எங்கும் உளபொருளாய், ஓங்கார வடிவமாய், குலத் தெய்வமாக இருக்கும் கணபதியை வணங்குகிறேன்.
'விழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்' என்பதாய், சிவனின் மைந்தனுமாய், சிவனுக்கு உபதேசம் ஈந்தவனுமாகிய குமரவேலின் திருத் தாளினை பணிகிறேன்.
சகல உயிர்களிலும், சகல காலங்களிலும் சதா சர்வ காலமும் உறைந்திருக்கும் ஈசனும், எண்ணமும் சொல்லும் மாறாது என்றும் ஈசனிடம் உறைந்திருக்கும் என் தாயும், அகில நாயகியுமான கருணை
நாயகியின் திருவடியினைப் பற்றுகிறேன்.
என் தாழ் நிலை அறிந்தும், வினாடிக்கும் குறைவான நேரமும் அகலாது என்னை சேய் போல் காத்து, என்னின் அனைத்து நிகழ்வுகளையும் அறிந்து, எக்காலத்திலும் நிறை பொருளாக என்னுள் இருந்து என்னை இயக்கும் எனது குருநாதரின் திருத்தாள் திருவடிகளைப் பணிகிறேன்.
'சக்தி உரை செய் சக்தி எமக்கில்லை'
என்பதால் இது குறித்து பலநாட்களாக எழுதாமல் இருந்தேன். 'உயிர் உறை குருநாதன்' உத்திரவின்
படியே இத் தொடரை துவங்குகிறேன்.
மிகப் பெரிய சக்தியை தன்னுள் இருக்கும் இறை சக்தி மகாரமாக இருக்கிறது. பிரணவ எழுத்துக்களில் மகாரம் முடிவு என்று கொண்டாலும், முழு மந்திர சக்தியினை வெளிப்படுத்தும் எழுத்தாகவே மகாரம் இருக்கிறது.
ஓம் மகார ரூபாய நம என்பதும் மகாரப் ப்ரியை என்பதும் ஒரு பொருளில் வருகிறது. திருமந்திரத்திலும் மகார எழுத்தின் தன்மையும் விளக்கங்களும் மிக நீண்டதாகவே காணப்படுகிறது.
அகரம், உகரம், மகரம், விந்து, நாதம் என்னும் ஐந்துங் கூடிப் பிரணவமாகும்; இவை சூக்கும பஞ்சாக்கரம் எனவும் பெறும்;
"அகார வுகார மகங்காரம் புத்தி
மகார மனஞ்சித்தம் விந்துப் - பகாதிவற்றை
நாம முளவடிவா நாடிற் பிரணவமாம்
போதங் கடற்றிரையே போன்று" - சிவஞானபோத வெண்பா
இவ்வாறு பிரணவப் பொருளின் நாயகமாக இருப்பது மகாரமே.
தந்தையால் அவமானப்படுத்தப்பட்ட தாட்சாயிணி யாகம் அழியுமாறு சாபம் விடுத்தாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார்.. இது தந்தை தந்த உடல் என்று நினைந்து தீயினில் தனது உடலை எரித்தாள். தாட்சாயிணியின் மரணத்திற்குப் பிறகு சிவன் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். அது நிலைபெறாமல் நிகழ்ந்து கொண்டிருந்தது. அதை நிறுத்துவதன் பொருட்டு திருமால் தனது சக்ராயுதத்தால் தாட்சாயணியின் இறந்த உடலை 51 துண்டுகளாக வெட்டினார். இவ்வாறு உடல் விழுந்த பகுதிகள் சக்தி பீடங்களாயின.
இவற்றில் ஐம்பத்தியொரு சக்தி பீடங்கள் அட்சர சக்தி பீடங்கள் என்று கூறப்படுகின்றன. ஐம்பத்தியொரு அட்சரங்கள் பற்றி எல்லா சித்தர்களும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அவளை
அறியா அமரரும் இல்லை
அவளன்றிச்
செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி
ஐவரால் ஆவதொன்று இல்லை
அவளன்றி
ஊர்புகும் ஆறறி யேனே.
எனும்
திருமந்திரம் பாடலுக்கு ஏற்ப அவளை வணங்காத சித்தர்கள் இல்லை.
இந்த பீட நிர்ணயமும் அதற்கான தோத்திர முறைகளையும் பற்றி சிவபெருமான் தேவியிடம் கேட்க, தேவியே தனக்குரிய சக்தி பீடங்கள் பற்றிக் கூறுவதாக அமைந்துள்ளது.
இக்காரணங்கள் பற்றியே மகார ப்ரியை - சக்தி பீடங்கள் எனும் இக்கட்டுரைகள்.
No comments:
Post a Comment