Sunday, January 8, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – நண்ணுதல்


ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  நண்ணுதல்

வார்த்தைநண்ணுதல்
பொருள்

·         கிட்டுதல்
·         பொருந்துதல்
·         செய்தல்
·         இருத்தல்.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
புண்ணியம் செய்தனமே-மனமே!- புதுப் பூங் குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால்
*நண்ணி* இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி, நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே.

அபிராமி அந்தாதி

புண்ணியம் செய்திருக்கிறாய் மனமே, புதிதாக மலர்ந்த குவளை மலர்களைப் போன்ற கண்களை உடைய அபிராமி அன்னை, அவளது கணவராகிய, சிவந்த திருமேனியை உடைய சிவபெருமான் இருவரும் நம்மைப் போன்ற அடியவர்கள் மீது மிகுந்த அன்பு வைத்து, நமது தலைகளின்மீது தங்களுடைய தாமரைப் பாதங்களைப் பதித்து அருள் புரிவதற்காக இங்கே வந்து குடிகொண்டிருக்கிறார்கள்.

2.
கண்நுதல் கரும்பே நின்முனம் நீல
          கண்டம்என் றோதுதல் மறந்தே
உண்ணுதற் கிசைந்தே உண்டுபின் ஒதிபோல்
          உன்முனம் நின்றனன் அதனால்
*நண்ணுதல்* பொருட்டோர் நான்முகன் மாயோன்
          நாடிட அடியர்தம் உள்ளத்
தண்ணுதல் கலந்த ஒற்றியில் உன்னால்
          தண்டிக்கப் பட்டனன் அன்றே.

திருவருட்பா - திருவருட்பிரகாச வள்ளலார்

கண் பொருந்திய நெற்றியையுடைய கரும்பு போன்ற சிவனே, உன்னுடைய திருமுன்னர் நின்று நீலகண்டம் என்று ஓதுவதை மறந்து உண்டற்கொருப்பட்டு அமர்ந்து உண்டு பின்னர் ஒதி மரம்போல உன் முன்னே வந்து நின்ற காரணத்தால் உன்னுடைய திருமுடியையும் திருவடியையும் கண்டு உன்னை அடைதற் பொருட்டு நான்முகனும் நாரணனும் தேடி அயரவும், அடியார்களின் உள்ளத்தில் குளிர்ச்சியுண்டாகக் கலந்து கொண்ட உன்னால் திருவொற்றியூரில் நன்கு தண்டிக்கப்பட்டேன்.


Friday, January 6, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தழல்



ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  தழல்

வார்த்தைதழல்
பொருள்

·         நெருப்பு
·         தணல்
·         கார்த்திகை நட்சத்திரம்
·         நஞ்சு
·         கொடு வேலி
·         கவண்
·         சங்ககாலத்தில் காதலன் தன் காதலிக்குத் தரும் விளையாட்டுக் கருவி

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்- அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு- *தழல்*
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்!'

மகாகவி பாரதியார்

2.
கமல நான்முகனும், கார் முகில் நிறத்துக் கண்ணனும், `நண்ணுதற்கு அரிய
விமலனே, எமக்கு வெளிப்படாய்' என்ன, வியன் *தழல்* வெளிப்பட்ட எந்தாய்!
திமில நான்மறை சேர் திருப்பெருந்துறையில் செழு மலர்க் குருந்தம் மேவிய சீர்
அமலனே! அடியேன் ஆதரித்து அழைத்தால், `அதெந்துவே?' என்று, அருளாயே!

திருவாசகம் - மாணிக்கவாசகர்

தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும்m கார்மேகம் போன்ற நிறத்தை யுடைய திருமாலும் அடைவதற்கு அருமையான  தூயவனே,  எங்களுக்கு வெளிப்பட்டுத் தோன்ற வேண்டும் என்று வேண்ட பெரிய அழலுருவத்திலிருந்து  தோன்றிய  எந்தையே;  பேரொலியையுடைய  நான்கு வேதங்களும் பயில்கின்ற  திருப்பெருந்துறையின்கண்  செழுமையான மலர்களையுடைய  குருந்தமர நிழலைப் பொருந்திய  சிறப்புடைய  அடியேனாகிய யான் அன்போடு அழைத்தால் அஞ்சாதே என்று சொல்லி அருள் புரிவாயாக!

