Tuesday, January 31, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - சமரம்

ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  சமரம்

வார்த்தைசமரம்
பொருள்

·         யுத்தம்
·         போர்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
அமரும் பதிகேள் அகமாம் எனும் இப்
பிமரம் கெட மெய்ப்பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
*சமரம்* பொரு தானவ நாசகனே.

கந்தர் அனுபூதி


குமாரப்பெருமானே! பிரம்ம தேவரால் ஆணையிடப்பட்டு, அடியேன் (மாயைக்கு உட்பட்டு) விரும்பி ஒன்றாய் வாழும் உறவினர்கள், ஆன்மா ஆகியவற்றை விலக்கி அடியேனின் மயக்கம் கெடுமாறு உண்மைப் பொருளைப் போதித்தவரே! என்றென்றும் குமரனாகவும் இமய மலையரசனின் குமாரி பார்வதிதேவியின் மைந்தனாகவும் இருந்துகொண்டு, போர்க்களத்தில் போரிடும் சூரபன்மன் முதலிய அசுரர்களை அழித்த பெருமானே!.

Monday, January 23, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - சாரிகை


ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  சாரிகை

வார்த்தைசாரிகை
பொருள்

·         வட்டமாக ஓடுதல்
·         ஒருவகையான சுழல்காற்று
·         மைனா போன்ற ஒருவகைக் குருவி
·         சுங்கம்
·         கவசம்
·         போர்க்கவசம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
சென்றவர் தடுத்த போதில்
   இயற்பகை யார்முன் சீறி
வன்றுணை வாளே யாகச்
   *சாரிகை* மாறி வந்து
துன்றினர் தோளுந் தாளுந்
    தலைகளுந் துணித்து வீழ்த்து
வென்றடு புலியே றென்ன
   அமர்விளை யாட்டின் மிக்கார்

பெரிய புராணம் - சேக்கிழார்


உறவினர்கள் அம்மறையவரைத் தடுத்தபோது அதைக் கண்ட இயற்பகை நாயனார், அவர் முன் வெகுண்டு தமக்கு வலிய துணையான வாள்படையைக் கொண்டு, வலம் இடமாகச் சுற்றிவந்து, தம்மோடு எதிர்த்தவர்களின் தோள்களையும், கால்களையும், தலைகளையும் வெட்டி வீழ்த்தி, ஏனைய மிருகங்களை வென்று கொல்லும் ஆண்புலி போலப் போர்த் தொழில் செய்து வெற்றி பெற்றவராக விளங்கினார்.

Sunday, January 22, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - போதம்

ஓவியம் : இணையம்
'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  போதம்

வார்த்தைபோதம்
பொருள்

·         ஞானம்
·         அறிவு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
ஆதி-சங்கரரின் ஆத்ம-போதம், சிவானந்த போதம் போன்றவை இவ்வகையினை சார்ந்தவைகள்.

2.
துரிய நனவா இதமுணர் போதம்
துரியக் கனவா மகமுணர் போதம்
துரியச் சுழுத்தி வியோமம் துரியம்
துரியம் பரமெனத் தோன்றிடும் தானே

திருமந்திரம் - திருமூலர்


துரியத்தில் நனவு நன்மை பயக்கும் சிவ உணர்வில் நிற்பது. துரியத்தில் கனவு என்பது சீவனை அண்ட ஆகாயத்தில் அறிவது. துரியத்தில் சுழுத்தி என்பது நிராதார வானத்தில் பொருந்துவது.துரியத்தில் துரியம் என்பது தன்னையே பரமாக உணர்வது

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - அடுதல்

ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  அடுதல்

வார்த்தைஅடுதல்
பொருள்

·         கொல்லுதல்
·         தீயிற் பாகமாக்குதல்
·         சமைத்தல்
·         வருத்துதல்
·         போராடுதல்
·         வெல்லுதல்
·         காய்ச்சுதல்
·         குற்றுதல்
·         உருக்குதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
இடுதலைச் சற்றும் கருதேனைப் போதம் இலேனை அன்பால்
கெடுதலிலா தொண்டரில் கூட்டியவா கிரௌஞ்ச வெற்பை
*அடுதலைச்* சாத்தித்த வேலோன் பிறவியற இச்சிறை
விடுதலைப்பட்டது விட்டது பாச வினை விலங்கே.

கந்தர் அலங்காரம்


வறியவர்க்குத் தருவதைச் சிறிதும் எண்ணாதவனும் (தர்மம் செய்யாதவனும்), உன்னை அறியும் ஞானம் இல்லாதவனுமாகிய அடியேனை உனது அன்பால் தீமையற்றத் தொண்டர்களுடன் சேர்த்து அருளியவரே! கிரௌஞ்ச மலையை அழித்து முடித்த வேலாயுதக் கடவுளின் அருளால், அடியேனின் பிறவித் துன்பம் அற்றுப் போய் இந்த உடலாகிய சிறைவாசம் முடிவுற்று விடுதலையானேன்; பாசத்தாலும் வினையாலும் வந்த விலங்கும் விட்டு ஒழிந்தது.

Saturday, January 21, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - தோதகம்



ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  தோதகம்

வார்த்தைதோதகம்
பொருள்

·         வருத்தம்
·         வஞ்சகம்
·         சாலவித்தை
·         கற்பொழுக்கமின்மை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
தெள்ளிய ஏனலில் கிள்ளையைக் கள்ளச் சிறுமி எனும்
வள்ளியை வேட்டவன் தாள் வேட்டிலை சிறுவள்ளை தள்ளித்
துள்ளிய கெண்டையைத் தொண்டையைத் *தோதகச்* சொல்லை நல்ல
வெள்ளிய நித்தில வித்தார மூரலை வேட்ட நெஞ்சே.

