Wednesday, January 18, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – வெருட்சி


ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  வெருட்சி

வார்த்தைவெருட்சி
பொருள்

·         மருட்சி
·         மருளுகை
·         அச்சம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
1.
பகைபிணி மண்ணைபன் மந்தி ரத்தினாம்
மிகையறன் கடையுள *வெருட்சி* பித்திடர்
வகையெனைத் தையுமற மாற்றி யாவர்க்கும்
தகைநல மளிப்பது தவள நீறரோ.

தணிகைப் புராணம்

பகைவரானும் பிணியானும் பேயானும் மாரண மந்திர முதலியவற்றானும் உண்டாகும் பெருந்துயரமும், தீவினையானே உளவாகும். வெருட்சி பித்து முதலியனவுமாகிய துன்பங்களின் வகை எத்தனை இருப்பினும் அவையனைத்தையும் துவரத்தீர்த்து எத்தகையோர்க்கும், அழகும் நலமும் அளிக்குமியல்புடையது திருவெண்ணீறேயாகும்.
2.
ஈறில் பெருந்தவம் முன்செய்து
    தாதை யெனப்பெற்றார்
மாறு விழுந்த மலர்க்கை
    குவித்து மகிழ்ந்தாடி
வேறு விளைந்த *வெருட்சி*
    வியப்பு விருப்போடும்
கூறும் அருந்தமி ழின்பொரு
    ளான குறிப்போர்வார்

பன்னிரண்டாம் திருமுறை - சேக்கிழார்


அளவற்ற தவத்தைச் செய்து இவருடைய தந்தை என அழைத்தற்குரிய சிவபாத இருதயர், பிள்ளையாரை அடிக்க ஓச்சிய சிறுகோலும் நெகிழ, அம்மலர்க் கைகளைக் கூப்பியவாறு மகிழ்ந்து ஆனந்தக் கூத்தாடி, வேறாக விளைந்தனவாய வெருட்சி, வியப்பு, விருப்பு என்ற இவற்றுடன் கூடியவராய்த் தம் பிள்ளையார் எடுத்துச் சொல்லும் அருந்தமிழின் பொருளான குறிப்பை எண்ணலானர்.

No comments:

Post a Comment