Thursday, January 21, 2016

சைவத் திருத்தலங்கள் 274 – திருமாற்பேறு

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் - திருமாற்பேறு

• மூலவர்  - தீண்டாத் திருமேனி(பார்வதியால் விருதசீர நதிக்கரையில் அமைக்கப்பட்டது)
• ததிசி முனிவரை கொல்ல திருமால் ஏவிய சக்ராயுதம், முனிவரின் தெய்வீக தன்மையால் செயலிழத்தல், அதன் பொருட்டு சக்ராயுதம் பெற ஆயிரம் இதழ் தாமரைகளால் பூசை செய்தல், இறைவன் அருளால் ஒரு தாமரை மறைதல், திருமால் தனது கண்களை தாமரையாக மாற்றி பூசித்தல். அக்காரணம் பற்றி திருமால் பார்வையும் சக்ராயுதமும் பெறுதல்.
• திருமாலின் உற்சவத் திருமேனி -  ஒரு கையில் தாமரை மலர், மறு கையில் 'கண்',  நின்ற திருக் கோலம்
• வல்லபை விநாயகர் -  பத்துக் கரங்களுடன் காட்சி
• நந்தி எம்மான் நின்ற திருக்கோலம்

• முன் காலத்தில் கடவுளர்களுக்கு மாலைகள் - வெள் எருக்கு மலர்கள் (கோயிலுக்கு அருகில் உள்ளது)


தலம்
திருமாற்பேறு
பிற பெயர்கள்
ஹரிசக்கரபும், திருமால்பூர், மாற்பேறு
இறைவன்
மணிகண்டீஸ்வரர், தயாநிதீஸ்வரர், பிரவாளேஸ்வரர், சாதரூபர், பவளமலையார், வாட்டந்தவிர்த்தார், மால்வணங்கீசர்.
இறைவி
அஞ்சனாட்சி, கருணாம்பிகை
தல விருட்சம்
வில்வம்
தீர்த்தம்
சக்கர தீர்த்தம்
விழாக்கள்
மாசிமாதம் நடக்கும் 10 நாள் பிரமோற்ஸவத்தில் மகம் நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி
(பெருமாளுக்குரிய கருட சேவை),ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், ஆனித்திருமஞ்சனம், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை
மாவட்டம்
வேலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை,

அருள்மிகு மணிகண்டேஸ்வரர் திருக்கோயில்
திருமால்பூர் -அஞ்சல் - 631 053
அரக்கோணம் வட்டம்
வேலூர் மாவட்டம்.
04177 - 248220, 09345449339
வழிபட்டவர்கள்
திருமால், சந்திரன்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் 2 பதிகங்கள், ,திருநாவுக்கரசர் 4 பதிகங்கள். சுந்தர மூர்த்தி நாயனார் இத்தலத்திற்கு எழுந்தருளி உள்ள குறிப்பு பெரிய புராணத்தில் இருக்கிறது. ஆனால் பதிகங்கள் கிடைக்கவில்லை
நிர்வாகம்
இருப்பிடம்
அரக்கோணம் - காஞ்சிபுரம் இருப்புப் பாதையில் இத்தலம் அமைவிடம்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 243 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது  11 வது தலம்.

மணிகண்டீஸ்வரர்


அஞ்சனாட்சி


புகைப்படம் : தினமலர்

பாடியவர்          திருஞானசம்பந்தர்            
திருமுறை         1          
பதிக எண்         55          
திருமுறை எண்    8           

பாடல்

அரச ளிக்கும் அரக்கன் அவன்றனை
உரைகெ டுத்தவன் ஒல்கிட
வரமி குத்தவெம் மாற்பேற் றடிகளைப்
பரவி டக்கெடும் பாவமே.

பொருள்

இலங்கையினை ஆளும் இராவணனின் புகழ் கெடுமாறு செய்து, அவன் தனது பிழையினை உணர்ந்தபின் அவன் விரும்பி வேண்டிய வரங்களை அளித்த எமது திருமாற்பேறு பெருமானின் திருவடிகளை வணங்க பாவங்கள் கெடும்.

