Saturday, July 27, 2013

இறைவழிபாட்டில் வாசனை மலர்களும் வாசனைப் பொருள்களும்

இறைவழிபாட்டில் வாசனை மலர்களையும், மணம் மிக்க பொருள்களையும் சேர்ப்பது ஏன்?

ஆன்மீகம் -  இறைவனுக்கு உகந்தது. அதனால் மகிழ்வு ஏற்படுகிறது.

அறிவியல் - மணம் மிக்க பொருள்கள் உடலினில் மாறுதல் ஏற்படுத்தும். அவைகளை உணரும் போது நீண்ட சுவாசம் நிகழும். அது இதயத்தின் அனைத்து பகுதிகளிலிலும் நீண்ட காற்றினை செலுத்தும். சுவாசம் சீராவதால் உடல் நிலையில் மாறுதல் ஏற்படும்.

முன் காலத்தில் வாசனைப் பொருள்கள் அனைத்தும் இயற்கையானவை. அதன் மூலப் பொருள்கள் உடலில் மாறுதல்களை ஏற்படுத்தும்.

Thursday, July 18, 2013

சைவ சித்தாந்தம் - சில சிந்தனைகள்


குற்றமற்ற ஒன்றும், இயக்க வல்லமை உடையதும், முற்றும் உணர்ந்த ஒருவன் இருக்க வேண்டும். அவனால் மட்டுமே குற்றம் உடைய ஆன்மாக்களை சரி செய்ய முடியும். (தேர்வு எழுதுவனை கண்காணிக்கும் கண்காணிப்பாளர் போல்). அந்த நிலைக்குப் பெயர் சர்வஞ்ஞத்வம்.

எல்லா பொருள்களை அறிவிக்கவும் அதனை அசைவிக்கவும் அவனால் முடியும் எனவே அவன் சர்வவியாபகன்.

பசுவாகிய தன்னை கட்டுப்படுத்த வேறு ஒரு பதி வேண்டும். அவன் எல்லா காலங்களிலும் (பிரளய காலம் உட்பட) எல்லா காலத்திலும் இருப்பதால் நித்யதத்துவம் உடையவன்.

Saturday, July 13, 2013

பெண் - இளமை துறத்தல்

வந்த சிவனடியார் அமுது உண்டு சென்றார்.

பரம தத்தன் பசியோடு வீடு திரும்பினான். புனிதவதியார் அமுது படைத்தார். அதோடு மாங்கனியையும் படைத்தார்.

மிகுந்த பசியோடு இருந்ததால் அவன் சொன்னான் 'இன்னொன்றை எடுத்து வந்து இடுக'.  கணவன் மனைவி இருவருக்கும் இரட்டைகள் என்பது பொதுவானது. (இன்பத்திலும் துன்பத்திலும், வாழ்விலும் தாழ்விலும் - திருமண மந்திரம்). இது விடுத்து அவன் தான் மட்டும் உண்ண  நினைத்தது  தவறானது.


புனிதவதியார் திகைத்தார். இறைவனிடம் சென்று வேண்டினார். மற்றொன்று கிடைத்தது. அதனை அவனிடம் கொடுத்தார் புனிதவதியார். இது வரை அறையா சுவையாக இருந்தது. காரணம் வினவினான் பரம தத்தன்.

நடந்ததை விளக்கிச்சொன்னார் புனிதவதியார்.

பரம தத்தன் நம்பவில்லை. அவன் கூறினான். 'அப்படி எனில் மற்றொன்றை இடுக'.

புனிதவதியார் இறைவனிடம் வேண்டினார். மற்றொன்று கிடைத்தது.

அதைக் கொண்டுவந்து பரம தத்தனின் கைகளில் அதை இட்டதும் அவன் அதை வாங்கினான். வாங்கியதை உணர்ந்ததும் அது மறைந்து விட்டது. பரம தத்தன் திகைத்தான். அவன் சொன்னது 'மற்றொன்றை இடுக' என்றுதானே அன்றி அதை தான் உண்ண வேண்டும் என்று சொல்லவில்லை. எனவே இட்ட உடன் மறைந்து விட்டது.

பரம தத்தன் தெய்வத்திற்கு தீங்கு இழைத்து விட்டதாக நினைத்தான். எனவே வியாபார நிமித்தமாக கடல் மார்க்கமாக பயணம் தொடந்தான்.

