Friday, January 3, 2014

முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் - 2

கந்தர் அலங்காரம்

தன் நிலை குறித்து புலம்பல்

1.
விளக்கம்

தோலால் சுவர் வைத்து - சுவர்கள் தோலால் எழுப்பப்பட்டிருக்கின்றன.
நாலாறு காலில் சுமத்தி - அவைகள் கால்களின் மேல் சுமத்தப்பட்டிருக்கின்றன.
இருகாலால் எழுப்பி - அவைகள் இருகாலால் எழுப்பபட்டிருக்கின்றன.
வளை முதுகோட்டி - அவற்றின் முதுகு வளைந்திருக்கிறது.
கைநாற்றி - கைகள் நாற்றப்பட்டிருக்கின்றன
நரம்பால் ஆக்கை இட்டு - அவைகள் நரம்பால் இணைக்கப்பட்டிருக்கின்றன.
தசை கொண்டு மேய்ந்த அகம் பிரிந்தால் - அவற்றின் மேற்கூரை தசையால் ஆக்கப்பட்டிருக்கிறது.
வேலால் கிரி துளைத்தோன் - முருகன்
அடித் தாளின்றி - பாதங்கள்

பாடல்

தோலாற் கவர்வைத்து நாலாறு காலிற் சுமத்தியிரு
காலா லெழுப்பி வளைமுது கோட்டிக்கைந் நாற்றிநரம்
பாலார்க்கை யிட்டுத் தசைகொண்டு மேய்ந்த அகம்பிரிந்தால்
வேலாற் கிரிதொளைத் தோனிடி தாளன்றி வேறில்லையே. 44


பொருள்
உடலின் இயல்புகளும் அவற்றின் அமைப்புகளும் விளக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட உடலில் உயிர் நீங்கும் போது முருகனின் அடித்தாள் அன்றி வேறு துணையில்லை.

கருத்து
நாலாறு காலில் சுமத்தி - அவைகள் கால்களின் மேல் சுமத்தப்பட்டிருக்கின்றன.
1.
4+6 = 10 (தச வாயுக்கள் என்றஒரு கருத்து உண்டு.உயிர்க்காற்று, மலக்காற்று, தொழிற்காற்று,ஒலிக்காற்று,நிரவுக்காற்று,விழிக்காற்று,இமைக்காற்று,தும்மல்காற்று,கொட்டாவிக்காற்று,வீங்கல்காற்று)

2.
சந்திரநாடி ,சூரியநாடி,நடுமூச்சு நாடி,உள்நாக்கு நரம்புநாடி,வலக்கண் நரம்புநாடி,இடக்கண் நரம்புநாடி,வலச்செவி நரம்புநாடி,இடதுசெவி நரம்புநாடி,கருவாய் நரம்புநாடி,மலவாய் நரம்புநாடி  என்று பத்து வித நாடிக்களை குறிப்பது உண்டு.
அதுவும் தவிர கீழ்கண்ட கருத்தும் உள்ளது.

3. ஆறு  ஆதாரங்களும் (மூலாதாரம், ஸ்வாதிஸ்டானம் ,மணிப்பூரகம் ,அனாகதம்,விசுத்தி , ஆக்ஞை ) அவற்றுடன் சேர்த்து அந்தக்கரணங்கள் 4ம் சேர்த்து(மனம், புத்தி, சித்தம் மற்றும் அகங்காரம்) 10 என்பாரும் உளர்.

உயிர் பிரியும் நேரத்தில் உற்ற துணையாக இருப்பது அவனது திருப்பாதங்களே என்கிறார் அருணகிரியார்.

நாற்றுதல் - நடுதல் என்ற பொருளில் வந்துள்ளது

2.
விளக்கம்
கதிதனை யொன்றையுங் காண்கின்றி லேன்  - வினைகளின் வழியாக வரும் உடலை நீக்கி உயர் பதம் பெற ஒரு வழியையும் காண்கிலேன்.
நதிதினை யன்னபொய் வாழ்விலன் பாய் - வாழ்வு நதியினை ஒத்து இருக்கிறது.
நரம் பாற்பொதிந்த பொதிதனை  - உடல் நரம்பால் ஆக்கப்பட்டிருக்கிறது.
திண்டாடு மாறெனைப் போதவிட்ட - என்னை திண்டாடுமாறு விட்ட
விதிதனை நொந்துநொந்து - இது விதியினால் நிகழ்த்தப்பட்டது அதனால் மனம் நொந்துவிடுகிறது.

என்மனம் வேகின்றதே - இதனால் என் மனம் வேகின்றது.

பாடல்

கதிதனை யொன்றையுங் காண்கின்றி லேன் கந்த வேல்முருகா
நதிதினை யன்னபொய் வாழ்விலன் பாய்நரம் பாற்பொதிந்த
பொதிதனை யுங்கொண்டு திண்டாடு மாறெனைப் போதவிட்ட
விதிதனை நொந்துநொந் திங்கேயென் றன்மனம் வேகின்றதே. 98

பொருள்


(கதி - நற்கதி) முக்தி பெறுவதற்கு உரிய ஒரு மார்கத்தையும் நான் அறியவில்லை. இவ்வாழ்வு நதியினை ஒத்து  பொய் வாழ்வாய் இருக்கிறது. நரம்பால் ஆக்கப்பட்டிருக்கிறது. அதனால் உடல் கட்டப்பட்டிருக்கிறது. விதி வசப்பட்டு  நிலையற்றவாழ்வால் மனம் நொந்து என் மனம் வேகின்றது.
கருத்து
தத்துவார்தமாக சொல்லும் போது நதியினை ஒரு குறியீடாக பயன்படுத்துவார்கள். காரணம் நதி பருவ காலங்களுக்கு உட்பட்டு தனது போக்கில் சென்று கொண்டிருக்கும். அது போல வினையின் காரணமாக உயிர்கள் பிறப்பெடுத்துக் கொண்டிருக்கும்.


அனைத்தும் வினையின் காரணமாக விதியாக உருவாகிறது. 'என் செயல் யாதொன்றும் இல்லை' என்ற பட்டினத்தாரின் வரிகள் நினைவு கூறத் தக்கது.

வேகின்றது என்ற பதம் இன்னும் முழுமை அடையவில்லை என்பதைக் குறிக்கிறது. இது அருணகிரியாருக்காக எழுதப்பட்டதல்ல. இது சாதாரண மக்களுக்காக எழுதப்பட்டது.

முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் - 1

No comments:

Post a Comment