Monday, February 1, 2016

சைவத் திருத்தலங்கள் 274 – திருகாளத்தி

• மூலவர், சுயம்பு - தீண்டாத் திருமேனி. கங்கைநீர் மட்டும் படுமாறு அமைப்பு
• மிகவும் உயரமான சிவலிங்கத் திருமேனி. அடிப்பாகம் -  சிலந்தி வடிவம், மத்தியில் யானையின் இருதந்தங்கள், வலப்பக்கம் கண்ணப்பர் கண் அப்பிய வடு,  மேற்புறம் ஐந்து தலை நாகம் போலவே காட்சி அமைப்பு. ஆவுடையார் பிற்காலத்தில் கட்டப்பட்டது. சுவாமி மீது கரம் தீண்டாமல் இருக்க இருபத்தேழு நட்சத்திரங்களும் பொறிக்கப்பட்ட தங்கக் கவசம். அகழி அமைப்புடைய  கருவறை  
• அம்பாள் - ஞானப்பூங்கோதை நின்ற திருக்கோலம்; திருவடியில் ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 'அர்த்த மேரு '. அம்பாள் இருப்பு ஒட்டியாணத்தில் 'கேது ' உருவம்.
• அகத்தியர் விநாயகரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு அருள் பெற்ற தலம் - பாதாள விநாயகர் சந்நிதி
• பஞ்சபூத தலங்களுள்  - வாயுத் தலம் ஆதலால் மூலவர் எதிரில் கதவருகில் உள்ள இரு தீபங்கள் காற்றினால் மோதப்பெற்றதுபோல் எப்போதும் அசைந்து கொண்டு
• சுவர்ணமுகி எனப்படும் பொன்முகலி ஆறு வடக்கு முகமாகப் பாய்ந்து ஓடுவதால் உத்தரவாகினி
• நக்கீரர் இங்கு தங்கி பொன்முகலி  நதியில் நீராடி இறைவனைத் தொழுது வெப்பு நோயிலிருந்து முழுமையாக நீக்கம் பெற்றத் தலம்
• ராகு, கேது க்ஷேத்ரம்
• வேடனான (திண்ணன்) கண்ணப்பருக்கு அருள் காட்சி கிடைத்தத் தலம்
• சிலந்தி - பாம்பு - யானை ஆகிய மூன்றும் வழிபட்டுப் பேறு பெற்ற சிறப்புடைய தலம்
• சண்டேசுவரர் சந்நிதி - மூலவர் பாணம் (முகலாயர் படையெடுப்பின்போது மூல விக்ரகங்களையும்,செல்வத்தையும் காப்பாற்றுவதன் பொருட்டு அமைக்கப்பட்டது)
• கோயில் அமைப்பு -  அப்பிரதக்ஷண வலமுறை(வலமிருந்து இடம்)
• இரு கொடி மரங்கள் -  ஒன்று கவசமிட்டது; மற்றொன்று ஒரே கல்லால் ஆன 60 அடி உயரமுள்ள கொடி மரம்
• சர்ப்ப தோஷம் நீங்கும் தலம்
• ஸ்படிகலிங்கம் - ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்தது
• 'இரண்டு கால் மண்டபம் '  - 2 கால்களை நிறுத்தி சுவரோடு சேர்த்துக் கட்டப்பட்ட சிறிய மண்டபம் சுவரோரமாக
• சொக்கப்பனை கொளுத்தி, எரிந்தவற்றை அரைத்து  (ரக்ஷை) சுவாமிக்கு கறுப்புப் பொட்டாக இடும் வழக்கம்
• பிரதான கோபுரம் 'தக்ஷிண கோபுரம்'
• சம்பந்தர், இங்கிருந்தவாறே கயிலாயம், கேதாரம், கோகர்ணம், திருப்பருப்பதம், இந்திரநீலப்பருப்பதம் முதலிய தலங்களைப் பாடித் தொழுதார்.
• அப்பர் காளத்தி வந்து தொழுதபோது வடகயிலை நினைவு வர, கயிலைக் கோலம் காண எண்ணி, யாத்திரையைத் தொடங்கினார். 
• சுந்தரர் இறைவனைப் பாடி, இங்கிருந்தவாறே திருப்பருப்பதம், திருக்கேதாரம் முதலிய தலங்களைப் பாடிப் போற்றினார்.
• நதி-நிதி-பர்வதம். நதி என்பது சந்திரகிரிமலையில் தோன்றிப் பாய்ந்து வருகின்ற சுவர்ணமுகி-பொன்முகலி ஆறு, நிதி - அழியாச் செல்வமான இறைவி, இறைவன், பர்வதம் - கைலாசகிரி.
• நம் ஆறு ஆதாரங்களில்  விசுத்தி(இதயம்) − திருகாளத்தி என்று பரஞ்சோதி முனிவரால் குறிப்பிடப்படும் இடம்