நம் பயணமும் கடல் மார்க்கமாக தொடர்கிறது.

Tuesday, July 2, 2013

குடிப்பிறப்பு

மஹாபாரதம் - சாந்தி பர்வத்தில் வரும் கதை.

குட்டி  'அம்மா, ஒரு கத சொல்லேன்'

அம்மா  'அன்னைக்கு ஒடினல, இப்ப ஏன் கத கேக்கற'

குட்டி  'சரிம்மா.  ஒரு டாக் கத, ஒரு எலிஃப்னெட் கத சொல்லு'

அம்மா  'ஒரு ஊர்ல ஒரு ரிஷி இருந்தாராம்.

குட்டி  'பெரிய தாடி வச்சிகிட்டா?'

அம்மா  'குறுக்க பேசாத,அவர்கிட்ட ஒரு நாய் இருந்துதாம்'

குட்டி  'ஜிம்மி மாதிரியா'

அம்மா  'குறுக்க பேசாத, பேசினா கத சொல்ல மாட்டேன்'

குட்டி  'சரி'

அம்மா  'நாய் ரொம்ம சாதுவாம். சமத்தா சாப்பிடுமாம், சமத்தா தூங்குமாம். அவருகிட்கவே இருக்குமாம்'

குட்டி  'ம்'

அம்மா  'ஒரு நாள் ஒரு சிறுத்தபுலி நாய விரட்ட ஆரம்பிடுச்சாம். நாய் ரிஷி கிட்ட வந்து என்னைய சிறுத்தபுலியா கன்வர்ட் பன்னிடுங்க அப்பத்தான் நான் சிறுத்தபுலி கிட்ட இருந்து எஸ்கேப் ஆகமுடியும்  அப்டின்னு சொல்லுச்சாம்'

குட்டி  'ம்'

அம்மா  'அவரும் நாயை சிறுத்தபுலியா மாத்தி காப்பாத்தினாராம்.
இன்னொரு நாள் ஒடிவந்து என்னைய யானை துரத்துது. என்னைய யானை ஆக்குங்க அப்டீன்னு சொல்லுச்சாம்.
அவரும் சிறுத்தபுலியை யானையா மாத்தி காப்பாத்தினாராம்.
இன்னொரு நாள் ஒடிவந்து என்னைய சிங்கம் துரத்துது. என்னைய சிங்கம் ஆக்குங்க அப்டீன்னு சொல்லுச்சாம்.
அவரும் யானையை சிங்கமா மாத்தி காப்பாத்தினாராம்'

குட்டி  'ம்'

அம்மா  'வாயில விரல வைக்காதே. வச்சா கத சொல்ல மாட்டேன்'

குட்டி  'ம்'

அம்மா  'இன்னொரு நாள் ஒடிவந்து என்னைய சரபமிருகம்(சரபேஸ்வரர் போன்றது) துரத்துது. என்னைய சரபமிருகம் ஆக்குங்க அப்டீன்னு சொல்லுச்சாம்.
அவரும் சிங்கத்தை சரபமிருகம் மாத்தி காப்பாத்தினாராம்.
அப்ப சரபமிருகத்திற்கு பயங்கர பலம் வந்துடுச்சாம். அப்பத்தான் அது யோசனை பண்ணுச்சாம். ' நம்மள இப்படி ஆக்கினது மாதிரி வேறயாரையாவது இப்படி ஆக்கி நம்ம மேல ஏவி விட்டா என்ன செய்யறது'
உடனே ரிஷி மேல பாய போச்சாம்.
ரிஷி சொன்னாராம், ' உனக்கு ஹெல்ப் பண்ணத்துக்கு இப்டியா செய்வ, அதனால நீ நாயா போ'

அதற்குள் குட்டி உறங்கி இருந்தாள்.

ரிஷி - அக்னிப்ரபர்

Friday, June 28, 2013

வெறும் தரையில் படுத்து உறங்கக் கூடாது. ஏன்?

வெறும் தரையில் படுத்து உறங்கக் கூடாது. ஏன்?

ஆன்மீகம் - பூதம் தூக்கிப் போய்விடும்(குழந்தைகளுக்காக).

