Saturday, December 21, 2013

முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் - 1

கந்தர் அலங்காரம்

நிலைலையாமைத் தத்துவம்

1.
வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவன வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே. 18

விளக்கம்
வடிவேலோனை வாழ்த்தி - வடிவேலனை வாழ்த்தி
வறியவர்கென்றும் - வறியவர்களுக்கு
நொய்யிற் பிளவேனும் - மிகக் குறைந்த அளவு
பகர்மின்கள் - பகிராதவர்கள்
வெய்யிற்கு ஒதுங்க உதவா - உதவாது என்பது துணிபு.
இவ் வுடம்பின் வெறு நிழல் போல் - இந்த உடம்பின் நிழல்
கையிற் பொருளும் உதவாது - கையில் இருக்கும் பொருள் உதவாது
காணும் கடை வழிக்கே - இவைகள் கடை நாள் வரையினில் உதவாது.

பொருள்
வடிவேலனை வாழ்த்தி, வறியவர்களுக்கு மிகக் குறைந்த அளவு பகிராதவர்கள் பொருள்கள்,கடைசி நாள் வரையினில் இந்த உடம்பின் நிழல் வெய்யிற்கு ஒதுங்க உதவாது போல உதவாது.

கருத்து
நொய்யிற் பிளவேனும் - அரிசி உடைபடும் போது அதில் கிடைக்கும் மிக சிறிய அளவு உணவு நொய்.  அதில் மிக சிறிய அளவு கூட கொடுக்காதவர்கள். (யாவருக்கும் உண்ணும் போது ஒரு கைப்பிடி என்ற திருமந்திரம் இங்கு நினைவு கூறத் தக்கது.
காணும் கடை வழிக்கே - காதற்ற ஊசியும்..... வாரது காணும் கடை வழிக்கே  என்ற பட்டினத்தாரின் பாடல் நினைவு கூறத் தக்கது.

2.

கோழிக் கொடிய னடிபணி யாமற் குவலயத்தே
வாழக் கருது மதியிலி காளுங்கள் வல்வினைநோய்
ஊழிற் பெருவலி யுண்ணவொட் டாதுங்க ளத்தமெல்லாம்
ஆழப் புதைத்துவைத் தால் வருமோநும் மடிப்பிறகே. 20

விளக்கம்
கோழிக் கொடியன் - அடி பணியாமல்
குவலயத்தே வாழ நினைக்கும் மதியிலி காள் - இந்த உலகத்தில் வாழ நினைக்கும் அறிவு அற்றவர்களே
வல்வினை நோய் - வினையாகிய நோய்
ஊழிப் பெருவலி - ஊழ் வினையில் காரணமான பெரும் வலி
அத்தம் - செல்வம் எல்லாம்
ஆழப் புதைத்து - ஆழப் புதைத்து வைத்தால்

பொருள்
கோழிக் கொடியை கொடியாக கொண்டிருக்கும் அவனது தாளினைப் பணியாமல்  இந்த உலகத்தில் வாழ நினைக்கும் அறிவு அற்றவர்களே, வினையாகிய நோய்யும், ஊழ் வினையில் காரணமான பெரும் வலியும் சேர்ந்து வருகையில் ஆழப் புதைத்து வைத்த செல்வம் அடுத்த பிறவியிலும் வருமோ(வராது என்பது துணிபு).

கருத்து
இறைவனை தலைவனாகவும், உயிர்களை தலைவியாகவும் வைத்துப் பாடுதல் மரபு. எனவே கோழிக் கொடியன் (சேவல் ஆண் - கோழி பெண்).
வல்வினை நோய் -  நோய் வலி தரக்கூடியது. அஃது ஒத்தே வினைகளும். மிக அதிக வினைகளின் காரணமாக வல்வினை
ஊழிப் பெருவலி - ஊழிப் பெருவலி  யாவுள என்ற குறள் இங்கு நினைவு கூறத் தக்கது.
அத்தம் - அத்தம் எல்லாம் குழைக்கும் என்ற அபிராமி அந்தாதி நினைவு கூறத் தக்கது.


Friday, December 20, 2013

முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும்

கந்தர் அலங்காரம்

கந்தனை, முருகனை, வடிவேலனை, சண்முகனை, கார்த்திகேயனை எப்படி பெயரிட்டு அழைத்தாலும் அழகு என்று பொருள் வரும் கடவுளை பாடல் வரிகளால் அழகு செய்து அலங்காரம் செய்யும் வரிகள்.

