Sunday, February 5, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - உரைத்தல்

ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  உரைத்தல்

வார்த்தைஉரைத்தல்
பொருள்

·         ஒலித்தல்
·         சொல்லுதல்
·         தேய்த்தல்
·         மாற்றறியத்தேய்த்தல்
·         மெருகிடுதல்
·         பூசுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

முந்தை வினை முழுதும் ஓய *உரைப்பன்* யான்

திருவாசகம்- மாணிக்க வாசகர்

சிவபெருமான் எப்போதும் என் மனத்தில் வீற்றிருப்பதால், அவனது திருவருளை துணையாக கொண்டு, அவனது திருவடி தொழுது நான் ஆனந்தம் அடைதல் பொருட்டும், என் பழவினைகள் கெடுதல் பொருட்டும், சிவனது அநாதி முறைமையான பழமையானதும், எப்போதும் நிலைத்துள்ள சிவ தத்துவங்களையும் உணர்ந்து ஓதுவேன்.

குறிப்பு
------------
'மோய' என்பது வடமொழி, இது 'முற்றிலும் அழிந்து மீள முடியாத வினை' என்ற பொருளைத் தருவதாகும். இவ்வாறு  சிவத்திரு .சு. பிள்ளை அவர்களது உரையிலும் , சிவத்திரு சி.சு . கண்ணாயிரம் ( சிவக்குடில் ) அவர்களது உரையிலும் 'மோய' என்று உள்ளது .

மகாவித்வான் தண்டபாணி தேசிகர் மற்றும்  பேராசிரியர் . . ஞானசம்பந்தன் அவர்களும் வெளியிட்டுள்ள திருவாசகத்தில் அவ்வாறு இல்லை.

துக்கடா
குறில் - கிரி
நெடில் - கீரி

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - அரற்றுதல்


ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  அரற்றுதல்

வார்த்தைஅரற்றுதல்
பொருள்

·         ஆரவாரித்தல்
·         ஒலித்தல்   
·         கதறுதல்   
·         கூப்பிடுதல்
·         பலவுஞ்சொல்லித்தன் குறைகூறுதல்
·         அன்பினால் வாய்விட்டழுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
ஆர்க்கோ *அரற்றுகோ* ஆடுகோ பாடுகோ
பார்க்கோ பரம்பரனே என்செய்கேன் தீர்ப்பரிய
ஆனந்த மாலேற்றும் அத்தன் பெருந்துறையான்
தானென்பார் ஆரொருவர் தாழ்ந்து.

8ம் திருமுறை - மாணிக்கவாசகர்

என்னோடு கூடி நின்று, இன்பப் பித்தேற்றுவான் திருப்பெருந்துறை இறைவனே என்று என்பால் தெளிவிப்பார் ஒருவர் உளராயின் அவரைப் பணிந்து ஆரவாரிப்பேனோ?. அரற்று வேனோ?. ஆடுவேனோ?. பாடுவேனோ?. நான் என் செய்து பாராட்டுவேன்?.


துக்கடா
குறில் - என் - என்னுடைய
நெடில் - எண்எண்ணுதல்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - அறைதல்

ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  அறைதல்

வார்த்தைஅறைதல்
பொருள்

·         அடித்தல்
·         பறைமுதலியன கொட்டுதல்
·         கடாவுதல்
·         சொல்லுதல்
·         துண்டித்தல்
·         மண்ணெறிந்து கட்டுதல்
·         ஒலித்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
வஞ்சகர் விட்ட சினப்போர்
மதவெங் களிற்றினை நோக்கிச்
செஞ்சடை நீள்முடிக் கூத்தர்
தேவர்க்குந் தேவர் பிரானார்
வெஞ்சுடர் மூவிலைச் சூல
வீரட்டர் தம்அடி யோம்நாம்
அஞ்சுவ தில்லைஎன் றென்றே
அருந்தமிழ் பாடி *அறைந்தார்*.

12ம் திருமுறை - சேக்கிழார்


வஞ்சனையுடைய சமணர்கள் விடுத்த, மதமும் சினமும் உடைய யானையை நோக்கிச், `சிவந்த சடை பொருந்திய நீண்ட முடியையுடைய கூத்தரும், தேவர்க்கெல்லாம் தேவரும், வெண்மையான ஒளிபொருந்திய மூவிலைகளையுடைய சூலத்தை ஏந்தியவருமான திருவீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் பெரு மானின் அடியவர் யாம்! அதனால் அஞ்ச வருவது ஏதும் இல்லை.` என்று பாடினார்.

Friday, February 3, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - அசைத்தல்

ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  அசைத்தல்

வார்த்தைஅசைத்தல்
பொருள்

·         ஆட்டுதல்
·         கட்டுதல்
·         சொல்லுதல்
·         இயக்குதல்
·         வருத்துதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
குசை நெகிழா வெற்றி வேலோன் அவுணர் குடர் குழம்பக்
கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின் கொத்து
*அசைபடு* கால்பட்டு அசைந்தது மேரு அடியில் எண்-
திசைவரை தூள்பட்ட அத்தூளின் வாரி திடர்பட்டது.

கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர்

கடிவாளமானது தளராது பிடித்தவாறு வெற்றியை உடைய வேலினை ஏந்திய திருமுருகப்பெருமான், அசுரர்களின் குடல்கள் கலங்குமாறு, சவுக்கினால் அடித்து விரட்டபட்ட குதிரையின் வேகத்திலும் மிக்க வேகத்தைக் கொண்ட மயில்வாகனத்தின் தோகையின் தொகுதி அசைதலினால் உண்டாகின்ற காற்று பட்டு மகாமேரு மலை அசைவுபட்டது. அந்த மயில் அடி எடுத்துவைக்க எட்டுத்திசைகளிலும்உள்ள மலைகள் துகள்பட்டு அழிந்தன. அந்தத் துகளினால் கடலானது மேடாகிவிட்டது.


துக்கடா
குறில் - வேலை - பணி, தொழில்

நெடில் - வேளை - அந்தி, சந்தி போன்றவை

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - அஜபை


ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  அஜபை

வார்த்தைஅஜபை
பொருள்

·         மந்திர வகை
·         ஊமை மந்திரம்
·         வள்ளி நாச்சியார் -  இச்சா சக்தி
·         "ஸோ"என்னும்  சிவ நாமம்
·         வாய்ந்திறந்து பேசாமல் மனதால் உச்சரிக்கப்படும் மந்திரம்
·         ஸப்தவிடங்க க்ஷேத்ரத்தில் ப்ரதானமான  திருவாரூரில் த்யாகராஜா ஆடும் நடனம் ஹம்ஸ நடனம் / அஜபா நடனம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
1)       இடைகலை,பிங்கலை,சுழுமுனை சுவாசத்தால் உண்டாகும் சப்தமே அஜபைபிராணவாயுவை உட்கொள்ளும்போது ஸோ என்றும் நிறுத்தி நிதானிக்கும்போது ,ஹம், என்றும் சப்தம் ஏற்படுவதால் ,ஸோஹம் என்று இந்த அஜபைக்குப் பெயர் ஏற்பட்டது.

2)   பிராண வாயுவை கட்டுப்படுத்தி  சித்த விருத்திகளும் லயமும் அடையும் மனேன்மணி அவஸ்தை

3)       திருமந்திரம் 4ம் தந்திரம் அஜபை என்ற அதிகாரம் வைத்தே ஆரம்பிக்கிறது.

2.
குண்டலி அதனில் கூடிய *அசபை*
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டு எழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்து அறிவித்தே

விநாயகர் அகவல் - ஔவையார்

இடைகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்று மண்டலங்களின் தூண் போன்ற சுழுமுனையின் மூலம் நான்றெழு பாம்பான குண்டலனி சக்தியை எழுப்பி, அதனில் ஒலிக்கும் பேசா மந்திரமான அசபை மந்திரத்தை வெளிப்படுமாறு சொல்லி, மூலாதாரத்தில் மூண்டு எழுக்கூடிய அக்னியை மூச்சுக்காற்றினால் எழுப்பும் முறையை தெரிவித்து........


(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதால் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை - புகலுதல்

ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  புகலுதல்

வார்த்தைபுகலுதல்
பொருள்

·         சொல்லுதல்
·         விரும்புதல்
·         தெரிதல்
·         ஒலித்தல்
·         மகிழ்தல்.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.

பகலுமிரவுஞ்சேர் பண்பினாரும் நண்போரா
திகலுமிருவர்க்கு மெரியாய்த்தோன்றி நிமிர்ந்தாரும்
*புகலும்வழிபாடு* வல்லார்க்கென்றுந் தீயபோய்
அகலும்பழையனூ ராலங்காட்டெம் அடிகளே.

தேவாரம் - முதல் திருமுறை - திருஞான சம்பந்தர்


பகல் இரவு போன்ற வெண்மை கருமை நிறங்களைக் கொண்ட நான்முகனும்(இருமை உடையவன் எனும் பொருளில்) திருமாலும் தங்களிடையே உள்ள உறவு முறையையும் கருதாது யார் தலைவர் என்பதில் மாறுபட்டு நிற்க, அவ்விருவர்க்கும் இடையே எரியுருவாய்த் தோன்றி ஓங்கி நின்றவரும் ஆகம நூல்கள் சொல்லியபடி வழிபாடுகளில் தலை நிற்கும் அடியவர்க்குத் தீயன போக்கி அருள்புரிபவரும் ஆகிய பெருமான் பழையனூர் ஆலங்காட்டு எம் அடிகள் ஆவார்.