தலம்
சீகாளாத்தி, திருகாளாத்தி, காளஹஸ்தி
பிற பெயர்கள்
தட்சிண (தென்) கயிலாயம், கைலாசகிரி, கண்ணப்பர் மலை, அகண்டவில்வாரண்யம், பாஸ்கரக்ஷேத்திரம்
இறைவன்
ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி, காளத்திநாதர், குடுமித்தேவர்
இறைவி
ஞானப்பிரசுன்னாம்பிகை, ஞானப் பூங்கோதை
தல விருட்சம்
மகிழம்
தீர்த்தம்
ஸ்வர்ணமுகி, பொன்முகலியாறு.
விழாக்கள்
மாவட்டம்
சித்தூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 8.00 மணி வரை,

அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்
காளஹஸ்தி - அஞ்சல் - 517 644
சித்தூர் மாவட்டம் - ஆந்திர மாநிலம்.
வழிபட்டவர்கள்
பாம்பு, யானை, சிவகோசரியார், கண்ணப்பர் ,கிருஷ்ணதேவராயர், சிலந்தி,  அவருடைய மனைவி, சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர், சப்தரிஷிகள், சித்திரகுப்தர், யமன், தருமர், அர்ஜுனன், வியாசர்,முசுகுந்தன், பரத்வாஜ மகரிஷி,
பாடியவர்கள்
வீரைநகர் ஆனந்தக் கூத்தர் - திருக்காளத்திப் புராணம்; கருணைப் பிரகாசர், ஞானப் பிரகாசர், வேலப்ப தேசிகர் ஆகிய மூவரும் சேர்ந்து பாடிய தலபுராணம், திருஞான சம்மந்தர் - 2 பதிகங்கள், திருநாவுக்கரசர் - 1 பதிகம், சுந்தரர் - 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
ஆந்திரா மாநிலத்தில் சித்தூர் மாவட்டம். ரேணிகுண்டா - கூடூர் இரயில் மார்க்கத்தில் உள்ள இருப்புப்பாதை நிலையம். திருப்பதியிலிருந்து 40 கி. மீ. தொலைவு
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 251 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   19 வது தலம்.

ஞானப் பூங்கோதை உடனாகிய ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி


புகைப்படம் : தினமலர்

பாடியவர்                திருநாவுக்கரசர்    
திருமுறை               6     
பதிக எண்               08   
திருமுறை எண்          7    

பாடல்

கரியுருவு கண்டத்தெங் கண்ணு ளான்காண்              
கண்டன்காண் வண்டுண்ட கொன்றை யான்காண்
எரிபவள வண்ணன்காண் ஏகம் பன்காண்   
எண்டிசையுந் தானாய குணத்தி னான்காண்
திரிபுரங்கள் தீயிட்ட தீயா டிகாண்     
தீவினைகள் தீர்த்திடுமென் சிந்தை யான்காண்
கரியுரிவை போர்த்துகந்த காபா லிகாண்     
காளத்தி யானவனென் கண்ணு ளானே.