கந்தர் அலங்காரம்


தெளிவான தினைப்புனத்தில் உள்ள கிளியை ஒத்தவரும் உள்ளத்தைக் கவரும் இளங்குமரியுமான வள்ளியம்மையை விரும்பிய திருமுருகப்பெருமானின் திருவடிகளை நீ விரும்பவில்லை; ஆயினும் சிறிய வள்ளைக் கொடியைத் தள்ளிவிட்டு ஆற்றில் துள்ளித் திரிகின்ற கெண்டைமீன் போன்ற பெண்களின் கண்களையும், கோவைக் கனியொத்த சிவந்த இதழ்களையும், மயக்கும் வஞ்சக வார்த்தையையும், வெண்மையான முத்துப் போன்ற ஒளிவீசும் பற்களுடன் கூடிய புன்சிரிப்பையும் விரும்புகின்றாயே மனமே!.

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - கலாபம்


ஓவியம் : இணையம்


'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  கலாபம்

வார்த்தைகலாபம்

பொருள்

·         பெண்கள் அணியும் இடையணி
·         ஆண் மயிலின் தோகை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு


1.
தேங்கிய அண்டத்து இமையோர் சிறைவிடச் சிற்றடிக்கே
பூங்கழல் கட்டும் பெருமாள் *கலாபப்* புரவிமிசை
தாங்கி நடப்ப முறிந்தது சூரன் தளம் தனிவேல்
வாங்கி அனுப்பிடக் குன்றங்கள் எட்டும் வழிவிட்டவே.

கந்தர் அலங்காரம்


தேவர்களைச் சிறையிலிருந்து விடுவிக்கும் பொருட்டு, தனது சிறிய திருவடிகளில் அழகான வீரக் கழலை அணிந்து கொண்ட முருகப்பெருமான், குதிரையையொத்த தோகையையுடைய மயிலின் மீது ஏறி நடந்ததும் சூரபன்மனின் சேனை முறிபட்டது; ஒப்பற்ற வேலாயுதத்தை எடுத்து ஏவிய உடனே குலமலைகள் எட்டும் விலகி வழிவிட்டன

Wednesday, January 18, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – சிற்சபை


ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  சிற்சபை

வார்த்தைசிற்சபை

பொருள்

·         சிதம்பரநடனசபை. (சிற்றம்பலம்)
·         அக்கினி இருக்கும் புருவமத்தியே ஆன்மஸ்தானமாகிய ”மணியாடும் மன்று எனப்படும் சிற்சபை. சிற்சபை = சிற்+சபை சிற் என்றால் அறிவு என்றும், சபை என்றால் விளங்கும் இடம் என்றும் பொருள் படும். அறிவு விளங்கும் இடம்.
·         16வது படி நிலை ( சுத்த சிவ வெளிகள் )

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
     நினைத்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
          நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண் ணீரதனால் உடம்பு
     நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
          நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
     வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
          மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
     புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
          பொற்சபையில் *சிற்சபையில்* புகுந்தருணம் இதுவே.

திருவருட்பா, ஆறாம் திருமுறை - வள்ளலார்

 உலகியல் வாழ்வில் இருக்கின்ற நன்மக்களே! பலகாலும் நினைந்து பலவகையாலும் உணர்ந்து மனம் நெகிழ்ந்து அன்பு மிக நிறைந்து அதனால் உள்ளத்திலிருந்து ஊற்றுப்போல் பெருகும் கண்ணீரால் உடம்பு நனைந்து அருளார் அமுதமே, நல்ல அருட் செல்வமே; ஞான நடம் புரிகின்ற அரசர் பெருமானே, என்னுடைய உரிமை நாயகனே என்று சொல் மாலைகளைத் தொடுத்து நாம் வழிபடுதற்கு வருவீர்களாக; அவ்வழிபாட்டால் நாம் மரண பயம் இல்லாத பெருமை பொருந்திய வாழ்வில் இன்பமுற வாழலாம். நான் இதனை இல்லது புனைந்து உரைக்கின்றேன் இல்லை; பொய் சொல்லவுமில்லை; சத்தியமாகச் சொல்லுகின்றேன்; பொன் வேய்ந்த சபையிலுள்ள ஞான சபையில் சிவபெருமான் எழுந்தருளும் தருணம் இதுவே என அறிவீராக.

2.
     தெள்ளமு தானான்என்று ஊதூது சங்கே
          *சிற்சபை* அப்பன்என்று ஊதூது சங்கே
     உள்ளம் உவந்தான்என்று ஊதூது சங்கே
          உள்ள துரைத்தான்என்று ஊதூது சங்கே.

திருவருட்பாவள்ளலார்

ஞான சபைக்குத் தலைவனாகிய அவன் என்னுடைய ஞான சபையும் ஆயினான் என்று ஊதுவாயாக; என் மனத்தின்கண் எழுந்த எண்ணங்களைக் கண்டு மகிழ்ந்தான் என்று ஊதுவாயாக; என் மனத்தில் நிலைத்த எண்ணங்களை விரும்பினான் என்று ஊதுவாயாக; என் உள்ளத்தில் நிகழ்ந்தது நிகழ்ந்தபடியே உரைக்கின்றான் என்று சங்கே ஊதுவாயாக.


(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதால் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)