Tuesday, January 3, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – செப்பன்


ஓவியம் : இணையம்


'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  செப்பன்

வார்த்தை :  செப்பன்
பொருள்

·         செவ்வை
·         நடுநிலை
·         சீர்திருத்தம்
·         பாதுகாப்பு
·         செவ்வியவழி
·         தெரு
·         நெஞ்சு
·         மனநிறைவு
·         ஆயத்தம்.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
*செப்பம்* உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.

நடுவுநிலைமை உடையவனின் செல்வவளம் அழிவில்லாமல் அவனுடைய வழியில் உள்ளார்க்கும் உறுதியான நன்மை தரும்.

2.
துப்பனே தூயாய் தூய வெண்ணீறு துதைந்து எழு துளங்கு ஒளி வயிரத்து
ஒப்பனே உன்னை உள்குவார் மனத்தில் உறு சுவை அளிக்கும் ஆர் அமுதே
*செப்பம்* ஆம் மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர் குருந்தம் மேவிய சீர்
அப்பனே அடியேன் ஆதரித்து அழைத்தால் அதெந்துவே என்று அருளாயே

திருவாசகம் - மாணிக்க வாசகர்

பவளம் போன்றவனே! தூய்மையானவனே! தூய்மையான வெண்ணீறு படிந்து தோன்றுகின்ற விளக்கமாகிய ஒளி, வயிரம் போன்று பிரகாசிப்பவனே! உன்னை இடைவிடாது நினைக்கின்றவர் மனத்தில் மிகுந்த சுவையைக் கொடுக்கின்ற அரிய அமுதமே! திருத்தமாகிய வேதங்கள் ஒலிக்கின்ற திருப்பெருந்துறையின்கண் செழுமையான மலர்களையுடைய குருந்த மரநிழலைப் பொருந்திய சிறந்த தந்தையே! அடியேன் அன்போடு அழைத்தால் அஞ்சாதே என்று சொல்லி அருள்புரிவாயாக!.

3.
பாய்ந்தவன் காலனைமுன் பணைத் தோளியொர் பாகமதா
ஏய்ந்தவ னெண்ணிறந்தவ் விமை யோர்க டொழுதிறைஞ்ச
வாய்ந்தவன் முப்புரங்க ளெரி செய்தவன் வக்கரையில்
தேய்ந்திள வெண்பிறைசேர் சடை யானடி *செப்புதுமே*.

தேவாரம் - 3ம் திருமுறை - திருஞான சம்பந்தர்


மார்க்கண்டேயரின் உயிரைக் கவரவந்த காலனைக் காலால் சிவபெருமான் உதைத்தவன் . பருத்த தோள்களை உடைய உமா தேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன் . எண்ணற்ற தேவர்களால் தொழுது போற்றப்படுபவன் . முப்புரங்கள் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவன் . திருவக்கரை என்னும் திருத்தலத்தில் தேய்ந்த வெண்ணிறப் பிறைச்சந்திரனைச் சடையில் சூடி வீற்றிருந்தருளும் அச்சிவபெருமானின் திருவடிகளை வணங்கிப் போற்றுவோமாக !

Monday, January 2, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தெருட்சி

ஓவியம் : இணையம்


அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தெருட்சி

வார்த்தை :  தெருட்சி
பொருள்
  • ·         அறிவு
  • ·         தெளிவு
  • ·         கன்னி ருது


குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
வெருட்சி யேதரும் மலஇரா இன்னும்
    விடியக் கண்டிலேன் வினையினேன் உள்ளம்
மருட்சி மேவிய தென்செய்கேன் உன்பால்
    வருவ தற்கொரு வழியும்இங் கறியேன்
தெருட்சி யேதரும் நின்அருள் ஒளிதான்
    சேரில் உய்குவேன் சேர்ந்தில தானால்
உருட்சி ஆழிஒத் துழல்வது மெய்காண்
    ஒற்றி மேவிய உலகுடை யோனே.

திரு அருட்பா, 2ம் திருமுறை

திருவொற்றியூரில் மேவும் உலகுடைய பெருமானே, வெருட்சியை உண்டுபண்ணும் மலஇருள் இன்னும் என்னை விட்டு நீங்கவில்லை ஆதலால் வினையையுடையனாகிய எனது உள்ளம் மருண்டுள்ளது; அதனால் செய்வது அறியாது உள்ளேன்; உன்னிடம் அடைவதற்கு ஒரு வழியும் இவ்விடத்தில் எனக்குத் தெரியவில்லை; தெளிவினை தரும்  நின்னுடைய அருளொளி எனக்கு கிடைத்தால் உய்யப் பெறுவேன்; அவ்வாறு கிடைக்கா விட்டால் உருண்டோடும் சக்கரம் போன்ற பிறவிச் சூழலில் பட்டு நான் சுழல்வது உண்மை.