பொருள்

கரிய நிறமுடைய கண்டத்தை உடையவனாகவும், எனது விழிகளுக்குள் இருப்பவனாகவும், (அடியவர்களுக்காக அவர்களின் அன்புக்கு கட்டுப்பட்டு) வரையறைப்பட்டவனாக இருப்பவனாகவும், வண்டுகள் நுகரும் கொன்றைப் பூக்களை சூடியவனாக இருப்பவனாகவும், ஒளி வீச்சுடைய பவள வண்ணனாக இருப்பவனாகவும், ஏகம்பனாக இருப்பவனாகவும், எட்டு திசைகளையும் தன் குணமாக கொண்டவனாக இருப்பவனாகவும், முப்புரங்களையும் தீயினால் எரித்து அவ்வண்ணம் எரித்த பின்னரும் அதில் கூத்து நிகழ்த்துபவனாக இருப்பவனாகவும், எனது தீவினைகளை அழித்து என் சிந்தனையின் இருப்பவனாகவும், யானையின் தோல் உரித்து அதை தனது ஆடையாக அணிந்தவனாக இருப்பவனாகவும், காபால கூத்து ஆடுபவனாக இருப்பவனாகவும் இருக்கும் காளத்தியான் என் கண் உள்ளான்.

கருத்து

·         கரி உருவு-கரிபோன்ற நிறம்; கரிந்த உருவம்
·         'எம் கண் உளான்' - எம்மைப் போன்ற அடியவர் கண்ணில் உள்ளான்
·         கண்டன்-வரையறைப்பட்டவன்
·         எரி பவளவண்ணன்-நெருப்பும் பவழமும் போன்ற நிறமுடையவன்
·         'குணம்' - முற்றும் உணர்தல். இயக்குதலும் தானே எனப் பொருள் பெறப்படும்.
·         தீர்த்திடும்'  -  எச்சம்,  தீர்த்திடுவான்


பாடியவர்            சுந்தரர்        
திருமுறை           7      
பதிக எண்           26        
திருமுறை எண்      8          

பாடல்

நீறார் மேனியனே நிமலாநினை யன்றிமற்றுக்
கூறேன் நாவதனாற் கொழுந்தேயென் குணக்கடலே
பாறார் வெண்டலையிற் பலிகொண்டுழல் காளத்தியாய்
ஏறே யுன்னையல்லால் இனிஏத்த மாட்டேனே.

பொருள்

திருநீறு அணிந்த திருமேனியை உடையவனே, தூயவனே, மிகவும் உயர்ந்தவனே, முதன்மையானவனே, தசை நீங்கிஎலும்பு மாத்திரமாகிய தலை பிச்சை பாத்திரமாக ஏற்று திரிபவனே,எட்டு வகையான குணங்கள் கொண்டவனே அடியேன் உன்னை யறிந்தபின் உன்னையன்றிப் பிறர் ஒருவரைப் போற்றுதலே இலன் ; என் நாவால் ஒன்று செய்வதாயின் , உன்னையன்றி மற்றொரு பொருளைச் சொல்லுதல்தானும் இலேன் ; ஆகவே நீ எனக்கு அருள் செய்தல் வேண்டும்

கருத்து

கொழுந்து - உச்சிக்கண் நிற்பதாகலின்  உயர்ந்த பொருளை -  கொழுந்து  உவமம்
என் குணக் கடலே  - எட்டு வகையான குணங்களுக்கு உரியவன், சிவன்



Reference

·         'அட்டமாசித்திகள் அணைதரு காளத்தி ' எனச் சிறப்பிக்கப்படும் அற்புதத் தலம்.
·         ‘கயிலை பாதி காளத்தி பாதி ' என்று நக்கீரரால்  பாடப்பட்ட பெருமை உடைய தலம்.



இக் கோயில் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்.

