Wednesday, May 4, 2016

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் – 2



(
இந் நிகழ்வுகள் மகாபாரதம் அனுசாஸன பர்வத்தில் இடம் பெற்றுள்ளவை
தொடக்கம் 204 அத்யாயம்.

கூடி இருக்கும் ரிஷிகள் கிருஷ்ணரை பார்த்து 'உலகில் ஆச்சரியமானது ஒன்றை நீங்கள் கண்டிருந்தாலும்கேட்டிருந்தாலும் அதை உரைக்க வேண்டும்என்றனர்.

'நான் மானிட வடிவத்தில் இருப்பதால் எதுவும் உரைப்பதிற்கு இல்லைஅதனால் என் அறிவும் வரையறைக்கு உட்பட்டது என்றார்.

எனவே ரிஷிகள் அனைவரும் நாரதரே உக்கிரமான தவம் உடையவர்கிருஷ்ணருக்கு அன்பானவர்பழைய சரித்திரங்கள் அனைத்தும் அறிந்தவர் என்று நிச்சயித்து அவரை அணுகினார்கள்

அவர் உமா மகேஷ்வர ஸம்வாதம் குறித்து சொல்லத் தொடங்கினார்.

)

        உமை  வேறு வாகனங்கள் இருக்கையில் நீங்கள் ஏன் ரிஷபத்தை வாகனமாக கொண்டுள்ளீர்கள்?

சிவன்  : முன் சிருஷ்டியில் பசுக்கள் வெள்ளை நிறமுடையனவாக இருந்தன. அப்போது உலக நன்மைக்காக ஒற்றைக்காலில் நின்று தவம் செய்து கொண்டு இருந்தேன். அப்போது அந்த பசுக்கள் நான் இருந்த இடம் வந்து அந்த இடத்தை இடித்தன. அதனால் கோபம் கொண்டு அப்பசுக்களை எரித்துவிட்டேன். அதில் இந்த ரிஷபம் தன் தவறை உணர்ந்து என்னிடம் வேண்டிக் கொண்டது.

அது முதல் பசுக்கள் அடக்க உள்ளவைகளாகவும், பல நிறமுடையவைகளாகவும் ஆயின. சாபம் விலக்கப்பட்டதால் இப் பசு மாத்திரம் வெள்ளை நிறமுடையதாகவும், எனக்கு வாகனமாகவும் ஆனது.அதனால் தேவர்கள் என்னை பசுபதியாகச் செய்தனர்.

உமை  மங்களகரமான வீடுகளும், அதில்  அழகிய விலங்குகளும் பிராணிகளும் இருக்கையில் நீர் ஏன் மயிர்களாலும், எலும்புகளாலும் அருவருக்கத்தக்க மண்டை ஓடுகள் நிரம்பியதும் , நரிகளும் கழுகளும் சேர்ந்திருக்கும் பிணப்புகையினால் மூடப்பட்டதுமான மிகக் கொடிய பயங்கரமான மயானத்தில் சந்தோஷமாக இருக்கீறீர்? அது எதனால் என்று எனக்கு சொல்லக் கடவீர்.

சிவன்  : முன்னொரு யுகத்தில் வெகு சுத்தமான இடத்தை நான் தேடி அடைந்த போது சுத்தமான இடம் கிடைக்கவில்லை. அப்போது பூதசிருஷ்டி உண்டானது. கொடிய கோரப்பற்களை உடைய பிசாசுகளும், பிற உயிர்களை கொன்று உண்ணும் பூதங்களும் உலகம் எங்கும் திரிந்தன. இவ்வாறு பிராணிகள் இல்லாததால் உலகை இப் பூதங்களிடம் இருந்து காப்பதற்காக பிரம்ம தேவர் இப் பூத, பிசாசங்களை அழிக்குமாறு வேண்டிக் கொண்டார். பிராணிகளின் நன்மைக்காக நான் இதை ஏற்றிக் கொண்டேன்.

இம் மயானத்தை விட பரிசுத்தமான இடம் வேறு எதுவும் இல்லை. மனித சஞ்சாரம் இல்லாததால் இம் மயானம் மிகப் புனிதமானது. எனவே பூதங்களை மயானத்தில் நிறுத்தினேன். அவைகளை விட்டுப் பிரிய மனம் இல்லை. எனவே தவம் செய்பவர்களும், மோட்சத்தை விரும்புவர்களும் பரிசுத்தமான இம் மயானத்தை விரும்புகிறார்கள். வீரர்களில் இடமாக இருப்பதால இதை நான் எனது இடமாகக் கொண்டேன்.