3.
தேனோக்குங் கிளிமழலை யுமைகேள்வன் செழும்பவளம்
தானோக்குந் திருமேனி *தழலுருவாஞ்* சங்கரனை
வானோக்கும் வளர்மதிசேர் சடையானை வானோர்க்கும்
ஏனோர்க்கும் பெருமானை யென்மனத்தே வைத்தேனே.

தேவாரம் - 4ம் திருமுறை - திருநாவுக்கரசர்


தேனை ஒத்து இனிமையதாய்க் கிளி மழலை போன்ற மழலையை உடைய உமாதேவியின் கணவனாய், செழும் பவளம் போன்ற செந்நிறமேனியனாய்த் தழல் உருவனாய், எல்லோருக்கும் நன்மை செய்பவனாய், சிவந்த வானத்தை ஒத்த செஞ்சடையில் பிறையைச் சூடியவனாய்த் தேவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தலைவனாகிய பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்துக்கொண்டேன் .

Thursday, January 5, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தையலார்


ஓவியம் : இணையம்

'அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை' –  தையலார்

வார்த்தைதையலார்
பொருள்

  • ·         மாதர்கள்
  • ·         எப்போதும் ஒப்பனையோடிருப்பவர்கள்
  • ·         பெண்களின் தலைவி (தையல் நாயகி)


குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
*தையலார்* மையலிலே தாழ்ந்துவிழக் கடவேனைப்
பையவே கொடுபோந்து பாசமெனுந் தாழுருவி
உய்யும்நெறி காட்டுவித்திட் டோங்காரத் துட்பொருளை
ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.

திருவாசகம் - மாணிக்க வாசகர்

பெண்கள் மயக்கத்தில் தாழ்ந்து விழக் கூடிவனாகிய என்னை, மெல்லக் கொண்டுவந்து பாசம் என்கிற தாழைக் கழற்றி, உய்யும் வழியைக் காட்டி, ஓங்காரப் பொருளையும் எனக்கு அருள் செய்தான். அப்பேற்றைப் பெற வல்லார் வேறு யாவர்?

2.
     அரியது நினது திருஅருள் ஒன்றே
          அவ்வருள் அடைதலே எவைக்கும்
     பெரியதோர் பேறென் றுணர்ந்திலேன் முருட்டுப்
          பேய்களை ஆயிரம் கூட்டிச்
     சரிஎனச் சொலினும் போதுறா மடமைத்
          *தையலார்* மையலில் அழுந்திப்
     பிரியமுற் றலைந்தேன் ஏழைநான் ஒற்றிப்
          பெருமநின் அருளெனக் குண்டே.

திரு அருட்பா

திருவொற்றியூரில் எழுந்தருளும் பெருமானே, நின்னுடைய திருவருள் ஒன்றே அரிய பொருள்; அதனை எய்துவதே பெறப்படும் பொருள்கள் எல்லாவற்றிலும் பெரியதொரு பேறு என்பதை உணராமல், திருந்தாத் தன்மையுடைய ஆயிரம் பேய்களை ஒன்று சேர்த்து உருவாக்கின் ஒரு பெண்ணுக்கு நிகராமெனச் சொல்லின் அதுவும் நிரம்பாது என்னும் அளவு மடமைமிக்க மகளிரின் மயக்கத்தில் மூழ்கி விருப்புற்று ஏழையாகிய யான் அலைந்து வருந்தினேன்; இத்தகைய எனக்கு நின்னுடைய அருள் கிடைக்குமோ? அறியேன்.

3.
வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் *தையலார்* கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.