Friday, January 29, 2016

மகார ப்ரியை - சக்தி பீடங்கள் - 51- முன்னுரை



எங்கும் உளபொருளாய், ஓங்கார வடிவமாய், குலத் தெய்வமாக இருக்கும் கணபதியை வணங்குகிறேன்.

'விழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்' என்பதாய், சிவனின் மைந்தனுமாய், சிவனுக்கு உபதேசம் ஈந்தவனுமாகிய குமரவேலின் திருத் தாளினை பணிகிறேன்.

சகல உயிர்களிலும், சகல காலங்களிலும் சதா சர்வ காலமும் உறைந்திருக்கும் ஈசனும், எண்ணமும் சொல்லும் மாறாது என்றும் ஈசனிடம் உறைந்திருக்கும் என் தாயும், அகில நாயகியுமான கருணை நாயகியின் திருவடியினைப் பற்றுகிறேன்.

என் தாழ் நிலை அறிந்தும், வினாடிக்கும் குறைவான நேரமும் அகலாது என்னை சேய் போல் காத்து, என்னின் அனைத்து நிகழ்வுகளையும் அறிந்து, எக்காலத்திலும் நிறை பொருளாக என்னுள் இருந்து என்னை இயக்கும் எனது குருநாதரின் திருத்தாள் திருவடிகளைப் பணிகிறேன்.

'சக்தி உரை செய் சக்தி எமக்கில்லை' என்பதால் இது குறித்து பலநாட்களாக எழுதாமல் இருந்தேன். 'உயிர் உறை குருநாதன்' உத்திரவின் படியே இத் தொடரை துவங்குகிறேன்.

மிகப் பெரிய சக்தியை தன்னுள் இருக்கும் இறை சக்தி மகாரமாக இருக்கிறது. பிரணவ எழுத்துக்களில் மகாரம் முடிவு என்று கொண்டாலும், முழு மந்திர சக்தியினை வெளிப்படுத்தும் எழுத்தாகவே மகாரம் இருக்கிறது.

ஓம் மகார ரூபாய நம என்பதும் மகாரப் ப்ரியை என்பதும் ஒரு பொருளில் வருகிறது. திருமந்திரத்திலும் மகார எழுத்தின் தன்மையும் விளக்கங்களும் மிக நீண்டதாகவே காணப்படுகிறது.

அகரம், உகரம், மகரம், விந்து, நாதம் என்னும் ஐந்துங் கூடிப் பிரணவமாகும்; இவை சூக்கும பஞ்சாக்கரம் எனவும் பெறும்;

"அகார வுகார மகங்காரம் புத்தி
மகார மனஞ்சித்தம் விந்துப் - பகாதிவற்றை
நாம முளவடிவா நாடிற் பிரணவமாம்
போதங் கடற்றிரையே போன்று"  - சிவஞானபோத வெண்பா

இவ்வாறு பிரணவப் பொருளின் நாயகமாக இருப்பது மகாரமே.

மகாரத்தின் போது(அதாவது மகார உச்சரிப்பில்  ம்- பீஜம் )  கும்பகம் எளிதில் கைவரப் பெறும்.இதில் பூரண கும்பகமும், கேவல கும்பகமும் எளிதில் கைகூடும்.


தந்தையால் அவமானப்படுத்தப்பட்ட தாட்சாயிணி  யாகம் அழியுமாறு சாபம் விடுத்தாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார்..  இது தந்தை தந்த உடல் என்று நினைந்து தீயினில் தனது உடலை எரித்தாள். தாட்சாயிணியின் மரணத்திற்குப் பிறகு சிவன் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். அது நிலைபெறாமல் நிகழ்ந்து கொண்டிருந்தது. அதை நிறுத்துவதன் பொருட்டு திருமால் தனது சக்ராயுதத்தால் தாட்சாயணியின் இறந்த உடலை 51 துண்டுகளாக வெட்டினார். இவ்வாறு உடல் விழுந்த பகுதிகள் சக்தி பீடங்களாயின. 

