Thursday, December 5, 2013

மற்று நான் பெற்றது..

வடதிருமுல்லைவாயில் எழுதப்பட்ட சுந்தரர் தேவாரம்.

செய்த சபதம் மறந்து சங்கிலி நாச்சியாரை விட்டு திருவொற்றியூர் எல்லையைக் கடந்ததால் சுந்தரர் இரு கண்களையும் இழக்கிறார். காஞ்சிபுரம் செல்லும் வழியில் வடதிருமுல்லைவாயில் வருகிறார்.

இத்திருத் தலத்தில் 10+1 பாடல்கள் பாடுகிறார்.

அனைத்துப் பாடல்களும்  அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே என்று முடிகின்றன.

இதில் ஒரு பாடல் மட்டும் இப்போது.



மற்று நான் பெற்றது ஆர் பெற வல்லார்? வள்ளலே! கள்ளமே பேசிக்
குற்றமே செயினும், குணம் எனக் கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன்;
செற்று மீது ஓடும் திரிபுரம் எரித்த திரு முல்லை வாயிலாய்! அடியேன்
பற்று இலேன்; உற்ற படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .

இப்பாடல் சாதாரண மனிதனை வைத்து எழுதப் பட்டதாகவே தோன்றுகிறது.

மற்று நான் பெற்றது ஆர் பெற வல்லார் - எனக்கு கிடைக்கப் பெற்றது யாருக்கு கிடைக்கும்.

வள்ளலே - பெறுபவரின் நிலை அறியாமல் விரும்பிய அனைத்தையும் கொடுக்கக் கூடியவன்.

கள்ளமே பேசிக் குற்றமே செயினும் - என் உள்ளம் கள்ளத் தன்மை உடையது, குற்றம் புரியக் கூடியது.

குணம் எனக் கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன் - இது எனது பிறவிக் குணம். ஆதலால் இன்னும் பல தீமைகள் புரிந்தேன்.

செற்று மீது ஓடும் திரிபுரம் எரித்த திரு முல்லை வாயிலாய் - செருக்கு கொண்டவர்களின் கர்வத்தை திரிபுர தகனமாக(மும் மல காரியம்) செய்தவனே

அடியேன் பற்று இலேன் - பற்றுவதற்கு எதுவும் இல்லாதவன்.

என்னுடைய துயரத்தை களைவாய்.

No comments:

Post a Comment