கருத்து



பாடியவர்            திருநாவுக்கரசர்        
திருமுறை           5        
பதிக எண்           59       
திருமுறை எண்      10        

பாடல்

நாடி நாரணன் நான்முக னென்றிவர்
தேடி யுந்திரிந் துங்காண வல்லரோ
மாட மாளிகை சூழ்தில்லை யம்பலத்
தாடி பாதமென் நெஞ்சு ளிருக்கவே.

பொருள்

எம் பெருமான் ஈசனை திருமாலும், பிரம்மனும் முறையே திருவடியினையும், வானில் பறந்தும் காண இயலாதவர்களாக ஆயினர். மாட மாளிகைகள் சூழ்ந்த தில்லை அம்பலத்தாடுவான் திருவடிகள் அன்பால் நெஞ்சினில் நிறைந்திருக்கும்.

கருத்து

இறைவனை அகத்தே காணவேண்டும் என்பதை இது காட்டுகிறது.



Reference

காஞ்சிப் புராணம்

பதிகங்கள்:

ஊறியார்தரு -1 -55 திருஞானசம்பந்தர்
குருந்தவன் -1 -114 திருஞானசம்பந்தர்
மாணிக்குயிர் -4 -108 திருநாவுக்கரசர்
பொருமாற் -5 -59 திருநாவுக்கரசர்
பாரானைப் -6 -80 திருநாவுக்கரசர்

(இக் கோயில் பற்றி மேலும் விபரம் தெரிந்தால் தெரியப்படுத்தவும்)

Monday, January 18, 2016

சைவத் திருத்தலங்கள் 274 – திருவல்லம்


·   மூலவர் - சுயம்புத் திருமேனி,; சதுரபீட ஆவுடையார்.
·   மூலவர் கருவறை அகழி அமைப்புடையது; கருவறைச் சுவர்கள் நிறைந்த கல்வெட்டுக்கள்
·   இறைவன், தீர்த்தத்தின் பொருட்டு, 'நீ, வா' என்றழைக்க, இந்நதி அருகில் ஓடிவந்து பாய்ந்ததால் நதியின் பெயர்  'நீ வா ' நதி. தற்போதைய பெயர்  'பொன்னை' ஆறு
·   பாம்புப் புற்றுக்குப் பசு நாள்தோறும் பாலைச் சொரிந்து வழிபட புற்று கரைந்து சிவலிங்கம் தோன்றியது என்றும் ஒரு நம்பிக்கை
·   மூலஸ்தான விமானத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் தனித்தனியே திருவுருவங்கள்
·   இறைவனுக்கு கஞ்சன் மலையில் இருந்து அபிஷேக நீர் கொண்டு வரும் அர்ச்சகரை தொல்லை செய்ததற்காக  கஞ்சனை நந்தி எப்பெருமான் பாகங்களாக கிழித்தல்
·   அதன் பொருட்டு அவன் மீண்டும் வராமல் இருக்க வாசல் நோக்கிய நந்தி
·   உக்கிர வடிவிலிருந்த இந்த அம்பாளை ( 'தீக்காலி அம்பாள்' (ஜடாகலாபாம்பாள்)), சாந்தப்படுத்தியது ஆதி சங்கரர்.
·   விநாயகர் சிவபெருமானைச் சுற்றிவந்து அற்புத மாங்கனியை இத்தலத்தில் பெற்ற சிறப்புடையது இத்தலம். தல வினாயகர் 'கனி வாங்கிய வினாயகர்' கையில் மாங்கனியுடன்
·   இறைவனருளால்  காஞ்சனகிரியில்(கஞ்சன் மலை) அசுரனின் குருதி பட்ட இடத்திலெல்லாம் அவ்விடத்தைப் புனிதப்படுத்த சிவலிங்கங்கள் உண்டாயின
·   வலது துவாரபாலகர் அழகிய புன்னகையுடன் கூடிய திருமுகம்
·   இங்குள்ள பெருமானை விஷ்ணு வழிபட்டதால், விஷ்ணுவின் பாதம் பத்மபீடத்தில் கொடிமரத்தின் முன்பு
·   சனகாதி முனிவர்களில் ஒருவரான சனகரின் ஜீவ சமாதி அமைந்துள்ள இடம்
·   ஒளவையார் நெல்லிக்கனியைப்  பெற்ற தலம்
·   சிவானந்த மௌனசுவாமிகள் தலம்