இவற்றில் ஐம்பத்தியொரு சக்தி பீடங்கள் அட்சர சக்தி பீடங்கள் என்று கூறப்படுகின்றன. ஐம்பத்தியொரு அட்சரங்கள் பற்றி எல்லா சித்தர்களும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அவளை அறியா அமரரும் இல்லை
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவளன்றி ஐவரால் ஆவதொன்று இல்லை
அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே.

எனும் திருமந்திரம் பாடலுக்கு ஏற்ப அவளை வணங்காத சித்தர்கள் இல்லை.

இந்த பீட நிர்ணயமும் அதற்கான தோத்திர முறைகளையும் பற்றி சிவபெருமான் தேவியிடம் கேட்க, தேவியே தனக்குரிய சக்தி பீடங்கள் பற்றிக் கூறுவதாக அமைந்துள்ளது.

இக்காரணங்கள் பற்றியே மகார ப்ரியை - சக்தி பீடங்கள் எனும் இக்கட்டுரைகள்.

Wednesday, January 27, 2016

சைவத் திருத்தலங்கள் 274 – திருஊறல்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் - திருஊறல்


• இறைவன் - சுயம்பு மூர்த்தி
• நந்தியின் வாயிலிருந்து ஒரு காலத்தில் நீர் விழுந்து கொண்டிருந்ததாலும், இறைவன் திருவடியில் நீர் சுரப்பதாலும் இவ்வூருக்கு திருஊறல்
• தக்கன் நடத்திய யாகத்தை அழித்து அவன் தலையை வீரபத்திரர் தலையைக் கொய்த தலம்
• தக்கன் தனக்கு அழிவு வரும் நிலையைக் கண்டு "ஓ" என்று ஓலமிட்டதால் தக்கோலம்
• பிரகஸ்பதியின் தம்பி உத்தி முனிவரின் மகன் தீர்க்கதா. அவர் யாகம் நடத்தும் சமயம் அங்கு வந்த காமதேனு பசுவினை அங்கு தங்க கூறுதல். காமதேனு மறுத்தல், அதனால் காமதேனுவினை கட்ட முயல சாபம் பெறுதல். நாரதரின் அறிவுரைப்படி ஈசனை பூஜித்து சாப விமோசனம் பெறுதல். உததி முனிவர் வழிபட்டு வேண்டிக்கொண்டதால் நந்தியெம்பெருமான் தன்வாய் வழியாக கங்கையை வரவித்த சிறப்புடையது இத்தலம்
• நர்த்தன நிலையில்(உக்கடி ஆசனத்தில்) தட்சிணா மூர்த்தி
• நிறம் மாறும் லிங்கம்(உத்ராயணம் - சிகப்பு நிறம், தட்சிணாயனம் - வெண்மை நிறம்)


தலம்
திருஊறல்
பிற பெயர்கள்
தக்கோலம்
இறைவன்
ஜலநாதேஸ்வரர், ஜலநாதீஸ்வரர் உமாபதீசர்
இறைவி
கிரிராஜ கன்னிகாம்பாள்(மோகன வல்லியம்மை)
தல விருட்சம்
தீர்த்தம்
பார்வதி சத்ய கங்கை தீர்த்தம், குசத்தலை நதி
விழாக்கள்
வைகாசி விசாகம், ஆனிதிருமஞ்சனம், ஆடிப்பூரம், மார்கழி திருவாதிரை, மாசிமகம், தைப்பூசம், திருக்கார்த்திகை.
மாவட்டம்
வேலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 8.00 மணி முதல் 12 மணி வரை
மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை

அருள்மிகு ஜலநாதேஸ்வரர் திருக்கோவில்
தக்கோலம் அஞ்சல்
அரக்கோணம் வட்டம்
வேலூர் மாவட்டம்
PIN - 631151.
வழிபட்டவர்கள்
சம்வர்த்த முனிவர், காமதேனு, இந்திரன், சந்திரன், எமன், திருமால், பாண்டவர்கள், சப்த கன்னியர், உததி முனிவர், தீர்க்கத முனிவர்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் – 1 பதிகம், அருணகிரிநாதர்
நிர்வாகம்
இருப்பிடம்
அரக்கோணம் காஞ்சிபுரம் செல்லும் வழியில் தக்கோலம் கூட்ரோட்டில் இருந்து 4 கி.மி
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 244 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது    12 வது தலம்.


ஜலநாதீஸ்வரர் 



கிரிராஜ கன்னிகாம்பாள்


புகைப்படம் : தினமலர்

பாடியவர்          திருஞானசம்பந்தர்            
திருமுறை         1          
பதிக எண்         106          
திருமுறை எண்    7           

பாடல்

கறுத்த மனத்தினொடுங் கடுங்காலன்வந்தெய்துதலுங் கலங்கி
மறுக்குறு மாணிக்கருள மகிழ்ந்தா னிடம்வினவில்
செறுத்தெழு வாளரக்கன் சிரந்தோளு மெய்யுந்நெரிய வன்று
ஒறுத்தருள் செய்தபிரான் றிருவூறலை யுள்குதுமே.

பொருள்

(கோபம் கொண்டதால்) கறுத்த மனம் உடையவனாகிய காலன் தன் உயிரை பறிப்பதற்காக வரும் போது அது கண்டு கலங்கிய  மார்கண்டேயனுக்கு அருளியவனும், கோபத்தினால் சினம் கொண்டு வந்த வாள் வித்தையில் வல்லவனாகிய இராவணனின் தலை, தோள், உடல் ஆகியவற்றை நெரித்து அவனுக்கு அருள் செய்தவனுமாகிய சிவபெருமான் விரும்பி உறையும் இடம் திரு ஊறல் ஆகும். அதனை நாம் நினைவோமாக.

கருத்து

சினம் கொண்ட இருவருக்கு அவர்களின் சினம் அடக்கி அவர்களை ஆட்கொண்டு அருளிய திறம் இங்கு சிறப்பாக விளக்கப்படுகிறது.


பாடியவர்          திருஞானசம்பந்தர்            
திருமுறை         1          
பதிக எண்         106          
திருமுறை எண்    8           

பாடல்

நீரின் மிசைத்துயின்றோன் நிறைநான் முகனும்மறியா தன்று
தேரும் வகைநிமிர்ந்தான் அவன்சேரும் இடம்வினவில்
பாரின் மிசையடியார் பலர்வந் திறைஞ்சமகிழ்ந் தாகம்
ஊரும் அரவசைத்தான் திருவூறலை உள்குதுமே.

பொருள்

கடல் மீது துயில் கொள்ளும் திருமாலும், ஞானத்தினால் நிறைவுபெற்ற நான்முகனும் தேடி அறிய முடியாதவாறு நிமிர்ந்து நின்றவனும், இப்பரந்து பட்ட நில உலகில் அடியவர்கள் மகிழ்ந்து வணங்க தக்கதாகவும் பாம்பினை இடையில் கட்டியவனும் ஆகிய சிவபிரான் உறையும் இடம் திரு ஊறல் ஆகும். அதனை நாம் நினைவில் கொள்வோமாக.

கருத்து
·         நிறைநான் முகனும் - ஞானத்தால் நிறைவு பெற்றவன். முற்றிலும் உணர்ந்தவன்.
·         அரவம் - பாம்பு. கொடிய விலங்குகளும் அவனிடத்தில் அதன் தன்மைகளை இழந்து விடும். மற்றொரு பொருள் யோக மார்க்கத்தில் இருப்பவன்.
·         உள்குதல் - உள் முகமாக நினைத்தல்

இக் கோயில் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்.