தேவாரம் - திருஞானசம்பந்தர்


பூம்பாவாய்! வளையல்கள் அணிந்த இளமகளிர் வாழும் வளமான தெருக்களைக் கொண்டுள்ள மாமயிலையில் விளங்கும், தளர்வற்ற கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் பெருமானைக் கார்த்திகைத் திங்களில் நிகழும் விழாக்களின்போது சாந்தணிந்த இளநகில்களைக் கொண்ட மகளிர் திருவிளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?

Wednesday, January 4, 2017

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மயிர்ப்பாலம்

ஓவியம் : இணையம்


அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை –  மயிர்ப்பாலம்

வார்த்தைமயிர்ப்பாலம்(சித்தர்கள் பரிபாஷைச் சொல்)

பொருள்
·         சுழிமுனை
·         புல்லாங்குழல்
·         நதி
·         நெருப்பாறு
·         ராமர் பாலம்
·         ஜோதி ஸ்தம்பம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

1.
மூலப்பதியடியோ மூவிரண்டு வீடதிலே
கோலப்பதியடியோ குதர்க்கத்தெரு நடுவே
பாலப்பதிதனிலே *தணலாய் வளர்ந்த கம்பம்*
மேலப்பதிதனிலே என் கண்ணம்மா
விளையாட்டைப் பாரேனோ

அழுகணிச் சித்தர் பாடல்கள்

புருவ மத்தியில்  பஞ்சேந்திரிய சத்திகள் கூடுவதினால் உண்டான மூலாக்கினி நெருப்பாறு மயிர்ப்பாலம் என்னும் சுழிமுனை நாடி வழியே மேலேறிசுழிமுனை அடைந்து , ஆத்ம சொரூபத்தை சூழ்ந்துள்ள திரைகள்மலங்களை எரித்து ஆத்மாவை விளக்கி அதன் அசைவை ஆட்டத்தை என் கண்ணால் பார்க்கின்றேன்

2.

*ஏறுமயிர்ப் பாலம்உணர்* விந்தவிட யங்கள்நெருப்
பாறெனவும் நன்றாய் அறிந்தேன் பராபரமே.

தாயுமானவடிகள் திருப்பாடல்கள்

ஆருயிரின் உணர்வு ஏறி நடந்துசெல்லும் மயிர்ப்பாலம் போன்றது, ஐம்புல நுகர்வுகள் அம் மயிர்ப் பாலத்தின்கீழ் ஓடும் நெருப்பாறோடொக்கும். (அதனால் விழிப்பாக நடத்தல் வேண்டும்)

3.

தானென்ற முப்பாழில் மும்மலமும் நீக்கித்
தற்பரத்துக் கப்பால் *மயிர்ப்பாலமீதில்*
வானென்ற நெருப்பாறுக்கு அப்பாற்சென்று
மகத்தான பரவெளியில் மனதொடுங்கி
கோனென்ற வெளியொளியில் தானே தானாய்
குவிந்திருந்த சிவயோக ஞானந்தானாய்
ஊனென்ற வாதியந்தந் தானே தானாய்
 உகந்திருப்பார் சிவஞான முணர்ந்தோர்காணே

அகத்தியர் சௌமிய சாகரம்

மேம்பட்டவைகளுக்கு அப்பால்( புற நிலைகள்) மயிர்ப்பாலம், நெருப்பாறு ஆகிய உயருணர்வு கடக்கும் நிலைகளை உணர்த்து (அக நிலைகள்), ஆகாயத்தில் மனதை ஒடுங்கச் செய்து, தூய வெளியின் ஒளியாய் தானே அதுவுமாய்(அஃதாவது அதன் சாரங்களைப் பெற்று) மனதைக் குவித்து சிவயோக ஞானமும் தன்னுள் உணர்ந்து, ஊன் என்ற உடலின் தொடக்கம் மற்றும் முடிவு அறிந்து அதன் வழியில் (மாறாமல்) அதனுடன் இணக்கமாக இருப்பார்கள் சிவஞானம் உணர்ந்தவர்கள்.

(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதால் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)