தலம்
திருவல்லம்
பிற பெயர்கள்
திருவலம், வில்வவனம்,வில்வாரண்யம், தீக்காலி வல்லம்
இறைவன்
வில்வநாதீஸ்வரர், வல்லநாதர்.
இறைவி
தனுமத்யாம்பாள், வல்லாம்பிகை.
தல விருட்சம்
வில்வம்
தீர்த்தம்
நீவாநதி, கௌரி தீர்த்தம்
விழாக்கள்
பிரம்மோற்சவம்
மாவட்டம்
வேலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 12 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

அருள்மிகு வில்வ நாதேஸ்வரர் திருக்கோவில்
திருவலம் அஞ்சல்
வழி இராணிப்பேட்டை
காட்பாடி வட்டம்
வேலூர் மாவட்டம்
PIN - 632515
சிவாச்சாரியார் உமாபதி - 9894922166, 0416 – 2236088, சிவன் 9245446956
வழிபட்டவர்கள்
கௌரி, மஹாவிஷ்ணு, சனகமுனிவர்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர்
நிர்வாகம்
இருப்பிடம்
சென்னை - காட்பாடி ரயில் பாதையில் உள்ள திருவல்லம் ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மி.

ஆற்காட்டிலிருந்து ராணிப்பேட்டை வழியாக காட்பாடி செல்லும் சாலையில் இத்தலம் உள்ளது.
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 242 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது  10 வது தலம்.


வில்வநாதீஸ்வரர்




வல்லாம்பிகை



புகைப்படம் : தினமலர்

பாடியவர்                திருஞானசம்பந்தர்            
திருமுறை               1      
பதிக எண்                113  
திருமுறை எண்          8     

பாடல்

இகழ்ந்தரு வரையினை எடுக்கலுற்றாங்
ககழ்ந்தவல் லரக்கனை அடர்த்தபாதம்
நிகழ்ந்தவர் நேடுவார் நேடச்செய்தே
திகழ்ந்தவன் உறைவிடந் திருவல்லமே.


பொருள்

கையிலை மலையை இகழ்ந்து பேசி அதை எடுத்து அப்புறப்படுத்தலின் பொருட்டு முயன்ற இராவணனை அடக்கிய திருவடியை உடையவனும், திருவடியை உண்மை பொருளாக உடைய அன்பர்கள் தேடி வருந்தும் அவர்கள் உள்ளத்தில் திகழ்பவனும் ஆகிய சிவபெருமான் உறையும் தலம் திருவல்லமாகும்.

கருத்து

அடந்த திருவடி -  மிகப்பெரிய திருவடி


பாடியவர்                திருஞானசம்பந்தர்            
திருமுறை               1      
பதிக எண்                113  
திருமுறை எண்          9     

பாடல்

பெரியவன் சிறியவர் சிந்தைசெய்ய
அரியவ னருமறை யங்கமானான்
கரியவ னான்முகன் காணவொண்ணாத்
தெரியவன் வளநகர் திருவல்லமே.

பொருள்

பெரியவனும்(எல்லாவற்றிலும், எல்லாரிலும்), அறிவில் சிறந்தவர்களால் சிந்தித்து அறிய இயலாதவனும், அரிய வேதங்கள் மற்றும் அதன் அங்கங்களும் ஆனவனும், கரிய நிறமுடைய திருமால் மற்றும் பிரம்மா ஆகியவர்களால் காணப்படா முடியாதவனும், அன்பில் சிறந்தவர்களால் காணக்கூடியவனும் ஆகிய சிவன் உறையும் நகர் திருவல்லமாகும்

கருத்து

தெரியவன் - தெரியநிற்பவன். பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு தெரிபவன்.


இக் கோயில் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்.