காலைப் பொழுதிலும், அந்தி சந்தியிலும், ருத்ர தேவதையான திருவாதிரை நட்சத்திரத்திலும் தீர்க்க ஆயுளை விரும்புவர்கள் செல்லக் கூடாது. இன்னும் என்ன கேட்க விரும்புகிறாய்?

உமை  உமது நிறம் செம்மட்டை நிறமானதும் விகாரமும் பயங்கரமானதும் சாம்பல் பூசப்பட்டதாகவும் விகாரமான கண்கள் உடையதாகவும் கூரான கோரைப்பற்கள் உடையதாகவும் ஜடை உடையதாகவும் புலியின் தோல் உடுத்தியதாகவும் உமது நிறம் செம்மட்டை நிறமானதும் விகாரமும் பயங்கரமானதும் சாம்பல் பூசப்பட்டதாகவும் விகாரமான கண்கள் உடையதாகவும் கூரான கோரைப்பற்கள் உடையதாகவும் ஜடை உடையதாகவும் புலியின் தோல் உடுத்தியதாகவும் இருப்பது ஏன்?

தொடரும்..
                           
                               *வாருணை  - மதிமண்டலத்தில் ஊறும் அமுதம்

               புகைப்படம் : இணையம்

Monday, May 2, 2016

சைவத் திருத்தலங்கள் 274 – திருஅச்சிறுபாக்கம்


தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் –

இறைவன் சுயம்பு மூர்த்தி, சதுரமான ஆவுடையார்
இரண்டு மூலவர்கள் சந்நிதி (அரசரை ஆட்கொண்ட இறைவனுன் உமையாட்சீஸ்வரர், திரிநேத்ரதாரி  முனிவரை ஆட்கொண்ட இறைவன் ஆட்சீஸ்வரர் சந்நிதி)
வித்யுந்மாலி, தாருகாட்சன், கமலாட்சன் என்ற மூன்று அசுரர்களின் கோட்டைகளான பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றை தகர்க்க பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களையும் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய சந்திரர்களை சக்கரங்களாக்கி மற்ற எல்லா உலகப் படைப்புகளையும் போர் புரிவதற்கான ஒவ்வொரு உறுப்பாகி புறப்பட்ட இடம். அந்த நேரத்தில் வினாயகரை மறந்தால் அச்சு முறிந்து, பின் தவறை உணர்ந்து அவரை வழிபட வினாயகர் அச்சினை சரிசெய்த இடம்
சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகனும், வித்யுன்மாலியும் துவார பாலகர்கள்
அகத்தியருக்கு திருமணக் காட்சி அளித்தத் தலம்
அச்சுமுறி விநாயகர்"  கோவிலுக்கு வெளியே தனி சந்நிதியில் மேற்கு நோக்கி அமர்ந்த காட்சி
பிரமகபால மாலையுடன் பைரவர் காட்சி
திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலம்,திருநாவுக்கரசரின் ஷேத்திரக் கோவையால் குறிப்பிடப்பட்ட தலம்
சரக்கோன்றை மரத்தடியில் பாண்டிய மன்னன் ஒருவனுக்கு ஈசன் காட்சி அளித்தத் தலம்
சித்தர்களின் அருளாணைப்படி பழனிச்சாமி முதலியார் என்பரால் அமைக்கப்பட்ட ஆறுமுகவேலவரின் திருக்கரத்தில் உள்ள வெள்ளியால் செய்யப்பட்ட பழனி ஆண்டவர் சத்ருசங்காரச் சக்கரம்  பொறிக்கப்பட்ட வேலாயுதம்

தலம்
அச்சிறுபாக்கம்
பிற பெயர்கள்
அச்சுஇறுபாகம்
இறைவன்
ஆட்சிபுரீஸ்வரர், உமைஆட்சீஸ்வரர், எமையாட்சீசர் (அச்சேஸ்வரர், அச்சு கொண்டருளிய தேவர்), பார்க்கபுரீஸ்வரர், ஆட்சீஸ்வரர், ஆட்சிகொண்டநாதர், ஸ்திரவாசபுரீஸ்வரர், முல்லைக்கானமுடையார்
இறைவி
இளம்கிளி அம்மை, உமையாம்பிகை, சுந்தரநாயகி, பாலாம்பிகை, மெல்லியலாள், அதிசுந்தரமின்னாள்.
தல விருட்சம்
சரக்கொன்றை
தீர்த்தம்
தேவ தீர்த்தம், சூரிய தீர்த்தம், சங்கு தீர்த்தம், சிம்ம தீர்த்தம்
விழாக்கள்


மாவட்டம்
காஞ்சிபுரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

அருள்மிகு ஆட்சீஸ்வரர் சுவாமி திருக்கோவில்
அச்சிறுபாக்கம் அஞ்சல்
மதுராந்தகம் வட்டம்
காஞ்சீபுரம் மாவட்டம்
PIN - 603301
வழிபட்டவர்கள்
கண்வ முனிவர், கௌதம முனிவர், திரிநேத்ரதாரி முனிவர்
பாடியவர்கள்
அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் - 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
மேல்மருவத்தூரில் இருந்து 4 கி.மி
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 271 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் 29  வது தலம்.