2.
மன்னும்பதி கம்அது பாடியபின்
   வயிறுற்றடு சூலை மறப்பிணிதான்
அந்நின்ற நிலைக்கண் அகன்றிடலும்
   அடியேன்உயி ரோடருள் தந்ததெனாச்
செந்நின்ற பரம்பொரு ளானவர்தம்
    திருவாரருள் பெற்ற சிறப்புடையோர்
முன்னின்ற தெருட்சி மருட்சியினால்
   முதல்வன்கரு ணைக்கடல் மூழ்கினரே

பெரிய புராணம் - சேக்கிழார்


நிலைபெறும் அப்பதிகத்தை திருநாவுக்கரசர் அருளிய பின்பு, அவரது வயிற்றில் தங்கி வருத்திய கொடிய சூலை நோயும் அக்கணமே நீங்கிடவும், சிறப்பென்னும் செம்பொருளான சிவ பெருமானின் திருநிறைந்த அருளைப் பெறுதற்கான சிறப்புடைய நாயனார், பொருந்தி நின்ற ஞான மயக்கத்தால் இறைவரின் அருள் ஆகிய கடலுள் மூழ்கி நின்றார்.

Sunday, January 1, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – முகிழ்த்தல்

ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  முகிழ்த்தல்

வார்த்தைமுகிழ்த்தல்
பொருள்

  • ·         அரும்புதல்
  • ·         தோன்றுதல்
  • ·         குவிதல்
  • ·         தோற்றுவித்தல்


குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
பதத்தே உருகி, நின் பாதத்திலே மனம் பற்றி, உன்தன்
இதத்தே ஒழுக, அடிமை கொண்டாய், இனி, யான் ஒருவர்
மதத்தே மதி மயங்கேன், அவர் போன வழியும் செல்லேன்--
முதல் தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ் நகையே*.

அபிராமி அந்தாதி

அன்னையே, முதல் என்று கூறப்படும் மும்மூர்த்திகளும் மற்றுமுள்ள தேவர்களும் போற்றித் தொழுகின்ற புன்னகையையுடையவளே! உன்னுடைய ஞானத்திற்காகவே உருகிநின்ற என்னை உன் பாதத்திலேயே பற்றும்படி செய்து, உன் வழிப்படியே யான் நடக்கும்படி அடிமையாகக் கொண்டவளே! இனி நான் வேறொரு மதத்திலே மன மயக்கம் கொள்ள மாட்டேன். அவர்கள் செல்லும் வழியிலேயும் செல்ல மாட்டேன்.

2.
வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;
மூலைக் கடலினையவ் வான வளையம்
முத்தமிட் டேதழுவி  முகிழ்த்தல் கண்டேன்;
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,
நேரங் கழிவ திலும் நினைப்பின்றியே
சாலப் பலபல நற் பகற்கனவில்
தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்.

சி.சுப்ரமணிய பாரதியார்


அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தழங்குதல்


ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  தழங்குதல்

வார்த்தைதழங்குதல்
பொருள்
  • ·         முழங்குதல்
  • ·         விம்முதல் 
  • ·         முரலுதல்
  • ·         புலம்புதல்
  • ·         பிளிறுதல்
  • ·         பிறங்குதல்


குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
வழங்குகின்றாய்க்கு உன் அருள் ஆர் அமுதத்தை வாரிக்கொண்டு
விழுங்குகின்றேன் விக்கினேன் வினையேன் என் விதி இன்மையால்
தழங்கு_அரும் தேன் அன்ன தண்ணீர் பருக தந்து உய்ய கொள்ளாய்
அழுங்குகின்றேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே

திருவாசகம்மாணிக்க வாசகர்

இறைவனே! உன் அருளாகிய அமிர்தத்தை நீ கொடுக்க, நான் அள்ளியுண்டு நல்லூழின்மையால் விக்கி வருந்து கின்றேன். ஆதலால் எனக்குத் தேன் அன்ன உன் கருணையாகிய தண்ணீரைக் கொடுத்து உய்யக் கொண்டருள வேண்டும். அடியேன் உன் அடைக்கலமே!.

2.
தடம் கொள் வரைச் சாரல் நளுங்கும் மயில் பேடை தழங்கும்
இயல் பாடி அளி சூழ .

திருப்புகழ் - அருணகிரிநாதர்

நீர் நிலைகளைக் கொண்ட மலைச்சாரல்களில் நடுங்குகின்ற மயிலும் அதன் பேடையும் ஒலி செய்யும்படியாக பாடி முரலும் வண்டுகள் சூழ...

