தினமணி

எண்
குறிப்பு
விளக்கம்
1
தேவியின் பெயர்
ஹிங்குளா / சர்ச்சிகா / கோத்தரி / மஹாலக்ஷ்மி / கோடரீ
2
உடல் பகுதி
ப்ரம்மராந்தரம் (தலையின் ஒரு பகுதி அல்லது உச்சந்தலைப் பகுதி) அல்லது சகஸ்ராரம் (செந்தூரம் வைக்கும் நெற்றிப் பகுதி
3
பைரவர்
பீமலோசன பைரவர் அல்லது சிவபாரி பைரவர்
4
இருப்பிடம்
பாகிஸ்தான் – பலூசிஸ்தான் – லாஸ் பெலா  அருகில் – ஹிங்கோல் ஆற்றங்கரை – ஹிங்குளாஜ் மலைக்குகை - ஹிங்குலாஜ் மாதா சக்தி பீடக் கோவில்
5
வழித்தடம்
பாகிஸ்தான் - கராச்சி -  குவெட்டா (quetta) சாலையில் 120 கி.மீ - ஜீரோ பாய்ண்ட்-மேற்கு நோக்கி லியாரி (lyari) டவுன்- பௌஜி கேம்ப் (fauji camp) - அஸப்புரா சரை (asha pura sarai)
6
வடிவம்


புராணத் தொடர்பு
·   ஹிங்குலிமுன் வகிட்டுக் குங்குமப் பொட்டு (அல்லது) செந்தூரம்
·   ராமன்,சீதை மற்றும்ம் இலக்குவன் ஆகியோர்கள் தங்கள் வனவாசத்தின் போது தரிசித்த தலம்

புராணம் - 1

தற்போதைய சிந்துப் பகுதியை ரத்னசேன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் பரசுராமர் காலத்தைத் சார்ந்தவன். அவனுக்கு ஐந்து மனைவிகள்  அவர்களின் பெயர்கள் சந்திரமுகி, பத்மினி, பத்மா, சுகுமாரி மற்றும் குசாவதி என்பனவாகும். அவர்களின் மகன்கள் முறையே ஜெய்சேன், பிந்துமான், விஷால், சந்திரசால் மற்றும் பரத் ஆகியோராவர். பரசுராமர் இம்மன்னனின் சமகாலத்தவர். எனவே பரசுராமரின் சபதம் (உலகின் அனைத்து சத்திரியர்களையும் அழிப்பேன்) முடிக்கும் காரணமாக இங்கு அவர் வருவது குறித்து அனைவரும் கவலை உற்றனர்.

அதனால் சரஸ்வதி நதிக்கரையில் ஆஸ்ரமம் அமைத்து வாழ்ந்திருந்த ததீசி முனிவரிடம் இவர்கள் அனைவரும் அடைக்கலம் புகுந்தனர்.ரிஷிகளின் ஆஸ்ரம எல்லைக்குள் போரிடக் கூடாதென்று விதியிருந்ததால் பரசுராமர் அங்கு செல்லவில்லை

மன்னன் ஆஸ்ரம எல்லை அறியாது வெளியே சென்றுவிட பரசுராமர் அவனைக் கொன்றார். அவனது மனைவிகள் மன்னனுடன் உடன்கட்டை ஏறினார்கள். ததீசி முனிவர் சேய்களை பாதுகாத்து, அந்த ஐவருக்கும் பிராமணர் போல் வேடமிட்டு வேதங்கள் மந்திரங்கள் முதலிய பல பயிற்சிகளை அளித்திருந்தார். அதனால் பரசுராமர் அவர்களை அடையாளம் காணாது கொல்லாமம் விட்டுச் சென்றார்.

ததீசி முனிவர் அனைவருக்கும் அவர்கள் பாதுகாப்பிற்காக ஹிங்குலா தேவி மந்திரத்தை உபதேசித்தார்.

தன் தம்பிகளுடன் நாட்டிற்கு திரும்பிச் சென்ற ஜெய்சேன் ஹிங்குலா தேவி மந்திரத்தை பாராயணம் செய்து தேவியின் அனுக்ரகம் பெற்று ஆட்சி செய்தான். இதனால் அவனை அடையாளம் கண்ட பரசுராமர் அவனை அழிக்க எண்ணி விரைந்தார். ஹிங்குலா தேவி ஜெய்சேன் பற்றி 'நல்லுள்ளம் படைத்தவனென்றும் அவன் தன் பக்தனென்றும்' கூறி பரசுராமரைத் தடுத்தாள். அதனால் பரசுராமர் கோபம் தணிந்து தேவியை வணங்கித் திரும்பிச் சென்றார். அதனால் ஜெய்சேன் 'ப்ரம்மகுல க்ஷத்ரியன்' ஆனான். ஹிங்குலா தேவி ப்ரம்மகுல க்ஷத்ரியர்களின் குலதெய்வமானாள்

புராணம் – 2

முன்னொரு காலத்தில் கோயில் பகுதியில் ஹிங்கோலி என்ற ஒரு பிரிவினரை  விச்சதர் என்ற மன்னன் ஆட்சி செய்தான். அவனுக்கு ஹிங்குல் மற்றும் சுந்தரன் என்ற இரு மகன்கள் இருந்தனர்.