ஆட்சீஸ்வரர்


இளங்கிளி அம்மை


புகைப்படம் : தினமலர்


பாடியவர்           திருஞானசம்பந்தர்         
திருமுறை         1                     
பதிக எண்          077        
திருமுறை எண்    8         

பாடல்

கச்சுமொள்வாளுங் கட்டியவுடையர் கதிர்முடிசுடர்விடக் கவரியுங்குடையும்
பிச்சமும்பிறவும் பெண்ணணங்காய பிறைநுதலவர்தமைப் பெரியவர்பேணப்
பச்சமும்வலியுங் கருதியவரக்கன் பருவரையெடுத்ததிண் டோள்களையடர்வித்
தச்சமுமருளுங் கொடுத்தவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.


பொருள்

இத்தலத்து இறைவன், இறைவர் ஒளி பொருந்திய வாளைக் கச்சிலே பொருத்தி இடையில் ஆடையாகக் கட்டியுள்ளவர், ஒளி பொருந்திய முடி சுடர்விடக்கவரி, குடை, பீலிக்குஞ்சம் முதலியவற்றோடு பெண்களைக் கவரும் பிறை மதியை முடியிற்சூடி விளங்குபவர்.பெருமை உடைய அடியவர் தம்மை விரும்பி வழிபடுமாறு, தம் அன்பு வலிமை ஆகியவற்றைக் கருதித்தன்னைப் பெரியவனாக எண்ணிப் பெரிய கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் தோள்களை அடர்த்து அவனுக்குத் தம்பால் அன்பையும் அருளையும் கொடுத்த எம் அடிகள் ஆவார். அப்படிப்பட்ட இறைவன் அச்சிறுபாக்கத்தில் உறையிம் ஆட்சிபுரிஸ்வரர் ஆவார்



பாடியவர்           திருஞானசம்பந்தர்         
திருமுறை         1                     
பதிக எண்          077        
திருமுறை எண்    9  

பாடல்

நோற்றலாரேனும் வேட்டலாரேனு நுகர்புகர்சாந்தமொ டேந்தியமாலைக்
கூற்றலாரேனு மின்னவாறென்று மெய்தலாகாததொ ரியல்பினையுடையார்
தோற்றலார்மாலு நான்முகமுடைய தோன்றலுமடியொடு முடியுறத்தங்கள்
ஆற்றலாற்காணா ராயவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.

பொருள்

அச்சிறுபாக்கத்தில் உறையும் ஆட்சீஸ்வரர் தவம் செய்பவராக இல்லாவிட்டாலும், பிறரிடத்தில் அன்பு செய்பவராக இல்லாவிட்டாலும், வாசனை தரும் சந்தனமுடன் கையினில் மாலை ஆகிய முறைகளில் வழிபாடு செய்யாதவராக இருப்பினும் இவர் இவ்வாறானவர் எனப் பொருள் கொள்ளார். அறியமுடியாத தன்மையும் அடைய முடியாத அருமையும் உடைய இயல்பினராய் மாலும் நான்முகனும் பன்றியும் அன்னமுமாய்த் தோன்றி அடியையும் முடியையும் தங்கள் ஆற்றலால் காண இயலாதவாறு உயர்ந்து நின்றவர் எம்அடிகள்.

கருத்து

·         தவம் செய்வதும், மாலைகளுடன் பூசை செய்தலும் எதிர் எதிர் நிகழ்வுகள், ஒன்று புறப்பூசை, மற்றொன்று அகப்பூசை. இறைவன் இரண்டையும் கடந்தவர்.

·         நோற்றலார் - தவஞ்செய்யாதவர். வேட்டலார் - யாகஞ் செய்யாதவர்கள்

Wednesday, April 27, 2016

வாருணை ஈசனும் ஒளியுறு உமையும் - 1


(
இந் நிகழ்வுகள் மகாபாரதம் அனுசாஸன பர்வத்தில் இடம் பெற்றுள்ளவை
தொடக்கம் 204 அத்யாயம்.