3.
சங்கநா தங்க ளொலிப்பத்,தழங்குபொற் கோடு முழங்க,
மங்கல வாழ்த்துரை யெங்கு மல்க, மறைமு னியம்பத்,
திங்களும் பாம்பு மணிந்தார் திருப்பதி யெங்குமுன் சென்று
பொங்கிய காதலிற் போற்றப் புகலிக் கவுணியர் போந்தார் .

பெரிய புராணம் - சேக்கிழார்

சங்குகளின் நாதம் ஒலிசெய்யவும்  விளங்கிய அழகிய கொம்புகள் முழங்கவும்  மங்கலமாகிய வாழ்த்து உரைகள் எங்கும் பொருந்தவும்  முன்னே வேதங்கள் பயிலவும்  சந்திரனையும் பாம்பினையும் அணிந்த சிவபெருமானது திருத்தலங்கள் எங்குமுள்ளனவற்றில் முன் சென்று மேன்மேலும் பொங்கும் விருப்பத்தினுடன் துதிக்க சீகாழிக் கவுணியர் குலதனமாகிய பிள்ளையார் எழுந்தருளிச் சென்றனர்.


Sunday, December 11, 2016

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - ஒல்குதல்


புகைப்படம் :  Bhavia Velayuthan

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' – ஒல்குதல்

வார்த்தை : ஒல்குதல்

பொருள் :
• தளர்தல்
• மெலிதல்
• குழைதல்
• நுடங்குதல்
• சுருங்குதல்
• அசைதல்
• ஒதுங்குதல்
• அடங்குதல்
• வளைதல்
• குறைதல்
• வறுமைப்படுதல்
• மேலேபடுதல்
• மனமடங்குதல்
• கெடுதல்
• நாணுதல்
• எதிர்கொள்ளுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
ஒழுக்கத்தின் *ஒல்கார்* உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து. - 136

ஒழுக்கம் தவறி நடத்தலால் வரும் கேட்டினை அறிந்து ஒருபோதும் ஒழுக்கத்தினின்று விலகாதிருப்பது உள்ளத்தில் ஊக்கமுடையவர்களின் பண்பாகும்.

2.
விண் பிளந்து *ஒல்க* ஆர்க்கும் வானரர் வீக்கம் கண்டான்;
மண் பிளந்து அழுந்த ஆடும் கவந்தத்தின் வருக்கம் கண்டான்;
கண் பிளந்து அகல நோக்கும் வானவர் களிப்பும் கண்டான்;
புண் பிளந்தனைய நெஞ்சன் கோபுரத்து இழிந்து போந்தான்.

கம்பராமாயணம்

வானுலகம் பிளந்து அசையுமாறு ஆரவாரிக்கும் வானர வீரர்களின் பெருக்கத்தைப் பார்த்தான்; ஆடுகின்ற தலையற்ற உடல்களின் கூட்டத்தைப் பார்த்தான்; கண்களை அகலமாகத் திறந்து போர்க்களத்தைப் பார்க்கும் தேவர்களின் மகிழ்ச்சியையும் பார்த்தான்; உடலிலுள்ள புண் பிளந்தது போன்ற துன்பமிக்க உள்ளமுடைய இராவணன்; கோபுரத்திலிருந்து இறங்கி வந்தான்.

3.
இரண கிரண மடமயில் ம்ருகமதம் புளகித இளமுலை இள-
நீர் தாங்கி *நுடங்கிய* நூல் போன்ற மருங்கினள்
இறுகிய சிறுபிறை எயிறு உடை எமபடர் எனது உயிர் கொள வரின்,
யான் ஏங்குதல் கண்டுஎதிர் தான் ஏன்றுகொளும் குயில்
*நுடங்கிய* - ஒல்குதல்,
தேவேந்திர சங்க வகுப்பு, திருப்புகழ்

பொன் நிறத்தவளாகி ஒளி வீசுபவளாகிய மயிலன்ன சாயலை உடையவள் கஸ்தூரி பூசியதும் புளகாங்கிதம் கொண்டதுமான இள நீரின் குரும்பை போன்ற யவ்வன மார்பை தாங்குவதால் ஓடிந்து விடுவது போல் காட்சி தரும் சிறிய நூல் போன்ற நுண் இடையினை உடையவள் இறுக்கி இருக்கும் பிறைச் சந்திரனைப் போன்ற பற்களை உடைய எம தூதர்கள் எனது உயிரை பறித்துப் போக வந்தால் நான் அப்போது அடையும் பெரும் துயரைக் கண்டு, என் எதிரில் தோன்றி, எனக்கு அபயம் அளித்து ஆட்கொண்டு அருளும் குயில் போன்றவள்.

Saturday, September 24, 2016


வாசிப்புகளைத் தொடர எனது http://areshtanaymi.in பக்கத்திற்கு வாருங்கள். நன்றி.