Wednesday, January 13, 2016

சைவத் திருத்தலங்கள் 274 – திருப்பனங்காடு

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் - திருப்பனங்காடு

·   அகத்தியர் தான் ஸ்தாபித்த ஈசன் தாலபுரீஸ்வரருக்கு பனம்பழம் படைத்து வழிபட்டதால் பனைமரமே தல விருட்சம்.  இதனாலேயே இறைவன் தாளபுரீஸ்வரர் என்கிற பனங்காட்டீர்
·   அகத்தியர் பூசித்தபோது, இறைவன் சடாமுடியிலுள்ள கங்கை, தீர்த்தமாக வெளிப்பட்டதால் இது  சடாகங்கை தீர்த்தம்
·   அகத்திய முனிவரின் சீடரான புலத்தியர்  ஸ்தாபித்து வழிபட்து  கிருபாநாதேஸ்வரர்
·   சுந்தரருக்கு உண்ண உணவும் பருக நீரும் கொடுத்த இடம்
·   வடலூர் வள்ளற்பெருமானின் வாக்கிலும், பட்டினத்தடிகளின் திருவேகம்பர் திருவந்தாதியிலும் இத்தலம் குறிக்கப்பட்டுள்ளது
·   உள் மண்டபத்தில் கல் தூண்களில் மிக அரிய சிற்பங்கள் - நாகலிங்கம் சிற்பம், ராமர் சிற்பம், வாலி - சுக்ரீவர் போரிடும் சிற்பம். இராமர் சிற்பத்திடம் நின்று பார்த்தால் வாலி சுக்ரீவ போர்ச்சிற்பம் தெரியும்; ஆனால் வாலி சுக்ரீவ சிற்பத்தின் பார்வைக்கு இராமர் சிற்பம் தெரியவில்லை.

·   கஜப்பிரஷ்ட விமான அமைப்பு


தலம்
திருப்பனங்காடு
பிற பெயர்கள்
வன்பார்த்தான் பனங்காட்டூர், திருவன் பார்த்தான் பனங்காட்டூர், திருப்பனங்காடு
இறைவன்
தாளபுரீஸ்வரர் (பனங்காட்டீஸ்வரர்), கிருபாபுரீஸ்வரர், சோமாஸ்கந்தர்
இறைவி
கிருபாநாயகி, அமிர்தவல்லி
தல விருட்சம்
பனை
தீர்த்தம்
ஜடாகங்கை தீர்த்தம், சுந்தரர் தீர்த்தம்
விழாக்கள்
மாவட்டம்
திருவண்ணாமலை
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 7 மணி முதல் 12 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

அருள்மிகு தாளபுரீஸ்வரர் திருக்கோவில்
திருப்பனங்காடு அஞ்சல்
வழி வெம்பாக்கம்
செய்யாறு வட்டம்
திருவண்ணாமலை மாவட்டம்
PIN – 604410
044-2431 2801, 98435 68742
வழிபட்டவர்கள்
அகஸ்தியர், புலஸ்தியர், கண்வ முனிவர்
பாடியவர்கள்
சுந்தரர் - 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 7 கி.மி. வந்தவாசி சாலை ->  ஐயன்குளம் கூட்டுசாலை -> வலதுபுறம் திரும்பி சுமார் 7 கி.மி. நேராக செல்ல, திருப்பனங்காட்டூர் குறுக்கு சாலை சந்திப்பு  ->  வலதுபுறம் திரும்பி சுமார் 2 கி.மி. -> திருப்பனங்காடு கிராமம் -> ஆலயம்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 241 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   9  வது தலம்.
அம்பிகை, திருமால் மற்றும் சந்திரன் ஆகியவர்கள் வழிபட்ட தலம்

தாளபுரீஸ்வரர்



அமிர்தவல்லி



புகைப்படம் : தினமலர்

பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7ம் திருமுறை 
பதிக எண்                    086
திருமுறை எண்               7

பாடல்

மெய்யன்வெண் பொடிபூசும் விகிர்தன்வே தமுதல்வன்
கையின்மான் மழுவேந்திக் காலன்கா லம்மறுத்தான்
பைகொள்பாம் பரையார்த்த படிறன்றன் பனங்காட்டூர்
ஐயன்எங் கள்பிரானை அறியாதார் அறிவென்னே

பொருள்

மெய்ப் பொருளாய் இருப்பவனும், வெண்ணீற்றைப் பூசுகின்றவனும், மாறுபட்ட இயல்பினனும், வேதங்களுக்கு முதல்வனும், கையில் மான் மழுக்களை ஏந்துபவனும், காலனது காலத்தை இடைமுரிவித்தவனும், படத்தைக் கொண்ட பாம்பினை இடுப்பில் அணிந்தவனும் யாவர்க்கும் தலைவனும் ஆகி பனங்காட்டூரில் எழுந்தருளியிருக்கின்ற எங்கள் கள்ளப் பெருமானை அறியாதவரது அறிவுதான் என்னே !