இளவரசன் சுந்தரன் அண்டை நாட்டின் மீது படையெடுத்து அந்நாட்டு மக்கள் பலரைக் கொன்று பெரும் செல்வத்தைக் கொள்ளை அடித்தால் அப்பகுதி மக்கள் சிவனிடம் தங்கள் குறைகளை முறையிட்டதால் சிவன் விநாயகனை அனுப்பி சுந்தரனை சம்ஹாரம் செய்ய வைத்தார்.

ஹிங்குல் தன் சகோதரன் இறப்பிற்கு பழிவாங்க நினைத்து பல வருடங்கள் தவம் செய்து மூவுலகத்திலும் உள்ள எந்த உயிர்களாலும் தனக்கு மரணம் நிகழக் கூடாதென்றும் சூரிய ஒளி புக இயலாத இடத்தில்தான் தன் உயிர் போக வேண்டுமென்றும் வரம் பெற்றான். pin அனைவரையும் கொடுமைப்படுத்தி பெண்களின் கற்பையும் சூறையாடினான். அதனால் ஹிங்கோலி மக்கள் பவானி மாதாவின் மீது பக்தி செலுத்தி, வழிபட்டு, அரசனின் தவறான எண்ணத்திலிருந்து தங்களைக் காக்க தேவியிடம் உதவி கோரிப் ப்ரார்த்தித்தனர்.

ஒரு நாள் தேவியானவள் அவனை காட்டிற்கு அழைத்து வந்து தோன்றி, மறைந்து, மீண்டும் தன் எட்டுக் கரங்களிலும் வாள், சூலம் போன்ற ஆயுதங்கள் ஏந்தி சிவந்த கோபமான கண்களுடன் இருள் சூழ்ந்திருந்த தோன்றிளாள்.

தனது இறுதி கணம் அறிந்து தேவியிடம் மன்னிப்பு வேண்டி பின் ஒரு, சிலை அமைத்து தன் பெயரிலே வழங்க வேண்டும் என்றும், யார் இவ்விடத்தில் தேவியை உண்மையான பக்தியுடன் வணங்குகிறார்களோ அவருக்கு மீண்டும் பிறவாத வரமருள வேண்டுமெனவும் , மனந்திருந்தி நல்லெண்ணத்துடன் இங்கு வருவோர் நல்லவரோ கெட்டவரோ நீ அவர்களுக்கு உதவ வேண்டும் என்று வேண்டினான்.அவனை அழித்த அன்னை அவ்விடத்திலேயே என்றும் நீங்காது அமர்ந்தாள்.

புராணம் – 3

கிராமம் ஒன்றில் மூன்று சகோதரர்கள்  ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையைச் செய்து வந்தனர். ஒருவன் துணி தைப்பவன். ஒருவன் போர்வீரன்மற்றொருவன் பொற்கொல்லன்  (சோனி ஸொனி) இருந்தனர். அவர்கள் ஒவ்வொரு நாளும் அன்னையை பூஜித்து அவளின் ஆசி பெற்று தம் வேலையைச் செய்து அவரவர் சம்பாதித்ததை வைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்தனர்.

போர் வீரனால் மட்டும் அதிகம் சம்பாதிக்க முடியவில்லை. அதனால் அவன் மனமுடைந்து அன்றிரவு ஹிங்குலாஜ் மாதா கோவிலுக்குச் சென்று தன்னை ஏன் பிடிக்கவில்லை என்று தாயிடம் முறையிட்டு அழுது புலம்ப ‘யாருக்கு என் கையிலுள்ள குங்குமத்தை முதலில் வைக்கிறேனோ அவனே எனக்கு மிகவும் பிடித்தமான பக்தன்’ என்று சொன்னாள்.
 மறுநாள் காலை அவர்கள் வீட்டு வாசலில் தேவி தோன்றினாள்.

துணி தைப்பவன் கைகால் அலம்பச் சென்றான். பொற்கொல்லன் பூப்பறிக்கச் சென்றான். தேவி போர்வீரனை நோக்கி வந்து குங்குமத்தை அவன் நெற்றியில் வைத்தாள். பின் பொற்கொல்லனுக்கும், துணி தைப்பவனுக்கும் குங்குமம் வைத்தாள்.

(இக் கோயில் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

No comments:

Post a Comment