Wednesday, February 15, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - சாற்றுதல்

ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  சாற்றுதல்

வார்த்தைசாற்றுதல்
பொருள்
·         சொல்லுதல்
·         விளம்பரப்படுத்தல்
·         விற்றல்
·         நிறைத்தல்
·         அடித்தல்
·         உணர்த்துதல்
·         சால்தல் - பூசைப் பொருட்களைச் சாற்றுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
1.
1)   சாத்திரம்(சாற்றுதல்) என்ற சொல்லுக்குப் பொருள்  ஒழுங்கு, கட்டளை, வேதம் என பொருள்கள் உண்டு. எனவே சமயக் கருத்துகளை ஒழுங்குபடத் தருகின்ற வேதநூல்களே சாத்திரங்கள்

2)   வைணவ மெய்யடியார்கள் இராமாயணம், பாகவதம், திருவாய்மொழி போன்ற தெய்வீக நூல்களில் கயிறு சாற்றி திருமாளின் திருவுள்ளத்தை அறிந்து கொள்ளும் வழக்கம் உண்டு. இதற்கு கயிறு சாற்றுதல் என்று பெயர்
2.
சாதி  யிரண்டொழிய  வேறில்லை  சாற்றுங்கால்
நீதி  வழுவா  நெறிமுறையின்  -  மேதினியில்
இட்டார்  பெரியோர்  இடாதார்  இழிகுலத்தோர்
பட்டாங்கில்  உள்ள  படி.

நல்வழி - ஔவையார்

சொல்லுமிடத்து, பூமியில் இரண்டு சாதிகள் இன்றி வேறில்லை, நீதி தவறாத நல்வழியில் நின்று  முறையோடு  வறியர் முதலானவர்க்கு கொடுப்பவர்கள் உயர்வாகிய சாதியாகிய பெரியோர்; அவ்வாறு கொடுக்காதவர்கள்  இழிவாகிய சாதியார்; உண்மை நூலில் உள்ள இயற்கை இதுவேயாம்.

துக்கடா
குறில் - இலை
நெடில் - இளை

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - காதலித்தல்

ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  காதலித்தல்

வார்த்தைகாதலித்தல்
பொருள்

·         அன்புகொள்ளுதல்
·         விரும்புதல்
·         பற்று கொள்ளுதல்
·         நேசித்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
முன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்
    மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்
பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
    பெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
    அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
    தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே

தேவாரம் - 6ம் திருமுறை - திருநாவுக்கரசர்

முதலில் சிவபெருமான் என்று அவன் பெயரைக் கேட்டு, அவனுடைய பொன்வண்ணத்தைக் கேட்டு, அவனுடைய ஊராகிய திருவாரூரைக் கேட்டு மீண்டும் அவன்திறத்து நீங்காத காதல் உடையவளாயினாள். தாயையும் தந்தையையும் அன்றே மனத்தால் துறந்தாள். தலைவனையே நினையும் நினைவிலே தான் செய்யும் செயல்களை அறியாது ஒழிந்தாள். கன்னி எனப்படும் தன் பெயர் நீங்கப் பெற்று அவன் உரிமை என்ற பெயரைக் கொண்டாள். அந்நங்கை அத்தலைவன் திருவடிகளை அணைந்து தனக்கென ஒன்றின்றி அவன் வழியளாய் ஒழிந்தாள்.

அகத்துறை பாடல் வரிசையில் வரும் பாடல் இது. நாயக நாயகி பாவத்தில் எழுதப்பட்டது. பரமாத்மாவை தலைவனாகவும் ஜீவாத்மாவை நாயகியாகவும் கொண்டு எழதப்பட்ட பாடல் எனவும் கொள்ளலாம்.

துக்கடா
குறில் - கலை

நெடில் களை

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - பொழிதல்

ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  பொழிதல்

வார்த்தைபொழிதல்
பொருள்

·         சொரிதல்
·         ஈதல்
·         மிகச் செலுத்துதல்
·         மழைபெய்தல்
·         வரையின்றிக்கொடுத்தல்
·         நிறைதல்
·         தங்குதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
கார்க்குன் றமழை யாய்ப்பொழி வானைக்
கலைக்கெ லாம்பொரு ளாய்உடன் கூடிப்
பார்க்கின் றஉயிர்க் குப்பரிந் தானைப்
பகலுங் கங்குலு மாகிநின் றானை
ஓர்க்கின் றசெவி யைச்சுவை தன்னை
யுணரும் நாவினைக் காண்கின்ற கண்ணை
ஆர்க்கின் றகட லைமலை தன்னை
ஆரூ ரானை மறக்கலு மாமே

தேவாரம் - 7ம் திருமுறை - சுந்தரர்

அமைப்பில் மலை போல் கரிய நிறம் கொண்டு மழையாய் நின்று பொழிபவனும், கலைகளுக்கு(64 கலைகள்)  எல்லாம் பொருளாய் அவற்றுள் பொருந்தி நின்று, காணப்படுகின்ற உயிர்களுக்கு இரங்குகின்றவனும், பகலாகியும் இரவாகியும் இருப்பவனும், ஒசையைக் கேட்கின்ற செவியாகியும், சுவையை உணர்கின்ற நாவாகியும், உருவத்தைக் காண்கின்ற கண்ணாகியும், ஒலிக்கின்ற கடலாகியும், மலையாகவுயும் உள்ள திருவாரூர் இறைவனை யான் மறத்தலும் இயலுமோ.