அறிவியல் - புறச் சுழ்நிலைகளால் தரையின் வெப்ப நிலை அதிகமாக இருக்கும். நம் உடல் வெப்ப நிலையோடு ஒப்பிடும்போது இது மிக அதிகம். இதனால் இரத்த ஓட்டம் தடைபடும் மற்றும் குன்றிவிடும். (உ.ம் - சூடான தோசைக் கல்லில் நீர் தெளித்தல்). இதனால் இரத்தம் மற்றும் வெப்பம் சம்மந்தமான வியாதிகள் வரும்.

(கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்தேன் -  தலைவர்  சூப்பர் ஸ்டார்)

Photo : Internet

Thursday, June 27, 2013

சைவ சித்தாந்தம் - சில சிந்தனைகள்

ஆன்மா குற்றங்கள் உடையது என்று கண்டோம்.

சுதந்திரமின்மை கொண்டது ஆன்மா. நினைத்தபடி ஒரு காரியத்தை முடியாமல் இருப்பதைக் கொண்டு இதை அறியலாம். 

பொருள் மீது ஆசை கொள்ளுதல் என்பது அதிருப்தியை உண்டாக்கும். பக்குவமற்ற ஆன்மாக்கள் இச்சை கொண்டு உழலுவதால் அது அதிருப்தி உடையது என அறியலாம்.

தன்னை அறிதல் இயற்கை. தன்னை அறியும் அறிவு இருந்தும் தன்னை அறியும் சக்தி இல்லாமையால் ஆன்மா செயற்கை உணர்வு உடையது.

பிறப்புகள் பலவகைப்படும்.தாவரம்,நீர்வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, மனிதர் மற்றும் தேவர். (புல்லாகி புழுவாகி என்ற மணிவாசக் பெருமானின் வரிகள் நினைவு கூறத்தக்கவை. 

பஞ்ச பூதங்களின் வயப்பட்டு(பிருதிவி, அப்பு, தேயு,வாயு மற்றும் ஆகாயம்) ஆன்மா குற்றங்களை உடையது. எனவே குற்றமற்ற வேறு ஒன்று அதை இயக்க வேண்டும்.  அதன் பொருட்டே ஆன்மாக்களின் பிறப்பு.

Wednesday, June 26, 2013

சோம்பல் தவிர்

மஹாபாரதம் - சாந்தி பர்வத்தில் வரும் கதை - தற்கால வடிவங்களுடன்.

குட்டி -  அம்மா, ஒரு கத சொல்லேன்.

அம்மா - 'ஒரு ஊர்ல ஒரு ஒட்டகம் இருந்துச்சா'

குட்டி - 'ம்'

அம்மா - 'அது சாமிகிட்ட தவம் இருந்து ஒரு வரம் வாங்கிச்சாம்'

குட்டி - 'என்னான்னு'

அம்மா - 'நான் நகந்து போகாம சாப்பிடனும், அதுக்கு என் கழுத்து அவ்வ்வ்வ்வ்வ்வ்ளவு நீளமா வளரனும்'

குட்டி - 'அது எப்படி'

அம்மா - 'அது தான் கதயே. சாமியும் வரம் குடுத்துட்டாராம்'

குட்டி - 'ரொம்ப ஜாலி இல்ல'

அம்மா - 'கதய கேளு. அதுக்கு அப்புறம், அது ஒரு குகையில இருந்து நகராமலே எல்லா மரத்திலேருந்தும் எல்லா இலையையும் சாப்டுச்சாம்'.

குட்டி - 'ம்'

அம்மா - 'அதனால அது ரொம்ப குண்டாயிடுச்சாம்'

குட்டி - 'நம்ம ஆகாஷ் மாதிரி. ஹா ஹா'

அம்மா - 'அப்ப ஒரு பெரிய வெள்ளம் வந்துச்சாம். அதனால அதால நகர முடியலியாம்.

குட்டி - 'ம்'

அம்மா - 'அப்ப வெள்ளத்துல ஒரு நரி வந்துச்சாம். அதுக்கு ரொம்ம பசியாம். அது இந்த ஒட்டகத்தை   சாப்டுடுச்சாம்'

குட்டி - 'ஏன் ஒட்டகம் ஓடலையா'

அம்மா - 'சோம்பேறியா ஒரே இடத்துல இருந்ததால அதால ஓட முடியல. அதனால சோம்பேறியா இருக்கக்கூடாது. ஏய் எங்க ஒடற'

குட்டி - 'விளயாடப் போறேன். நீதான சொன்ன சோம்பேறியா இருக்கக்கூடாதுன்னு'