காப்புச் செய்யுளையும் சேர்த்து 108 பாடல்கள்.

கீழ் கண்ட தலைப்புகளில், தலைப்புக்கு 2 பாடல் என்று எழுத உள்ளேன்.






நிலைலையாமைத் தத்துவம்
தன் நிலை குறித்து புலம்பல்
சிவன்/பெருமாளின் மருமகன்
கம்பீரம்
தத்துவம்
காட்சி

நிலைலையாமைத் தத்துவம் தொடக்க நிலை
நிலைலையாமைத் தத்துவம் என்பது தன் நிலை குறித்து புலம்பல் ஏற்படுத்தும்.
அது சிவன்/பெருமாளின் சிந்தனைகளை ஏற்படுத்தும்.
சிந்தனைகள் கம்பீரம் ஏற்படுத்தும்
அதன் மூலம் தத்துவம் பிறக்கும்
காட்சி நல்கும்.

திருவருள் முன்னின்று நிற்கட்டும்.

Saturday, December 14, 2013

மார்கழிக் கோலம்

மார்கழிக் கோலம் எதற்கு.

ஆன்மீகம்
மார்கழி மாதம் பீடு உடைய மாதம். சைவத்திலும், வைணவத்திலும் அது பற்றி மிகவும் சிறப்பாக சொல்லப் பட்டிருக்கிறது. தேவர்களின் துவக்க நாள். அதனால் அதைக் கொண்டாடுகிறோம்.

அறிவியல்
1. மார்கழி மாதத்தில் அதிக அளவு ஆக்ஸிஜன் விடியற் காலையில் வெளிப்படும். அதை சுவாசிப்பதால் உடற் பிணிகள் நீங்கும்.

2. இறை வழிபாட்டிற்கு செல்வதால் மற்றவர்களோடு கலந்து பழக வாய்ப்பு வரும். இதனால் நீண்ட நாள் மனக் கசப்புகள் விலகும்.

3. இந்தக் காலங்களில் சிறு சிறு விலங்குகளுக்கு இரை தேடுதல் கடினம். அதை எளிமையாக்கும் வழி. (பூசணிப் பூ - கோல நடுவில்)

Click by : Gayu Venkat

Thursday, December 5, 2013

மற்று நான் பெற்றது..

வடதிருமுல்லைவாயில் எழுதப்பட்ட சுந்தரர் தேவாரம்.

செய்த சபதம் மறந்து சங்கிலி நாச்சியாரை விட்டு திருவொற்றியூர் எல்லையைக் கடந்ததால் சுந்தரர் இரு கண்களையும் இழக்கிறார். காஞ்சிபுரம் செல்லும் வழியில் வடதிருமுல்லைவாயில் வருகிறார்.

இத்திருத் தலத்தில் 10+1 பாடல்கள் பாடுகிறார்.

அனைத்துப் பாடல்களும்  அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே என்று முடிகின்றன.

இதில் ஒரு பாடல் மட்டும் இப்போது.



மற்று நான் பெற்றது ஆர் பெற வல்லார்? வள்ளலே! கள்ளமே பேசிக்
குற்றமே செயினும், குணம் எனக் கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன்;
செற்று மீது ஓடும் திரிபுரம் எரித்த திரு முல்லை வாயிலாய்! அடியேன்
பற்று இலேன்; உற்ற படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .

இப்பாடல் சாதாரண மனிதனை வைத்து எழுதப் பட்டதாகவே தோன்றுகிறது.

மற்று நான் பெற்றது ஆர் பெற வல்லார் - எனக்கு கிடைக்கப் பெற்றது யாருக்கு கிடைக்கும்.

வள்ளலே - பெறுபவரின் நிலை அறியாமல் விரும்பிய அனைத்தையும் கொடுக்கக் கூடியவன்.

கள்ளமே பேசிக் குற்றமே செயினும் - என் உள்ளம் கள்ளத் தன்மை உடையது, குற்றம் புரியக் கூடியது.

குணம் எனக் கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன் - இது எனது பிறவிக் குணம். ஆதலால் இன்னும் பல தீமைகள் புரிந்தேன்.

செற்று மீது ஓடும் திரிபுரம் எரித்த திரு முல்லை வாயிலாய் - செருக்கு கொண்டவர்களின் கர்வத்தை திரிபுர தகனமாக(மும் மல காரியம்) செய்தவனே

அடியேன் பற்று இலேன் - பற்றுவதற்கு எதுவும் இல்லாதவன்.

என்னுடைய துயரத்தை களைவாய்.