கூடி இருக்கும் ரிஷிகள் கிருஷ்ணரை பார்த்து 'உலகில் ஆச்சரியமானது ஒன்றை நீங்கள் கண்டிருந்தாலும்கேட்டிருந்தாலும் அதை உரைக்க வேண்டும்என்றனர்.

'நான் மானிட வடிவத்தில் இருப்பதால் எதுவும் உரைப்பதிற்கு இல்லைஅதனால் என் அறிவும் வரையறைக்கு உட்பட்டது என்றார்.

எனவே ரிஷிகள் அனைவரும் நாரதரே உக்கிரமான தவம் உடையவர்கிருஷ்ணருக்கு அன்பானவர்பழைய சரித்திரங்கள் அனைத்தும் அறிந்தவர் என்று நிச்சயித்து அவரை அணுகினார்கள்

அவர் உமா மகேஷ்வர ஸம்வாதம் குறித்து சொல்லத் தொடங்கினார்.
)

உமை : பகவானே உமது கீழ்திசை முகம் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறதே, வடக்கு மற்றும் மேற்கு திசை முகங்கள் பார்க்க அழகாக இருக்கிறது, தென் திசை முகம் ஜடைகளால் மூடப்பட்டு பயங்கரமாக இருக்கிறது அது ஏன்?

சிவன்    : கிழக்கில் உள்ள முகம் எப்பொழுதும் தவம் செய்து கொண்டிருக்கும்; தென் திசை முகம் பிரஜைகளை(உயிர்களை) சம்ஹாரம் செய்யும். மேற்கு திசை முகம் எப்பொழுதும் ஜனங்களின் காரியங்களை கவனித்துக் கொண்டிருக்கும். வட திசை முகம் எப்பொழுதும் வேதம் ஓதிக் கொண்டிருக்கும். இதன் காரணமாகவே வெவ்வேறு திசை முகங்கள் வெவ்வேறு விதமாக இருக்கிறது. இன்னும் என்ன கேட்க விரும்புகிறாய்?

உமை :    உமது கழுத்து மயில் போன்று கரு நீலம் உடையாதாக இருப்பது எதனால்?  

சிவன்  : முன்னொரு யுகத்தில் தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த பொழுது எல்லா உலகங்களையும் அழிக்கும் விஷம் உண்டாயிற்று. தேவர்கள் முதலானவர்கள் அதைக் கண்டு அஞ்சினர். லோகத்தின் நன்மைக்காக அந்த விஷத்தை நான் அருந்தினேன். அதனானே தான் என் கழுத்து நீல நிறமானது, அதனாலே எனக்கு நீல கண்டன் என்ற பெயர் ஏற்பட்டது. இன்னும் என்ன கேட்க விரும்புகிறாய்?


உமை அனேக ஆயுதங்கள் இருக்க நீர் ஏன் பினாகத்தை வைத்து கொள்ள கருதுவது ஏன்?

சிவன்  : முன்னொரு காலத்தில் கண்வர் என்னும் மகரிஷி ஒருவர் இருந்தார். கடுமையாக தவம் செய்ததன் காரணமாக அவர் தலையில் நாளடைவில் புற்று உண்டானது.அதிலிருந்து மூங்கில் முளைத்தது.  அதனை பொறுத்துக் கொண்டு அவர் தனது தவத்தினை தொடர்ந்து செய்து வந்தார். தவத்தினால் பூஜிக்கப்பட்ட பிரம்ம தேவர் அவருக்கு வரம் அளித்து பின் அந்த மூங்கிலை எடுத்து வில்லாக செய்தார். என்னிடத்திலும் விஷ்ணுவிடத்திலும் சாமர்த்தியம் இருப்பதை அறிந்து இரண்டு வில் செய்து எங்களிடம் அளித்தார். பினாகம் என்பது என் வில். சார்ங்கம் என்பது விஷ்ணுவின் வில். அவ்வாறு செய்தது போக மீதமிருந்த மூங்கிலையும் வில்லாக செய்தார். அதுவே காண்டீவம். குற்றம் அற்றவளே, இந்த ஆயுதங்களின் வரலாற்றை உனக்குச் சொன்னேன், இன்னும் என்ன கேட்க விரும்புகிறாய்?

உமை வேறு வாகனங்கள் இருக்கையில் நீங்கள் ஏன் ரிஷபத்தை வாகனமாக கொண்டுள்ளீர்கள்?

தொடரும்

*வாருணை  - மதிமண்டலத்தில் ஊறும் அமுதம்
புகைப்படம் : இணையம்