கருத்து

காலன்கா லம்மறுத்தான் - காலங்களை ஆட்சி செய்யும் காலனையும் முடிவு செய்பவன்


பாடியவர்                     சுந்தரர்
திருமுறை                    7ம் திருமுறை 
பதிக எண்                    086
திருமுறை எண்               9


பாடல்

மழையானுந் திகழ்கின்ற மலரோனென் றிருவர்தாம்
உழையாநின் றவருள்க உயர்வானத் துயர்வானைப்
பழையானைப் பனங்காட்டூர் பதியாகத் திகழ்கின்ற
குழைகாதற் கடிமைக்கட் குழையாதார் குழைவென்னே

பொருள்

மேகம் போன்ற நிறத்தை உடைய திருமால், தாமரை மலர் மேல் இருப்பவராகிய பிரம்மன் ஆகிய இருவரும் பணி செய்கின்றவராய் நினைந்து நிற்க, உயர்ந்த வானத்தை விட உயராமாக இருப்பவனும், எல்லாரையும் விட மூத்தவனும், பனக்காட்டூரில் உறையும் பதியாகிய குழை அணிந்த காதுகளை உடைய பெருமானுக்கு அடிமையாய் தொண்டு செய்து மனம் குழையாதவர் மன நெகிழ்ச்சி தான் என்னே?


கருத்து

உயர் வானம் -  வானத்தினது இயல்பை கூறி  அதனினும் உயர்தல் என்றது
பழையானை - காலங்களுக்கு முற்பட்டு நிற்பதால் எல்லாரையும் விட மூத்தவன்

Ref :

1.
நிலாவு புகழ் திருவோத்தூர் திரு ஆமாத்தூர் நிறைநீர்
சுலாவு சடையோன் புலிவலம் வில்வலம் கொச்சை தொண்டர்
குலாவு திருப்பனங்காடு நன் மாகறல் கூற்றம் வந்தால்
அலாய் என்று அடியார்க்கு அருள்புரி ஏகம்பர் ஆலயமே."

(பட்டினத்தடிகள்)


(இக் கோயில் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Thursday, January 7, 2016

மகேசுவரமூர்த்தங்கள் 21/25 நீலகண்டர்




வடிவம்

•
 உருவத்திருமேனி
• இம் மூர்த்தம் சிவனின் அகோர மூர்த்தத்தை முன்னிருத்தியது.
• ஆலால நஞ்சை உண்டபின் கருங்கழுத்துடன் ஈசன் காட்சிதரும்  கோலம்
• முன்னிரு கரங்கள்  - அஞ்சல், அபயம் 
• பின்னிரு கரங்கள் -  மான்,  மழு
• திருமுடி - நிலவு 
• கரிய கழுத்து 
• உமையவள் அருகிருக்கும்  கோலம்
• நீல கண்டம் என்ற பெயரின் மீது கொண்ட காதலாலே திரு நீலகண்ட நாயனார் புகழ் பெற்றார்

வேறு பெயர்கள்

• கறைக்கண்டன்
• நீலகண்டன்
• விசாபகரண மூர்த்தி
• காலகண்டன்
• சிறீகண்டன்

வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்

• திருநீலக்குடி,கும்பகோணம்
• திருப்பைஞ்ஞீலி, திருச்சி வட்டம்
• நீலகண்டேசுவரர் கோவில், திருமண்ணிப்படிக்கரை (இலுப்பைப்பட்டு)
• கொண்டீசுவரர் கோயில்,சுருட்டப்பள்ளி
• பூடா நீல்கண்ட் கோயில் ,காட்மாண்டு, நேபாளம்
• நீலகண்டர் கோவில் ,ரிஷிகேஷ்


இதரக் குறிப்புகள்

மச்சபுராணம் கூர்ம புராணம், லிங்க புராணம், வாமன புராணம், பவிஷ்ய புராணம், மார்கண்டேய புராணம்



புகைப்படம் : இணையம்