இறைவன் புறப் பொருளாகவும் - அண்டத்திலும் (மேகம் மழை பொழிதல், கலைகளாக இருத்தல், பகல் இரவாக இருத்தல்)  அகப் பொருளாகவும் - பிண்டத்திலும் (நாற்றம், சுவை, ஒளி, ஊறு, ஒலி) இருத்தல் கண்கூடு.

துக்கடா

குறில் - எடு
நெடில் - ஏடு

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - மிழற்றுதல்

ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  மிழற்றுதல்

வார்த்தைமிழற்றுதல்
பொருள்
·         மழலைச்சொல் பேசுதல்
·         மெல்லக் கூறுதல்
·         கொஞ்சுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
அண்டமுறு மேருவரை யங்கிகணை நாணரவ தாகவெழிலார்
விண்டவர்த முப்புரமெ ரித்தவிகிர் தன்னவன் விரும்புமிடமாம்
புண்டரிக மாமலர்கள் புக்குவிளை யாடுவயல் சூழ்தடமெலாம்
வண்டினிசை பாடவழகார்குயின்மி ழற்றுபொழில்  வைகாவிலே.

தேவாரம் -  3ம் திருமுறை - திருஞானசம்பந்தர்

பிரபஞ்சத்தில் எல்லைவரை நீண்டு இருக்கும் பெரிய மேருமலையை வில்லாகவும்,, அக்கினியைக் கணையாகவும், வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் கொண்டு, பகையசுரர்களின் முப்புரங்களை எரிக்குமாறு செய்த சிவபெருமான் விரும்பும் இடமாவது, தாமரை மலர்களில் வண்டுகள் புகுந்து தேனுண்டு விளையாடி, வயல்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள குளங்களிலும் தேனுண்ட மகிழ்ச்சியில் இசைபாட, அதற்கேற்ப அழகிய குயில்கள் கூவுகின்ற சோலைகளையுடைய திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும்.

துக்கடா

குறில் - இடு

நெடில் - ஈடு

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - கரைதல்


ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  கரைதல்

வார்த்தைகரைதல்
பொருள்

·         கரைந்துபோதல்
·         உருகுதல்
·         இளைத்தல்
·         அழைத்தல்
·         சொல்லுதல்
·         அழுதல்
·         உருவழிதல்
·         ஒலித்தல்
·         வருந்துதல்
·         காக்கையின்கூப்பீடு.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப்
பிரித்துணர் வந்த உபாதிப் பிரிவைக்
கரைத்துணர் வுன்னல் *கரைதல்உள்* நோக்கல்
பிரத்தியா காரப் பெருமைய தாமே .

திருமந்திரம் - 10ம் தந்திரம் - திருமூலர்

மனத்தை குவித்தலால், மாயைக்கு உட்பட்டு, அந்த மாயைகளில் சிக்காமல் அவற்றை கடந்து சென்று, கருவி கரணங்களின் தொடக்கையும், ஆன்ம அறிவையும் வேறு பிரித்துக் காணுதலும், அவ்வாறு காணும் காட்சியையும் மெல்ல மெல்ல மறந்து, அறிவு வடிவாகிய இறைவனை உணர்தலும், அந்த உணர்வினால் அவனிடத்து அன்பு மிகப் பெறுதலும், அந்த அன்பினால் அவனிடத்தே அழுந்திக் கிடக்க முயலுதலும் ஆகிய இவையே பிரத்தியாகாரத்தால் அடையும் பெரும் பயன்களாம்.

துக்கடா
குறில் - கலை
நெடில் களை

Sunday, February 5, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - உரைத்தல்

ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  உரைத்தல்

வார்த்தைஉரைத்தல்
பொருள்

·         ஒலித்தல்
·         சொல்லுதல்
·         தேய்த்தல்
·         மாற்றறியத்தேய்த்தல்
·         மெருகிடுதல்
·         பூசுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

முந்தை வினை முழுதும் ஓய *உரைப்பன்* யான்

திருவாசகம்- மாணிக்க வாசகர்

சிவபெருமான் எப்போதும் என் மனத்தில் வீற்றிருப்பதால், அவனது திருவருளை துணையாக கொண்டு, அவனது திருவடி தொழுது நான் ஆனந்தம் அடைதல் பொருட்டும், என் பழவினைகள் கெடுதல் பொருட்டும், சிவனது அநாதி முறைமையான பழமையானதும், எப்போதும் நிலைத்துள்ள சிவ தத்துவங்களையும் உணர்ந்து ஓதுவேன்.

குறிப்பு
------------
'மோய' என்பது வடமொழி, இது 'முற்றிலும் அழிந்து மீள முடியாத வினை' என்ற பொருளைத் தருவதாகும். இவ்வாறு  சிவத்திரு .சு. பிள்ளை அவர்களது உரையிலும் , சிவத்திரு சி.சு . கண்ணாயிரம் ( சிவக்குடில் ) அவர்களது உரையிலும் 'மோய' என்று உள்ளது .

மகாவித்வான் தண்டபாணி தேசிகர் மற்றும்  பேராசிரியர் . . ஞானசம்பந்தன் அவர்களும் வெளியிட்டுள்ள திருவாசகத்தில் அவ்வாறு இல்லை.

துக்கடா
குறில் - கிரி
நெடில் - கீரி